இந்திய விவசாயிகளில் அதிகமான பிரிவினர் யார்? நிலம் உள்ளவர்களா ? அல்லது நிலமற்றவர்களா?, இந்த கேள்விக்கு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் என்றே பலரும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்களின்படி கிராமப்புற நிலமற்றவர்கள்தான் மக்கள்தொகையில் மிகப்பெரிய பகுதியாக உள்ளனர்.
தற்போது, இறுதியாக 2011 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் படி விவசாய குடும்பங்களை சார்ந்த மொத்தம் 26.3 கோடி மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறது. இதில் 11.9 கோடி மக்கள் மட்டுமே நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், மீதமுள்ள 14.4 கோடி பேர் நிலமற்ற விவசாய தொழிலாளர்களே. வேறு விதமாக கூறுவதானால், நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை விட கணிசமாக அதிகமாகும்.
அதிகரித்திருக்கும் விவசாய தொழிலாளர்கள் எண்ணிக்கை
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்கள் மூலம் நாம் அறிய பெறுவது நம்மை மேலும் அதிர்ச்சி கொள்ள செய்வதாகவே உள்ளது. மக்கள்தொகையில் இந்த நிலமற்ற விவசாயிகளின் அதிகரிப்பு சமீபத்திய காலங்களில் மிக விரைவாக உயர்ந்துள்ளது. முந்தைய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10.7 கோடியாக இருந்த நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 14.4 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, 3.7 கோடி அதிகரித்துள்ளது ; இது மிகப்பெரிய விகிதமாகும். இதில் புதிய குடும்பங்களின் உருவாக்கம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது ஒரு சிறிய காரணியாக தான் இருக்க முடியும். ஏராளமான சிறு விவசாயிகள் மற்றும் குறைந்த அளவிலான கிராமப்புற கைவினைஞர் குடும்பங்கள் நிலமற்ற விவசாய தொழிலாளர்களாக நகர்த்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் அதிகரித்து வரும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதால் இந்த விகிதம் வேகமாக வளர்ந்து வருகிறது.
அதே நேரத்தில், நிலமற்ற பண்ணை தொழிலாளர்களாக கணக்கிடபடுபவர்கள் பல காரணிகளால் தங்கள் சொந்த கிராமங்களிலும் அதைச் சுற்றியுள்ள விவசாய வேலைகளிலும் போதுமான வேலைவாய்ப்பை பெற முடியாமல் போகிறது. அதில் ஒன்று அதிகமான இயந்திரங்கள் மற்றும் பூச்சுக்கொல்லிகளை பயன்படுத்துவதால் விவசாயத்தில் வேலைவாய்ப்பு குறைவது. மற்றொன்று, உள்ளூர் உயர்சாதியினரின் சாதி ஆதிக்கத்தால் தலித்துகளை அதிக அளவில் அவர்களின் சொந்த கிராமங்களில் வேலை தேடுவதை தவிர்க்கும்படி செய்கிறது.
புலம் பெயரும் துயரம்
நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் உண்மையில் தங்கள் சொந்த கிராமங்களிலேயே விவசாய வேலைகள் கிடைத்தால் அல்லது கிடைக்கும்போது செய்கிறார்கள், ஆனால் கூடுதலாக அவர்கள் அருகிலுள்ள சுரங்கங்கள், குவாரிகள், கட்டுமானம் மற்றும் தொழில்துறை வேலைகளிலும் வேலை தேடுகிறார்கள். பெரும்பாலும் அதிகாலையில் புறப்படும் இவர்கள் இரவு வெகுநேரம் கழித்தே திரும்புகிறார்கள்.

இன்னும் பலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக, தொலைதூர பண்ணைகள், சுரங்கங்கள், செங்கல் சூளைகள் மற்றும் கட்டுமான தளங்களில் பணிபுரிவது, நீண்டகால (பல நாட்கள் அல்லது பல மாதங்களுக்கு தங்கி பணி செய்வது) வேலைக்கு சென்று குறுகிய காலத்திற்கு மட்டுமே வீடு தங்குவது போன்ற வேலைகள் மூலம் சற்றே அதிக வருமானம் ஈட்ட முயற்சிக்கின்றனர்.
சீர்குலைத்த கொரோனா
பெரும்பாலான மாநில அரசாங்கங்களிடம் இருந்து எந்தவொரு அக்கறையுள்ள பதிலும் இல்லாத நிலையில், சமீபத்திய தலைமுறைகளில் தாங்களே தங்கள் கவலைகளை சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்கி கொண்டுள்ளனர், ஆனால் இவை அனைத்தும் கொரோனா (COVID-19) காலத்தில் சீர்குலைந்தன.
