இங்கிலாந்தில் உள்ள பிரிம்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலையகத்தில் 2020-ம் ஆண்டின் சிறந்த காட்டுயிர் புகைப்படவியலாளர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிறந்த காட்டுயிர் புகைப்படவியலாளர்களுக்கான இந்த போட்டி 1965-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. 86 நாடுகளைச் சேர்ந்த 49,000 போட்டியாளர்கள் இந்த போட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவற்றில் முக்கியமான புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக இங்கே அளிக்கிறோம்.
1. சிவப்பு கால்களுடைய டக் குரங்கு
இந்தியாவைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்பவர் எடுத்த புகைப்படம். வடக்கு மற்றும் மத்திய வியட்நாமில் மட்டுமே காணப்படும் பழங்கால வகையைச் சேர்ந்த குரங்கு. இந்த வகை குரங்கை படம் எடுப்பதற்காகவே வியட்நாம் காட்டில் காத்திருந்து, அந்த குரங்கு திரும்பிப் பார்த்த போது எடுத்த புகைப்படம்.
2. சேற்றுக் குளத்திலிருந்து வெளியில் வரும் நீர்யானை
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் ஃப்ரகோசோ எடுத்த புகைப்படம். கென்யாவின் மாசாய் மாரா காட்டில் உள்ள சேற்றுக் குளத்திலிருந்து வெளியில் வரும் நேரத்தில் நீர்யானை கண்ணைத் திறந்து பார்க்கும் தருணத்தை அற்புதமாக படம் பிடித்துள்ளார். இந்த நீர்யானைகள் பொதுவாக சூரிய ஒளியிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பகல் நேரம் முழுவதும் சேற்றிலேயே ஒளிந்திருக்கும். இரவில் மட்டுமே வெளியில் வரும். அப்படி ஒரு நீர் யானை வெளியில் வரும் நேரத்திற்காக காத்திருந்து எடுக்கப்பட்ட படம்.
3. இரவு உணவை எடுத்துக் கொள்ளும் சிலந்தி
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜேம் க்யூல்ப்ராஸ் எடுத்த புகைப்படம். ஈக்வேடார் நாட்டின் மாண்டுரியாகு காட்டில் கண்ணாடி தவளைகளின் இனப்பெருக்கக் காட்சியை புகைப்படமெடுக்க தேடிச் சென்ற போது அவருக்கு சிக்கிய காட்சி. 8 செ.மீ நீளமுடைய கால்களைக் கொண்ட சிலந்தி ஒன்று கண்ணாடித் தவளைகளின் முட்டைகளை தனது இரவு உணவாக எடுத்துக் கொண்டிருக்கிறது. செரிமான திரவங்களை தனது உணவிற்குள் முதலில் உட்செலுத்தி, பிறகு திரவ உணவினை உறிஞ்சிக் கொள்கிறது சிலந்தி.
4. அல்சிடே குடும்ப வகையைச் சேர்ந்த பஃபின்(Puffin) பறவைகளின் ஜோடி
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எவி ஈஸ்டர்புக் எடுத்த புகைப்படம். ஃபார்னே தீவு பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு அட்லாண்டிக் பஃபின் பறவைகளை படமெடுத்துள்ளார். பருவநிலை மாற்றத்தினால் அழிந்து வரும் பறவை வகைகளில் பஃபின் ஒன்றாகும். பள்ளி மாணவியான எவி தனது பெற்றோர்களுடன் விடுமுறை நாளில் ஃபார்னே தீவிற்கு சென்றபோது, இந்த பறவைகளின் கூட்டுக்கருகில் காத்திருந்து அப்பறவைகள் பார்வையை தன் பக்கம் திரும்பியபோது எடுத்த படம்.
