முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த உடன் ஜெயாவுடன் 34 வருடம் இருந்த சசிகலா மீது சதி செய்ததாக ஆங்கில, தமிழ் ஊடகங்களும், நடுநிலை அறிவுஜீவிகளும் குற்றம் சாட்டினார்கள். அப்படியானால் இத்தனை வருடமாக நிர்வாக திறன் மிக்கவர்,சர்ச் பார்க்கில் படித்தவர்,பல அரிய ஆங்கில புத்தகங்கள் படித்தவர் என்றெல்லாம் பாராட்டப்பட்ட ஜெயலலிதா எப்படி சசிகலாவை தன் இல்லத்தில் வைத்து இருந்தார் என்ற கேள்வி ஏன் யாருக்கும் எழவில்லை.
அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு ஆடு புலி ஆட்டங்களை ஆடிக் கொண்டே இருக்கிறது டெல்லி.
அதிமுகவில் ஜெயலலிதா
சசிகலா திடீரென்று கட்சியை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர பார்க்கிறார், மூத்த தலைவர்கள் இருக்கும் போது தன்னை முன் நிறுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைத்தார்கள். அப்படியென்றால் முதலில் ஜெயலலிதா மீது தான் அக்குற்றச்சாட்டை வைத்திருக்க வேண்டும்.1972இல் எம்ஜிஆரால் துவக்கப்பட்ட அதிமுகவில் ஜெயலலிதா 1982 இல் இணைந்தார்.1982 இறுதியில் முதல் பொதுக் கூட்டத்தில் பேசியவர் 1983 இல் கொள்கைபரப்பு செயலாளர் ஆக்கபட்டுள்ளார். அப்பொழுது அந்த கட்சியில் நாவலர் நெடுஞ்செழியன்,க.ராசாராம் ,பண்ருட்டி ராமசந்திரன், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இருந்தார்கள் என்பதும் 1983 முதல் ஜெயலலிதாவுடன் சசிகலா இருக்கிறார் எனபதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக சசிகலாவை தன்னுடன் வைத்திருக்கும் ஜெயா புனிதமானவராகவும் சசிகலா சதி செய்தவராகவும் உருவகபடுத்தப்பட ஒரு நூலிழை வித்தியாசம் தான் காரணம்.
ஜெயலலிதா என்கிற ஒரு முதல்வர் மரணத்தில் சதி என்றால் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கபட்டது முதல் இறந்த வரை நரேந்திர மோடி அரசு என்ன செய்து கொண்டிருந்தது?. மரணத்திற்கு பிறகு BBC யிலும் ஆங்கில ஊடகங்களிலும் சசிகலாவை நோக்கி கேள்வி எழுப்பிய என்.ராம் ஜெயா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் இந்திய அரசை நோக்கி என்ன கேள்வி எழுப்பினார்? என் ராமும் பிற ஆங்கில ஊடகங்களும் (நடிகை கவுதமி உட்பட )நரேந்திர மோடி அரசையும் அதன் அதிகார வர்க்கத்தையும் விட சசிகலா வலிமையானவர் அவர்களை எல்லாம் ஏமாற்றி விட்டார் என்று கூறுவார்கள் என்றால் அது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்.
1998 இல் பாஜாகவில் சேர்ந்த கவுதமி முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அக்டோபர் 28 ஆம் தேதி பிரதமரை சந்தித்து நேரில் பேசுகிறார். அதற்கு சில நாட்கள் முன் காவேரி பிரச்சனை தொடர்பாக தமிழக எம்பிக்கள் பிரதமரை சந்திக்க முயற்சித்த போது சந்திக்க மறுத்தார் என்பதும் குறிப்பிடதக்கது.ஜெயாவின் மரணத்திற்கு பிறகு தீபா,கவுதமி ,காயத்ரி ரகுராம் ,கஸ்தூரி , மதுவந்தி என்று ஒரு பார்ப்பன பெண் பட்டாளமே ஊடகங்கள் முன்னால் நிறுத்தபட்டு அத்தனையும் காற்று போன பலூனாக மாறி போன கதை தமிழ் நாடறியும்.
