தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கொளுவைநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் எனும் இளைஞர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு 2009 சனவரி 29 அன்று காலை வந்து அங்கு ‘விதியே விதியே என் செய்வாய் என் தமிழ் சாதியை’ என்று துவங்கும் தனது கடித நகல்களை அங்கு நின்றவர்களிடம் கொடுத்து விட்டு , ஈழதமிழர் மீதான இனப்படுகொலையை தடுத்த நிறுத்தக் கோரி முழக்கமிட்டபடியே தன் உடலில் தீயைப் பற்ற வைத்தார்.
அந்த ஈகம் உணர்ச்சி கொந்தளிப்பில் நிகழ்ந்தது அல்ல என்பதை அவர் எழுதிய கடிதமும், அதனிலிருந்த கோரிக்கைகளும் தெளிவாக்கின. அத்தகைய அரசியல் தெளிவை எங்கிருந்து முத்துகுமார் பெற்றார் என்பதை அவரது முழு வாழ்வையும் அறிந்தவர்களால் மட்டும் தான் உணரமுடியும்.
முத்துகுமாரின் தோழராகவும், அவரை அரசியல்படுத்தியவர்களில் ஒருவருமான தோழர் ஆ. கலைச்செல்வன் எழுதிய ‘முதுக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்’ நூலில் இருந்து ஒரு பகுதி.
உயிர்த் தோழன்
”இந்தியாவில் மதமே அரசதிகாரத்திற்கும் அனைத்திற்கும் மூலமாக இருக்கிறது. இங்கே நீதிபதியை விட புரோகிதன் சக்தியுடையவனாக இருக்கிறான்- அண்ணல் அம்பேத்கர்”
எங்களுக்கு ஒரு கனவு இருந்தது. இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய புத்தகக் கூடங்கள் உருவாக்க வேண்டுமென்று. புத்தகம் உயிருள்ள தோழன். புத்தக வாசிப்பு இதயத் துடிப்புள்ள ஓவ்வொரு மனிதனையும் மேம்படுத்தும் செயல்.
வாசிப்பு ஒரு மனிதனை விசாலமாக்குகிறது. அவனுள் ஒரு பரிமாண வளர்சியை எற்படுத்துகிறது. முத்துக்குமாரின் படிப்பு முறை உள் ஆழம் வரை ஊடுருவிப் பாயக்கூடியது. படிப்பதை ஒரு வேள்வியாகவே வைத்திருந்தார்.
தத்துவஞானி வால்டேர் எழுதிய புத்தகம் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டதையும், கார்ல் மார்க்சின் மூலதனம் எனும் நூல் உலக அரசியலையே புரட்டிப் போட்டதையும் நாம் மறக்கலாமா? சார்லஸ் டார்வினின் உயிற் தோற்றம் மனித குல வரலாற்றில் மாபெரும் மாற்றத்தைக் குறிக்கவில்லையா?
என்னுடைய புத்தகச் சேகரிப்பை முத்துகுமார் தான் அதிகம் பயன்படுத்தியுள்ளார். மார்க்சியம், சமநீதி இலக்கியம் என அனைத்திலும் பயணப்படிருக்கிறார்.
எட்டாவது படிக்கும் போதே அரசியலை வாசித்தவர்
எட்டாவது படிக்கும் போது அவர் படித்த முதல் புத்தகம் சுவருக்குள் சித்திரங்கள். அடுத்து காந்தி காங்கிரஸ் துரோக வரலாறு. இதன் மூலம் காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் அவர் கொண்டிருந்த பெரும் மதிப்பு ஆடிப்போனது .
2002 இறுதியில் நானும் பிழைப்பிற்காக சென்னை வந்துவிட்டேன். சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். புதிய புத்தகங்கள் வாங்கிப் படிப்பது கனவாகதான் இருந்தது. நாங்கள் வசித்த பகுதியில் மருந்துக்கு கூட நூலகங்கள் கிடையாது. பழைய புத்தகக் கடைகள் தான் எங்கள் அறிவு பசியைத் தீர்க்க ஒரே வழி. அங்கு புத்தகங்கள் சிதைந்த நிலையிலே கிடைக்கும். சில பக்கங்களேனும் குறையும். ஆனால் அவை தாம் எமக்கு கருவூலம்.
வேலை இல்லா நாட்களில் கன்னிமாரா அல்லது பெரியார் நகரில் உள்ள நூலகங்களுக்குச் செல்வோம். நேரத்தையும் தூரத்தையும் கணக்கிடாமல் நூலகங்களுக்கு நடந்து சென்று படிப்பது முத்துகுமாருக்கு விருப்பமான செயலாகும்.
கையில் பணம் இருக்கும் நேரங்களில் ஆதம்பாக்கத்தில் உள்ள அன்பு பழைய புத்தகக் கடைக்கு சென்று புத்தகங்கள் வாங்கி வருவோம். 2003 மைலாப்பூரில் உள்ள நீல்கிரிஸ் அடுமனையில் வேலை செய்து கொண்டிருந்தார். வேலை நேரம் பதினாறு மணி நேரம் அல்லது பதினெட்டு மணி நேரம் வரை நீடிக்கும். இடையிடையே கிடைக்கும் ஒய்வு நேரங்களை படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்.