5. உரல் வகை ஆந்தைகள் ஜோடியாக நிற்பதை பார்த்து விலகி ஓடும் சிவப்பு அணில்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மக்கோடோ ஆண்டோ எடுத்த புகைப்படம். ஜப்பானின் ஹோக்கைடோ தீவில் உள்ள காட்டில் இந்த ஆந்தைகளின் வித்தியாசமான போஸ் ஒன்றினை புகைப்படமெடுக்க மூன்று மணி நேரங்கள் அவர் காத்திருந்தார். அந்த நேரத்தில் மரத்தின் உச்சியிலிருந்து அணில் ஒன்று கிளைகளுக்கு இறங்கி ஓடி வருகிறது. உரல் வகை ஆந்தைகள் இந்த வகை அணில்களை உணவாக உண்ணக் கூடியவை. இரண்டு ஆந்தைகள் அமர்ந்திருக்கும் நேரத்தில் சிவப்பு அணில் அவற்றின் கூட்டிற்குள் நுழைவதற்கு இரண்டு முறை முயல்கிறது. பின்னர் தனக்கிருக்கும் ஆபத்தை உணர்ந்து வேறு கிளைக்கு தாவி ஓடுகிறது.
6. மரங்களில் வாழும் சிறிய நரி வகையைச் சார்ந்த விலங்கினம் (Brushtail Possums)
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேரி மெரிடித் எடுத்த புகைப்படம். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு விடுமுறைப் பூங்காவில் எடுக்கப்பட்டது. பொதுவாக இந்த வகை விலங்கானது மரங்களின் பொந்துகளுக்குள் வாழும். சூரியன் மறையும் வரை பூங்காவில் முகாமிற்குள் பதுங்கியிருக்கும். இருட்டான பின்பு எட்டிப் பார்த்து, பின்னர் மரங்களில் ஏறிச் சென்று தன் உணவை எடுத்துக் கொள்ளும். அப்படி ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
7. பவளப்பாறைகளில் இரவில் நகரும் நத்தை வகை உயிரினம் (Molluscs)
ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரண்ட் பல்லேஸ்டா எடுத்த புகைப்படம். பிரான்சின் ஃபகராவா பவளத்தீவில் இருள் படரும் நேரத்தில் நகரும் நத்தை வகை உயிரினங்கள். மெதுவாக நகரும் இவற்றுக்கு எதிரில் 2 மீட்டர் நீளமுடைய சுறா ஒன்று தண்ணீரில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த சுறா மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடியது.
8. இறந்த எலியை கவ்விக் கொண்டிருக்கும் நரி
இங்கிலாந்தைச் சேர்ந்த மேத்திவ் மரான் எடுத்த புகைப்படம். வடக்கு லண்டனில் கடந்த 4 வருடங்களாக நரிகளை படமெடுத்து வருபவர் மேத்திவ். தான் பிடித்து வந்த இறந்த எலியைக் கொண்டு வருகிறது இளைய நரி. மூத்த நரி அதனை பறிக்க பார்த்துக் கொண்டிருப்பதால், இறந்த எலியை இறுக்கமாக கவ்விக் கொண்டிருக்கிறது இளைய நரி.
9. ஆற்றிலிருந்து மீனைப் பிடித்துவிட்ட பழுப்பு கரடி
கனடாவைச் சேர்ந்த ஹன்னா விஜயன் எடுத்த புகைப்படம். அலாஸ்காவின் கட்மாய் தேசியப் பூங்கா பசுபிக் கடற்கரையையும், மலைகளையும், ஏரிகளையும், ஆறுகளையும் கொண்டது. இந்த காட்டில் 2200 பழுப்பு கரடிகள் வசிக்கின்றன. ஒரு ஆண் கரடி ஒரு நாளில் 30 சால்மன் வகை மீன்களை உண்ணுகின்றன. கரடி ஆற்றை நோக்கி காத்திருந்து மீனின் வருகைக்காக காத்திருந்து கவ்விப் பிடிக்கும் காட்சியை ஹன்னா படம்பிடித்துள்ளார்.
10. குட்டிகளுடன் கரியல் வகை பெரிய முதலை
இந்தியாவின் திர்த்திமன் முகர்ஜி எடுத்த புகைப்படம். உத்திரப்பிரதேசத்தின் சாம்பல் தேசியப் பூங்காவில் 13 அடி நீளமுள்ள கரியல் வகை ஆண் முதலை குட்டிகளுக்கு ஆதரவாக தோள்கொடுத்து நின்று கொண்டிருக்கிறது.