கிராமப்புற நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது, கடந்த இருபது ஆண்டுகளில் தேசிய அளவிலான ஒரே ஆறுதலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் வடிவத்தில் வந்துள்ளது. இந்த சட்டத்தை இயற்றுவதற்கும் அதற்கு ஒரு முக்கியமான இடத்தை வழங்குவதற்கும் தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் முயற்சியே காரணம் என்றாலும், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன், ஆரம்பத்தில் இந்த திட்டம் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் விமர்சிக்கப்பட்டாலும், சட்டம் தக்கவைக்கபட்டுள்ளது, அதே நேரம் போதுமான நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. கொரோனா (COVID-19) சிறப்பு தொகுப்பின் கீழ் மட்டுமே இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரளவிற்கு உயர்த்தப்பட்டது, ஆனால் அதற்குள்ளாக வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான தேவை உயர்ந்துவிட்டது, அது இத்திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட நிதி வளர்ந்து வரும் கிராமப்புற மக்களின் துயரங்களுக்கு, குறிப்பாக நிலமற்றவர்களிடையே போதுமானதாக இல்லை என்பதை நிரூபித்தது.
இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்னர் “வேலை வாய்ப்பு உத்தரவாத கூறுகளில்” மாற்றம் செய்யப்பட்டது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளின்படி அரசாங்கத்தால் வேலை வழங்க முடியாவிட்டால், அது வேலைவாய்ப்பு கோருபவர்களுக்கான வேலையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் அதனை ஈடுசெய்யும் இழப்பீட்டு தொகையை வழங்கும் என்ற உத்தரவாதம் உள்ளது. இதற்கான அனுமதியை வழங்குவது நிதித்துறைக்கு உட்பட்டது என்று சேர்த்து இருப்பதன் மூலம் இதை நீர்த்துபோக செய்துவிட்டது. எனவே உத்தரவாதத்தின் சட்ட அம்சம் பலவீனமடைந்தது. இது நடைமுறையில் இந்த இழப்பீட்டு தொகை 95%க்கும் அதிகமான வழக்குகளில் வழங்கப்படாமல் இருப்பதற்கான சூழ்நிலைக்கு வழிவகுத்தது.
அலுவல் பதிவுகளில் காணப்படுவது போல வரவு செலவு திட்ட(Budget) ஒதுக்கீடு மற்றும் செலவினங்களின் அடிப்படையில் இத்திட்டம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையிலும், அதன் ஊழல் நிறைந்த செயலாக்கம் ஏழை நிலமற்றவர்களின் உரிமையை மேலும் தாமதப்படுத்துவதாக அமைகிறது, அவர்களில் பலர் இச்சட்டத்தின் மேல் நம்பிக்கையை இழந்துள்ளனர். ஒரு வேளை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருந்தால், இச்சட்டத்தின் மீது மெய்யாகவே நம்பிக்கை அடைய செய்திருக்கும். எனவே இச்சட்டம் இருக்க வேண்டும், இந்த சட்டத்தை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இதை பற்றிய பிரச்சாரத்தை விரிவாக கொண்டு செல்ல வேண்டும், இது அதிகாரிகளின் கணினித்திரைகளில் அல்லது அதிகாரத்துவத்தின் கைபேசிகளில் மட்டுமே காணப்படுவதாக இல்லாமல் யதார்த்தத்தில் நிலமற்றவர்களின் துயர் களைவதாக அமைய வேண்டும்.
எவ்வாறாயினும், அதிகம் பாதிக்கபடக்கூடிய கிராமப்புற நிலமற்றவர்களின் வளர்ந்து வரும் எண்ணிக்கையானது, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு இந்த திட்டத்தால் போதுமான நம்பகதளத்தை வழங்க முடியாது என்பது தெளிவாகிறது. எனவே இதற்காக கூடுதல் நடவடிக்கைகள் தேவை.
குறைந்தபட்ச நிலம் உறுதி தேவை
முதன்மையான நடவடிக்கையாக அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் ‘குறைந்தபட்ச நிலம் வைத்திருத்தல்’ என்ற கருத்தை அடிப்படையாக கொள்வது. இது ஒரு சிறிய முன்னெடுப்பு மட்டுமே,
ஆனால் நீர் மற்றும் நீர்வள பாதுகாப்பு / சொட்டு நீர்ப்பாசனம் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டு, வேளாண் சூழலியல் அணுகுமுறையை பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில் நிறைவாக பயிரிட்டால் அம்மக்களின் உணவு பாதுகாப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் கிராமத்துடன் உறுதியான பிணைப்பு ஏற்பட வழிவகை செய்ய முடியும்.