முத்துகுமார் படிபதற்கான நேரம் என்பது பேருந்து பயண நேரமாகும் . பேருந்திற்கு காத்திருக்கும் நேரத்தை கூட படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார். அந்த நேரத்தில் நண்பர்கள், உடன் வேலைபார்ப்பவர்கள் அருகில் வந்தால் கூட அறிதிருக்க மாட்டார் அந்த அளவிற்கு படிப்பில் ஒன்றிவிடுவார்.
ஆழாமாகவும் வேகமாகவும் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்
வில்லிவாக்கம் தொடர்வண்டி நிலையம் அருகிள் உள்ள மளிகைக் கடையில் முத்துக்குமார் வேலைப் பார்த்த காலமிது. முத்துகுமாரை ஒரு மாலை பொழுது சந்திக்க சென்றேன். அவரது தோற்றம் எனக்கு மிகுந்த மன சங்கடத்தை எற்படுத்தியது. மாவு கொட்டிய முகத்துடன் அழுக்கு மூட்டையாக இருந்தார். என்னைச் சந்திப்பதற்காக அவருக்கு அரை மணி நேரம் ஒய்வு கொடுத்தார் கடை முதலாளி.
அந்த குறுகிய நேரத்தில் அனைத்து செய்திகளையும் பேசிவிடும் நோக்கத்தோடு விரைவாக பேசிக் கொண்டே இருந்தார். என் கையில் இருந்த அ.முத்துலிங்கம் எழுதிய திகடசக்கரம் என்ற சிறுகதை நூலை இரண்டோரு நாளில் படித்துவிட்டு தருகிறேன் என்று வாங்கி கொண்டார். வீட்டிற்கு கொண்டுவந்து இரவே படித்துவிட்டார்.
அசுர வேகத்தில் படிக்கும் பழக்கமுள்ளவர் முத்துகுமார். நான் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன். அ.முத்துலிங்கத்தை இவ்வளவு நாட்களாக அறியாமல் இருந்திருகிறோமே என்று ஆதங்கப்பட்டார்.
தமிழக அரசியலையோ இந்திய அரசியலையோ மேலும் மேலும் ஆழமாக கற்றுக்கொள்ள மார்சியம் லெனினியம் மட்டுமல்ல பெரியார், அம்பேத்கர் நூல்களை வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார் புலவர் தமிழ்மாறன். அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் தொகுதி ஒன்று, ஐந்து, ஒன்பது கிடைக்கப்பெற்றன அவற்றை படிக்கத் துவங்கினோம் . திடிரென்று ஒரு நாள் புத்தரும் அவர்தம் தம்மமும் (தமிழில் பெரியார் தாசன் ) அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை கொடுத்து உடனடியாக படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தான் கற்றுணர்ந்த அத்தனை செய்திகளையும் பரிமாறிகொண்டே இருப்பார் முத்துகுமார். கற்பதிலும் கேட்பதிலும் இடைவிடாது இயங்கி கொண்டிருந்தார்.
அரசியல், இலக்கியம், வேலை, உணவு என்று எல்லா நகர்வுகளிலும் பிணைந்திருந்தோம். கருத்தரங்குகள், மாநாடுகள், நூல் வெளியீட்டு விழா என ஒவ்வொன்றிலும் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தோம்.
புத்தகம் படிப்பதையே அவரது பகுதி நேர வேலையாகவும் பயிற்சியாகவும் கொண்டிருந்தார். கண்ணில் கானும் எந்த நூலாக இருந்தாலும் படித்து முடித்துவிடுவார். அவர் படித்த நூல்களின் எண்ணிக்கை சொல்லிமாளாது. அவர் படித்த புத்தகங்களில் தமிழினத்திற்கு தேவையான கருத்து கிடைத்து விட்டால் குறிப்பெடுத்துக் கொள்வார். கன்னிமாரா நூலகத்திற்கும், தேவணேய பாவாணர் நூலகத்திற்கும் சென்று பயன்பெறுவோம். வாசிப்பு ஆர்வம் மட்டுமின்றி முத்துகுமாருக்கு படைப்பார்வமும் மேலோங்கியது.
வாசிப்பு அவர் வாழ்வின் அங்கமாயிற்று. அதுவே அவருக்குள்ளான சமுக கோபத்தை அணையாது வளர்த்தெடுத்து. போர்க் குணத்தின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது.
திருநேல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்களில் செயற்பாட்டாளராக திகழ்ந்தவரும், முத்துகுமாருக்கு அரசியல் ஆசானகவும் திகழ்ந்த புரட்சிகர இளைஞர் முன்னனியை சேர்ந்த புலவர் தமிழ் மாறனுக்கு படையல் என்று துவங்கும் ‘முத்துகுமார் நெருப்பாய் வாழ்ந்தவன்’ என்ற புத்தகத்தின் பதினோராவது பகுதி மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.