11. காட்டுத்தீயை தாங்கி வளரும் அரக்கேரியா காடு
இத்தாலியின் ஆண்டிர்யா போஸி எடுத்த புகைப்படம். தெற்கு சிலி மற்றும் வடக்கு அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவை அரகேரியா மரங்கள். இந்த காட்டுப் பகுதியானது தொடர்ச்சியாக காட்டுத் தீயும், எரிமலை வெடிப்புகளும் நிகழும் பகுதியாகும். ஆனால் இவை எல்லாவற்றையும் தாங்கி மீண்டு வளரும் தன்மையை அரக்கேரியா மரங்கள் கொண்டிருக்கின்றன. இந்த மரங்கள் 164 அடி உயரம் வரை வளரக்கூடியவை. நிலப்பரப்பெங்கும் ஊசிகள் சொருகி வைத்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி உணர்வை இந்த படம் அளிக்கிறது.
12. இந்தோனேசியாவின் டொமோஹான் சந்தை
பிரான்சைச் சேர்ந்த குவெண்டின் மார்டினேஸ் எடுத்த புகைப்படம். சந்தையில் வியாபாரி ஒருவர் வவ்வால்களை வெட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பக்கத்தில் மலைப்பாம்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு முன்னே எலிகள் வெட்டுவதற்கு தயாராய் வைக்கப்பட்டுள்ளன. காடுகளிலிருந்து பிடித்து வரப்படும் பாலூட்டி மற்றும் ஊர்வன வகையைச் சேர்ந்தவை இந்த சந்தையில் விற்கப்படுகின்றன. மேலும் பூனைகள், நாய்கள் போன்றவற்றின் இறைச்சியும் விற்கப்படுகிறது. காட்டு விலங்குகளும், வீடுகளில் வளர்க்கப்பட்ட விலங்குகளும் முறையான பாதுகாப்போ, பராமரிப்போ இல்லாமல் ஒன்றாக இங்கு வைக்கப்படுவது சுகாதாரத்திற்கு கேடானதாக பலர் தெரிவிக்கின்றனர்.
13. அமேசானின் காட்டுத் தீ
இங்கிலாந்தின் சார்லி ஹாமில்டன் ஜேம்ஸ் எடுத்த புகைப்படம். வடகிழக்கு பிரேசிலில் அமேசான் காட்டில் காட்டுத் தீ அணைக்க முடியாமல் எரிந்து கொண்டிருக்கிறது. ஒற்றை மரம் மட்டும் தனியாய் உயர்ந்து நின்று கொண்டிருக்கிறது. இப்புகைப்படவியலாளர் கடந்த 10 ஆண்டுகளாக அமேசானில் நடக்கும் காடு அழிப்பினைப் பற்றி தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வருகிறார்.
14. இயந்திர மீன்பிடி வலைகளில் சிக்கி இறக்கும் அல்பட்ரோஸ் கடல் பறவைகள்
ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பெஸ்சேக் எடுத்த புகைப்படம். தென் ஆப்ரிக்காவில் பிரம்மாண்ட இயந்திர மீன்பிடி வலைகளின் கொக்கிகளில் சிக்கி ஏராளமான அல்பரோஸ் கடல் பறவைகள் இறக்கின்றன. கடல் பறவைகளை பாதிக்காத வகையில் மீன் பிடிக்கும் வழிமுறைகள் சமீப காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒவ்வொரு வருடமும் 3,00,000 கடல் பறவைகள் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
15. தார் எண்ணெய் எடுப்பு சுரங்கங்களின் பகுதி
கனடாவைச் சேர்ந்த கார்த் லென்ஸ் எடுத்த புகைப்படம். அல்பெர்டா பகுதி உலகத்தின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் சுரங்கமாக இருக்கிறது. எண்ணெய் பிரிக்கப்பட்ட வேதிக் கழிவுகள் படர்ந்து கிடக்கும் காட்சியை கார்த் லென்ஸ் ஒரு விமானத்திலிருந்து படம் பிடித்துள்ளார்.