எப்போதும் ஏழைகளுக்கு கொடுப்பதற்கான நிலம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது, ஆனால் பெருநிறுவனங்களுக்கு தேவையான நிலம் எப்போதும் கிடைக்கிறது என்பதையும், முழு அரசாங்க துறைகளும் இதை எளிதாக்க உதவுகின்றன என்பதையும் நாம் காண்கிறோம். அதே போல் கிராமப்புற நிலங்களும் நகர்ப்புற பணக்காரர்கள் மற்றும் பணம் படைத்தவர்களிடம் செல்கின்றன. இந்திய ஒன்றியத்தில் தற்போதைய அதிகார சமநிலையில் கிராமப்புற நிலங்கள் அனைவருக்கும் அதிகம் தேவைப்படுவதையும், இது மிகவும் தேவையான கிராமப்புற நிலமற்ற தொழிலாளர்கள் தவிர அனைவருக்கும் கிடைக்கிறது என்று தெரிகிறது.
நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும் போது மட்டுமே நிலப்பற்றாக்குறை என்ற காரணம் கூறப்படுகிறது. எனவே இந்த மோசடியான கருத்தை ஏற்று கொள்ளக்கூடாது. மேலும், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் உட்பட அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச நிலம் வழங்குவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும்.
நிலமற்றவர்களாகும் சிறு குறு விவசாயிகள்
இறுதியாக, சிறு விவசாயிகளிடம் உள்ள சிறு அளவிலான நிலங்களையும் இல்லாமல் செய்யும் முறை தவிர்க்கப்பட வேண்டும். 2001-11 ஆம் ஆண்டுகளில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 12.7 கோடியிலிருந்து 11.8 கோடியாக குறைந்ததுள்ளது. அதாவது 10 ஆண்டுகளில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 90 லட்சம் குறைந்துள்ளது, இன்னும் சரியாக சொல்வதானால் ஒரு நாளைக்கு சுமார் 2,300 நபர்கள் என்ற எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. இந்த நிலங்களின் பெரும்பகுதி ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு சென்றுள்ளது.
மஹாரஷ்டிர மாநிலம் விதர்ப்பாவில் உள்ள ஒரு கிராமத்திற்க்கு நீங்கள் சென்றால், உடனடியாக நிலத்தை விற்கும் இடைத்தரகர்களால் நீங்கள் சூழப்படுவதை காணலாம், அவர்கள் கிராமத்தின் நிலங்களை சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக காத்திருக்கின்றனர். நிலம் வாங்குபவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து அவ்வபோது வருகை தருகிறார்கள் என்பதை இது உறுதிபடுத்துவதை நாம் உணரலாம்.
பல ஏழை மற்றும் கடன்பட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதும், அப்பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் உட்பட பெரும் பணக்காரர்கள்தான் இவர்களின் நிலங்களை வாங்குபவர்களாக இருப்பதும் பல கிராமவாசிகள் மூலம் நாம் அறியலாம்.
விவசாய நில விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும்
விவசாய நில விற்பனை கண்காணிக்கப்பட வேண்டும் சிறு விவசாயிகளின் நிலங்கள் காக்கப்பட வேண்டும். குறைந்த செலவிலான வேளாண் சூழலியல் அணுகுமுறையை ஊக்கப்படுத்த வேண்டும். நீர் பாதுகாப்பு மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்தை பெரிய அளவில் உயர்த்த அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டும், அதே நேரத்தில் வேளாண் சூழலியலை மேம்படுத்துவதும் அவசியமாகிறது. கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஊக்கமளிக்கும் விலையை வழங்குவதன் மூலம் அரசாங்கமே அவற்றை வாங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் கடன்களும் அரசாங்க உதவியுடன் படிப்படியாக குறைக்க முடியும்.
இதன் மூலம் கிராமப்புற நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் சிறு விவசாயிகளாக மாற உதவுவதோடு, சிறு விவசாயிகளின் நிலத்தின் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற இருவழி அணுகுமுறை கிராமப்புற வறுமையை குறைக்கவும், இந்திய ஒன்றியத்தின் விவசாய நெருக்கடியை தீர்க்கவும் பெரிதும் உதவும்.