சேகுவேரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ஹொசே மார்த்தி

ஹொசே மார்த்தி பிறந்த நாள் சிறப்பு பதிவு

“புரட்சிகர கால கட்டத்தில் எல்லாமும் புரட்சித்தீயில் ஆகுதி ஆக வேண்டும் கலை ஆயினும் கூட!”   மார்த்தி

ஹோசே மார்த்தி, கியூபா ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்ததவரும், லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்கு விதையாக இருந்தவரும்  ஆவார்.

மேலும் சேகுவேரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஹொசே மார்த்தி. பெரும் அறிவு ஜீவயும், ஆயுதம் தாங்கிய புரட்சியாளருமான ஹோசே மார்த்தி, போராட்டக் களத்திலேயே தன் உயிரை நாட்டுக்காக கொடுத்தவராவார்.

மார்த்தி, கியூபா நாட்டில் ஹவானாவில்  1853ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள்  மரியா-நோ மார்த்தி (Mariano Marti) மற்றும் லியோனார் ஃபெரேஸ் (Leonor Perez) என்பவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தார்.

இளம் வயதிலேயே சிறந்த ஓவியராக, சிற்பியாக, பல்துறை நுட்பங்களை உணர்ந்த கலைஞனாக விளங்கியவர். பதினாறு வயதிலேயே உள்நாட்டுச் செய்தித் தாள்களில் தலையங்கம் தீட்டியும், பாடல்களை எழுதியும் நாட்டு விடுதலைக்காகன போராட்டத்திற்கு வித்திட்டார்.

இவரது கவிதைகளும், கட்டுரைகளும்   அதிகாரவர்க்கதிற்கு எதிரானதாக, அடக்கு முறைக்கு எதிரான விடுதலை உணவர்வுட்டுவதாக இருந்தது .

16 வயதில் சிறை

கியூபாவில் ஸ்பெயின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் 1869ம் ஆண்டு  ஆரம்பமானது; வராலாற்றில் இது    பத்தாண்டுப் போர் என அழைக்கப்படுகிறது. சிறு வயது முதலே ஸ்பெயின் ஆதிக்கத்துக்கும்,  அடிமை முறைக்கும் எதிரான மனப்போக்கு கொண்ட மார்த்தி, இந்த புரட்சியில்  தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். 16 வயதே ஆன மார்த்தியின் கவிதைகளும், புரட்சிகரக் கட்டுரைகளும் போராளிகள்  மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.  இதைத் தொடர்ந்து தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்ட மார்த்திக்கு, ஆறு வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்படது. மார்த்தியின் வயது மற்றும் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என அவரின் பெற்றோர்கள் போராடியதை தொடர்ந்து, சிறைதண்டனை விலக்கிக் கொள்ளப்பட்டு ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் இவரது படிப்பு முழுமை அடைந்தது. ஸ்பெயினில் இருந்தபோது மனித உரிமைகள் பற்றிய துறையில் சட்டம் படித்தார்.

மேலும் தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் பட்டம் பெற்றார். இளம் வயதில் சிறைச்சாலையில் கால்களில் கடுமையாக விலங்கிடப்பட்டதால் எற்பட்ட பாதிப்பில், ஸ்பெயினில்  படித்துக் கொண்டிருந்தபோது இரண்டு முறை அறுவை சிகிச்சை  செய்து கொண்டார். அதனால் தனது வாழ்நாள் இறுதிவரை தடியின் துணையுடன் நடந்துசெல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஸ்பெயினில் இருக்கும் போதும் தனது எழுத்துப் பனியை தொடர்ந்தவர், கியூபாவில் நடந்து வரும் அரச பயங்கரவாதத்தை பற்றி  ஸ்பெயின்    மக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைத்தார். இவர் அங்கிருந்தபடியே எழுதிய பல கட்டுரைகள், மாட்ரிட், நியூ யோர்க் மற்றும் கியூபாவில் இருந்து வெளிவரும் சில நாளிதல்கழில் தொடர்ந்து அச்சேரின. 1874ல் தனது படிப்பை முடித்த மார்த்தி, அதே ஆண்டு தனது நன்பர் பெர்மனுடன் பாரிசுக்கு பயனமானார்.

கியுபாவின் ஒரு சுவர் ஓவியம்

அதன் பின் மெக்சிகோவிற்கு சென்ற மார்த்தி, கியூப விடுதலையை மட்டும் அன்றி அந்நாட்டின் குடிமக்களுக்கு இருந்த உள்ளூர் பிரச்சனைகளைப் பற்றியும் எழுத ஆரம்பித்தார். கூடவே தனது கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு நாடகங்களையும் எழுத ஆரம்பித்தார். amor con amor se paga (காதலோடு காதலைத் திருப்பிக் கொடு) என்ற இவரது நாடகம் மெக்சிகோவின் முன்னனி நாடகக் குழுவால் தயாரிக்கப்பட்டு புகழ் பெற்றது. மெக்சிகோ வந்த ஒரே வருடத்திலேயே, மார்த்தி “கொரிசித்தா” எனப்படும் மெக்சிகோ எழுத்தாளர்கள் மற்றும் கலைகர்களுக்கான சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த சங்கத்திலே தான் இவர் தனது எதிர்கால மனைவியான சயாசு பசானை சந்தித்தார்.

