இக்கட்டுரையின் முதல் ஐந்து பாகங்களை கீழ்காணும் இணைப்புகளில் படிக்கலாம்.
1. மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
3. பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
4. பாகம் 4: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
5. பாகம் 5: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
இனியான மாற்றரசியல் – தொடர்ச்சி
ஈ.பேருண்மைகளின் பண்பு
“மார்க்ஸ், லெனின்,மாவோ போன்றவரின் எழுத்துக்கள் இப்படிப்பட்டவைகளே. உலகில் தோன்றிய மகான்களின் கூற்றுக்கள் அனைத்தும் இத்தகையனவே.இதுவே பேருண்மையின் பண்பு. எல்லாப் பேருண்மைகளும் இரண்டு முரண்பட்ட கருத்துகளின் இணைப்புகளே. ஒன்றை மட்டும் மிகைப்படுத்தினால் அது பெருந்தவறுக்கு இட்டுச்செல்லும். அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சாகும் என்பது போலத்தான் அளவுடன் இருந்தால் நஞ்சும் அமுதமே.” – எஸ்.என்.நாகராசன் (‘கீழை மார்க்சியம்..’)
பௌத்தத்தின் எல்லைகள் சந்திக்கும் நடுவண் தளத்தில் எதிர்வுகளைப் புணர்வித்தே காணவல்ல நடுவழிப் பாதை மெய்கான் முறையை ஏற்றோர் அதன் அறிவியங்கியலாலும் படைப்புத் தேடலாலும் மானுடத்தை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பர். மறுபிறவி நம்பிக்கையை ஏற்போர் அரைக்கிணறு தாண்டிய அதோகதி அதேகதியையே அடைவர்.
சித்தமரபின் வெட்டவெளி என்னும் எண்ணக்கருவை மீபொருண்மை ஆக(Meta physical) அவ்வளவில் மட்டுமே ஏற்பின், அது மறைமுகமாய (Occult)மயக்காக மட்டுமே எஞ்சிநிற்கும். மாறாக அதனைத் தத்துவார்த்த , சமயங்ககடந்த ஆதார நிலை எனக்கொண்டால் அதுவே ஆக்கமுறையிலான விமர்சனக் கருவியாகிச் சிறக்கும்.
“சாதி,மத சடங்கியல் அதிகார மையங்களை உடைக்க, வெட்டவெளி என்ற ஆதாரநிலை பௌத்தத்தர் முதல் சித்தர்வரை ஒரு விமர்சனக் கருவியாகப் பயன்பட்டிருக்கிறது.”
“பௌத்தர் போலவும் சித்தர் போலவும், நமது காலத்தில் பின்னை நவீனத்துவம் பேசுவோர் நிலைப்பாடு, வெற்றுப் பாழ்வெளி ஒன்றை ஆதாரமாகக் கொண்டு அதிகார மையங்களைத் தகர்க்கும் பண்பு கொண்டதாக உள்ளது கவனிக்கத் தக்கது. இத்தகைய தத்துவ நிலைப்பாட்டிற்கு விமர்சன ஆற்றல் ஏராளமாக உள்ளது” – ந.முத்துமோகன் (‘இந்தியத் தத்துவங்களின் அரசியல்’)
வள்ளலாரின் ஐந்து திருமுறைப் பாடல்களின் சார்புநிலைகளை மட்டுமே முன்னெடுத்தால் சைவ சமயியாகவே எஞ்சிநிற்க நேரிடும் மாறாக ஆறாந் திருமுறையின் கட்டற்ற விடுதலைச் சிந்தனைகளை உள்வாங்கிச் செரித்திட வல்லார்க்கே, அது வெட்டவெளி மெய்காண்முறையாகச் சித்திக்கும்.
உ. இனியான மாற்றரசியல் வியூக-வானவில் கூட்டணி
இனியான மாற்றரசியல் என்னும் போது சமயங்கடந்த ஆன்மிகம், பெருங்கதையாடல் கடந்த வெட்டவெளி, கட்சி கடந்த அரசியல் எனவாங்கே அணுகத் தலைப்பட
வேண்டும். இந்துத்துவ ஆக்டோபஸ் எடுத்தாடும் நவநவ அவதார வியூகங்களையும் எதிர்கொள்ள வல்லதாகக் காவிக்கு எதிரதாக ஒரு வானவில் கூட்டணி வியூகத்தையே வகுத்தாக வேண்டியுள்ளது.
அது பொன்மை (சித்தரியம்), கருமை (பெரியாரியம்), செம்மை (மார்க்சியம்), நீலம்(அம்பேத்கரியம்), வெண்மை (காந்தியம்), பசுமை(சூழலியம்), நீர்மை(பெண்ணியம்) என வாங்கே அதனைக் கட்டமைத்தாக வேண்டும்.
இன்னும் இவற்றூடேயும் துல்லியமாக முறைப்படுத்தப்பட வேண்டும். சித்தரியம் எனில் பின்னைச்சித்தரியம்-சிவவாக்கியர் மரபு : வள்ளுவம், வள்ளலாரியம். மார்க்சியம் எனில் பின்னை நவீனத்துவம் முதலானவற்றுடன் உரையாடல் நிகழ்த்தும் கீழைமார்க்சியம். காந்தியம் எனில் குமரப்பாவின் தொண்டூழியப் பொருளாதாரம் + கோராவின் ஆக்கநல நாத்திகம் இணைந்த பின்னைக்காந்தியம். பெரியாரியம் எனில் ஆனைமுத்துவின் மார்க்சியப் பெரியாரியம் + ஒடுக்கப்படும் தேசியஇன விடுதலை+ ஓவியாவின் பெரியாரியப் பெண்ணியம் இணைந்த பின்னைப் பெரியாரியம். அம்பேத்கரியம் எனில் பெரியாரியம் மார்க்சியத்தோடு இணைந்து முன்னெடுக்கும் புரிந்துணர்வுடன் இயங்கும் திருமா போன்றோர் இயக்கம். சூழலியம் எனில் வைதிகத்தோடு கைகோக்கா இயக்கம். பெண்ணியம் எனில் சோசலிசப் பெண்ணியம் எனவாங்கு புதுச்சேர்க்கைகள் கட்டமைக்கப்பட வேண்டும். முகாமையான இயக்கப்பூர்வமான செல்நெறிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துமுகமானதே இப்பட்டியல். இது முழுமையானதன்று.
இத்தகு தேடல்களுக்குத் தொடக்கமான ஒரு முன்வரைவே இது. காலகதியில் இணக்கமான புரிந்துணர்வுடைய தோழமை அமைப்பினர் தம்முள் கலந்துரையாடி இன்னுஞ் செழுமைப்படுத்தி வடிவமைக்க வேண்டும்.
‘ஸம்சயாத்மா விநச்யதி’ என எதனையும் ஐயுறாப் அந்தங்களின் அரசியலுக்கு எதிரதாக -‘ எதையும் ஐயுறு’ எனும் மார்க்சிய மூலவாசகத்தையும், ‘மகா ஐயுறவு’ எனும் பௌத்த உளக்குறிப்பையும், ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ எனும் வள்ளலாரிய மெய்காண்முறையையும்; ‘சுயத்தையும் ஐயுறு’ என்னும் பின்னைநவீனத்துவச் சொல்லாடலையுமே நம்மால் பரிந்துரைக்க இயலும்.
“போதிசத்துவன் அவனின் புத்ததம்மம் கச்சாமி பொதுவுடைமை மார்க்சிய லெனினியம் கச்சாமி.”
முற்றும்.
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)