1,தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும் உயர் நீதிமன்றம்
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி நடத்தக் கோரி கரூரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கொங்கு மண்டலத்தில் உள்ள கல்யாண பசுபதீஸ்வர் கோயில் 900 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் தமிழ் மன்னர்கள் தரிசனம் செய்ததாக வரலாறு உள்ளது. தமிழ் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் குடமுழுக்கு விழாவானது 4.12.2020 அன்று நடைபெற உள்ளது. அதனால், எங்கள் பகுதியில் உள்ள மக்கள் இந்த கோயிலில் தமிழ் சைவ ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என்றும் தேவாரம், திருவாசகம் ஓதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளருக்கும் கோயில் தரப்பினருக்கும் மனு செய்திருந்தோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆகவே, கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா தமிழ் சைவ ஆகம முறைப்படி தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு தமிழில் குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று கோரிகை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்து கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும்போது இனிவரும் காலங்களில் கட்டாயம் தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
2.விவசாயிகளுக்கு ஆதராவாக போராடியவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்
விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் கடலூர் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், விவசாயிகள் அமைப்பைச் சார்ந்தவர்களையும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வழியிலேயே தடுத்து கீழே தள்ளியுள்ளனர். காவலர்களின் முரட்டுத்தனத்தால் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அங்கும் அராஜகமான முறையில் மிரட்டியுள்ளனர். இதனை கண்டித்து அனைவரும் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். மேலும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 12 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இதனை சிபி எம் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் புதுதில்லியில் திரண்டு போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பொதுமக்களும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பி வரும் நிலையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. இவ்வியக்கங்களை முடக்குவதற்கு காவல்துறையினர் தடுப்பு வேலி அமைப்பது, முன்னணி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று கூட பாராமல் தடியடி நடத்துவது, தாக்குவது, பொய்வழக்கு புனைவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
3.மராட்டிய அரசின் முற்போக்கான முடிவு ஸ்டாலின் பாராட்டு
“குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கும் மராட்டிய அரசின் முற்போக்கான முடிவு வரவேற்புக்குரியது; முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில் மராட்டிய மாநிலம் முழுமையும் பிராமணர்கள் – மகர்கள் எனச் சாதி ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான பெயர்களைத் தாங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் அப்பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பெயர்கள் சூட்டப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சாதிப் பெயர்களைக் கொண்ட மகர் வாதா, பிராமண் வாதா, மங் வாதா, தோர் வஸ்தி, பௌத் வாதா, மல்லி கல்லி போன்றவை ஒழிக்கப்படும் என்றும்; அவற்றுக்கு மாற்றாக சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி நகர் என்ற புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் எனவும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அம்பேத்கர் அவர்கள் பெயரில் வழங்கப்படும் விருதும், அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளாகப் பரவிப் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பாகுபாடுகளை – அதன் விளைவாக நேர்ந்த கொடுமைகளை – வன்மத்தை அகற்றிட, தொடர்ச்சியான செயல்பாடுகள் தேவை. அனைத்து மாநிலங்களிலும் அவை பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள, சாதிக் குடியிருப்புகளின் பெயர் மாற்ற முடிவினை, பெரியார் மண்ணிலிருந்து – கலைஞரின் உடன்பிறப்பாக இதயப்பூர்வமாக வரவேற்றுப் பாராட்டி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார் .
4.ரஜினியை இயக்கும் பாஜக
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிமுகப்படுத்தினார்.
அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன் மூர்த்தியை ரஜினிகந்த் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்திருப்பதன் மூலம் ரஜினியை பாஜக இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
5.விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல்
போராடும் விவசாயிகளுக்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு! அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் -விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல்
6.தமிழகத்தில் கோரானா எண்ணிக்கை
தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி,
புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,416
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,86,163.
சென்னையில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 382
சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,16,496 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,413 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
7.மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூர் உட்பட பலர் ஆஜராகவில்லை.
பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கேணல் பிரசாத் புரோஹித் உட்பட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று வியாழக்கிழமை(3/12/2020) சிறப்பு புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி பி.ஆர்.சிட்ரே உத்தரவிட்டு இருந்தார்.
இதனைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் டிசம்பர் 19 ம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை இனி தினம் தோறும் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 29, 2008 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் என்ற நகரத்தில் ஓர் மசூதி அருகே வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
8.அர்னப் கோஸ்வாமி புது வழக்கு
அன்வே நாயக் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது மற்றும் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு தடை கோரி பத்திரிகையாளர் அர்னப் கோஸ்வாமி வியாழக்கிழமை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதேஷ் சர்தா ஆகியோர் திரும்ப செலுத்த வேண்டிய 5.4 கோடி பண தொகையை தர மறுத்த காரணத்தால் அன்வே நாயக் மற்றும் அவரது தாயார் மும்பையில் தற்கொலை செய்துகொல்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமி உட்பட மூவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் சில நாட்களிலேயே அர்னாப் உச்ச நீதிமன்றத்தில் பிணை வாங்கி வெளியேவந்தது குறிப்பிடத்தக்கது.
9.பேச்சுவார்த்தை தோல்வி
ஒன்றிய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய 4 ஆம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் உள்ள ‘விஞ்ஞான் பவனில்’ நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், உடனடியாக ஒரு சிறப்பு பாராளுமன்ற அமர்வு ஏற்பாடு செய்து புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள விவசாய விரோத சட்டங்களை நீக்க வேண்டும் என விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அடுத்த கட்ட சந்திப்பு கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கடந்த செப் மாதம் நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து கடந்த 8 நாட்களாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் தொடங்கிய டில்லி போராட்டம் தீவிரம் அடைந்து வந்தது. இதனை தொடர்ந்து போராட்டத்தை நிறுத்த கோரி முன் நிபந்தனைகலுடன் அரசு அழைத்ததை ஏற்க்க மறுத்து வந்த விவசாயிகள், இன்று (3/12) முன் நிபந்தனைகள் எதுவும் வைக்காமல் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்த சூழலில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
10.சென்னையில் மழை
புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டுகிறது. நேற்று இரவு வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி நகர், கிண்டி, திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.