ஜெயா மரணத்திற்கு பதில் சொல்லகூடியவர்கள் யார் ?
அப்பலோ மருத்துவமனைக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வந்து 7 ஆம் தேதி வரை இருந்து மருத்துவம் பார்த்த ஏய்ம்ஸ் மருத்துவக்குழு , அக்டோபர் ஒன்றாம் தேதி வந்த தமிழக கவர்னர் ஆகியோர் சசிகலாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை. மோடி அரசின் கீழ் வேலை செய்பவர்கள்.
மன்னார்குடி குடும்பம் இந்திய அரசை விட வலுவானதா?
மன்னார்குடி குடும்பம் ’மாபியா’ என்றால், யாரையும் அனுமதிக்காமல் மறைத்து விட்டார்கள் என்றால், ஆளுநர் இங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்று யோசியுங்கள். இந்தியாவில் தும்மியதற்கு எல்லாம் மாநில அரசுகள் கலைக்கபட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியை கலைப்பொம் என்று தமிழ் நாட்டை சு.சாமியும் மிரட்டி வந்திருக்கிறார். ஆளுநரை மீறி மன்னார்குடி குடும்பம் செயல்பட்டிருந்தால் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 365 மற்றும் 256ன்படி மாநில அரசு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டாலோ அல்லது அதன்படி நடக்க தவறினாலோ அந்த மாநிலத்தின் ஆளுநர் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஜனாதிபதி அந்த மாநிலத்தின் ஆட்சியை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த முடியும். ஆளுநர் தன் அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கலாமே ஏன் செய்யவில்லை?

தமிழக அரசின் ஐபிஸ் அதிகாரிகள் எல்லாம் இந்திய அரசை மீறி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் என்று கதை சொல்வார்கள் என்றால் இந்தியாவின் ‘ஐ.பி’ என்ற உளவுத்துறை கூடவா சசி கட்டுபாட்டில் இருந்தது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எல்லாம் செய்யும் இந்திய அரசும் அதன் கமேண்டோ படையையும் மீறிய படை ஒன்று சசிகலாவிடம் இருந்ததா என்ன?
லண்டன் ரிச்சர்ட் செப்டம்பர் 30ஆம் தேதியும் அக்டோபர் 4,13,23,24 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து ஜெயலலிதாவிற்கு மருத்துவம் செய்துள்ளார்
செப் 22 முதல் ஜெயாவின் சிகிச்சைக்குள் வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர், லண்டன் டாக்டர் ரிச்சர்ட், இவர்களை தான் முதலில் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக சொல்லப்பட்ட டிசம்பர் 4 ஆம் தேதி இரவே மும்பையில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ வந்தார். முதல்வருக்கு எய்ம்ஸ் மருத்துவர் குழு அக்டோபர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சென்னையில் இருந்தும் மருத்துவம் பார்த்துள்ளனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வர் இறந்த டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அப்பலோ வந்து பார்வையிட்டுள்ளனர். அவர்கள் இந்திய சுகதாரத் துறை அமைச்சர் நட்டாவின் மூலம் பிரதமரிடம் முதல்வரின் உடல் நிலை குறித்து தகவல் சொல்லி கொண்டே இருந்துள்ளனர்.
ஜெயலலிதா இறந்த அன்று மாலை 5.30 மணிக்கே வெங்கையா நாயுடுவும் வந்துவிட்டார். மருத்துவ மனையில் இருந்த போது வெங்கையா நாயுடுவும் அருண் ஜெட்லியும் பாஜக தலைவர் அமித்சாவும் வந்து பார்த்து விட்டு சென்றார்களே ஏன் அப்பொழுது எல்லாம் அவர்கள் இதை பேசவில்லை என்றும் கேளுங்கள்.
அப்பொழுது ஒரு சிசிடிவி கூட வேலை செய்யாமல் பார்த்து கொண்டது யாராக இருக்கும் ? உண்மையிலேயே ஜெயாவின் மரணத்தின் மர்மங்களுக்கெல்லாம் காரணம் யாராக இருக்க முடியும் என்பது தெள்ள தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலமும் அதன் பின் நடந்த அரசியலும் அடுத்த பாகத்தில்