லா.ச.ரா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
லா.ச.ரா-வின் முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக லா.ச.ரா என்ற பெயரில் எழுதி வந்தார்.
”கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண் மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண் திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்” என்று எழுதிய லா.ச.ரா, 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
1916-ம் ஆண்டு அக்டோபர் 30 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவர். அவருடைய பால்ய காலம் முழுவதும் காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை எனும் கிராமத்தில் வளர்ந்தார். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தந்தை சப்தரிஷி லா.ச.ரா-வின் மீது தனிக்கவனம் செலுத்தி அவரே ஆசிரியராக இருந்து வீட்டிலேயே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடங்கள் கற்பித்து வந்தார்.
தந்தையார் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் இவருக்கு 12 வயதுக்குள் நல்ல ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து பள்ளி இறுதித் தேர்வில் தேறினார்.
லா.ச.ரா-வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா.ச.ரா அவருடைய 50-வது வயதில் “புத்ர” என்ற நாவல் எழுதினார். அது அவரின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகும். தினமணி கதிரில் தொடராக வந்த சுயசரிதை சிந்தாநதிக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
”உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு’ என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்பது லா.ச.ராமாமிருதத்தின் முக்கியமான கூற்று. மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள். இவற்றில் இதழ்கள் என்று ஒரே தலைப்பிடப்பட்டு ஒரே சுருதி லயத்தில் எழுதப்பட்ட கதைகள், பஞ்சபூதக் கதைகள் ஆகியவையும் அடங்கும். ஜனனி, பாற்கடல், பச்சைக் கனவு, புற்று, அபூர்வ ராகம், ராஜகுமாரி ஆகிய கதைகள் தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகள் என்று பல்வேறு விமர்சகர்கள் போடும் பட்டியல்களில் கட்டாயம் இடம்பெறக் கூடியவை.
மணிக்கொடி எழுத்தாளர்களில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா என்ற வரிசையில் வந்து, எல்லோரும் இறந்த பிறகு மீதமிருந்த லா.ச.ரா தனது 91-வது வயதில் 2007 அக்டோபர் 29 அன்று மரணமடைந்தார்.