1877ல் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு, வேறு பெயரில் கியூபா சென்ற மார்த்தி, ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே அங்கு தங்கினார். பிறகு மெக்சிகோ வழியாக குவாத்தமாலா சென்ற மார்த்திக்கு அங்கு பேராசிரியர் பணி கிடைத்தது. சான் கார்லசு பல்கலைக்கழகத்தின் பிரெஞ்ச், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய இலக்கியம், வரலாறு மற்றும் தத்துவம் ஆகிய துறைகளின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கியூபாவிற்கு திரும்பிய மார்த்தி

1878ல் தனது தாயகமான கியூபாவிற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். அதைத் தொடர்ந்து தனது காதலியான சயாசு பாசனை மணந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மார்த்தி வின்னப்பித்த வழக்கறிஞர் பயிற்சி பெறுவதற்கான வின்னப்பத்தை ஸ்பெயின் அரசு நிராகரித்தது. எனவே பேராசிரியராக தனது வாழ்க்கையை தொடர்ந்தார்.

நியூ யோர்க் நகருக்கு சென்ற மார்த்தி, அங்கு கலிசாட்டோ கார்சியா எனப்படும் கியூப புரட்சியாளரின், புரட்சிக் குழுவில் இனைந்தார். ஸ்பெயின் அரசினால் நாடு கடத்தப்பட்ட கியூபர்களால் நடத்தப்பட்ட இந்த குழு, நியூ யோர்க் நகரத்தை அடிப்படையாக கொண்டு கியூப விடுதலை போரை முன்னெடுத்தது.

தொடர்ந்து அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் சென்ற மார்த்தி, அங்கிருந்த கியூப மக்ககளிடம், தமது நாட்டின் விடுதலையின் தேவையைப் பற்றி உரையாற்றினார். மத்திய அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் என பல இடங்களுக்கும் நீண்ட இந்த பயணத்தில் திரட்டப்பட்ட நிதி, கியூப புரட்சிக் குழுவின் தேவைகளுக்கு பெரிதும் பயன்பட்டது. அதே நேரத்தில் 1894ல் இவர் பாட்ரியா நாளிதழில் எழுதிய ‘எ கியூபா’ என்ற கட்டுரை அமெரிக்க மற்றும்  ஸ்பெயின்  அரசுகளுக்கு இடையே இருந்த ரகசிய உறவை அம்பலப்படுத்தியது. அதே ஆண்டு ஆகஸ்ட்  மாதம்  ஸ்பெயின் அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய குழு ஒன்றை தயார் செய்யும் வேலைகளை மார்த்தி தொடங்கினார்.

கியூபாவின் தேசிய நாயகன் மார்த்தி

1895ல் சனவரியில் மார்த்தியால் முன்னெடுக்கப்பட்ட கியூப ஊடுறுவலில் சிறிது தடை ஏற்பட்டது. புரட்சிப் படைக்கு தேவையான ஆயுதங்களை கொண்டு சென்ற மூன்று நீராவிக் கப்பல்கள், வட அமெரிக்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, மார்த்தி தனது படையெடுப்பை கைவிட நேர்ந்தது.

இதைத் தொடர்ந்து, அப்போது டொமினிகன் குடியரசில் தங்கி இருந்த முன்னாள் கியூப புரட்சிப் படையின் தளபதியான மேக்சிமோ கோமாசை சந்தித்த மார்த்தி, தனது படையெடுப்பை பற்றி விழக்கியதோடு, அதில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

பிடல் காஸ்ட்ரோ தலைமையில் 1960 மே நாள் ஹவானாவில் ஜோஸ் மார்டி நினைவுச்சின்னத்தில் நடந்த அணிவகுப்பு

மார்த்தியின் அழைப்பை ஏற்ற கோமாசோடு அவரின் படையனியும், 1895ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் மவுன்டே கிரிசுடி நரில் இருந்து புறப்பட்டது. அதே மாதம் பதினொன்றாம் திகதி கியூபாவின் மைசி கபேயை அடைந்த படை, அங்கிருந்த உள்ளூர் புரட்சிப் படையுடன் கூட்டு சேர்ந்து கொண்டது. இவர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தின் இறுதியில் மே19, தசு ரியோசு நகரத்தில் நடந்த தாக்குதல்களில்  மார்த்தி வீரமரணம் அடைந்தார்.

மார்த்தி, தனது கியூப விடுதலைக்கான முயற்சிகளுக்காக இன்றளவும் ஒரு தேசிய நாயகனாக கியூபாவில் கொண்டாடப்படுகின்றார். மேலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தின் விடுதலைப் போரிலும் அவரின் பங்கு இருந்தது. கியூபாவின்  முன்னால் அதிபரான பிடல் காஸ்ட்ரோ மார்த்தியை தனது அரசியல் தந்தை என குறிப்பிடுகிறார். மார்த்தி கியூபாவில் நடந்தேறிய அனைத்து புரட்சி மற்றும் போராட்டங்களுக்கும் தன் கருத்து பங்களிப்பை கொடுத்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *