ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள உப்பூர் அனல்மின் நிலையத்திற்கான பணிகளை நிறுத்துமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உப்பூர் அருகே 1600 மெகாவாட் மின் திறனுள்ள அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கு கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியமானது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதியினைப் பெற்றிருந்தது.
இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள உலையைக் குளிரிவிப்பதற்காக தண்ணீரை எடுத்து வருவதற்கு கடலுக்குள் பாலம் அமைக்கும் திட்டத்தினையும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டிருந்தது.
கிராம மக்களின் எதிர்ப்பு
உப்பூரில் அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கு சுற்றியுள்ள கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த அனல்மின் நிலையம் அமையும் பட்சத்தில் அருகிலுள்ள ஏரிகள், விவசாய நிலங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீனவர்களின் போராட்டம்
மேலும் கடலுக்குள் பாலம் அமைக்கப்படும் பட்சத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படும் என்று மீனவர்கள் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது, தேவிபட்டினம் முதல் உப்பூர் வரை உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டிக் கொண்டு கடலுக்குள் சென்று போரட்டத்தில் ஈடுபட்டனர்.

8 கி.மீ நீளத்திற்கு கடலில் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதனால் தேவிபட்டினம் தொடங்கி தொண்டி வரையுள்ள கிராம மக்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடல் வாழ் உயிரினங்களின் நிலை
மேலும் இப்பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள், கடல் புற்கள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்ற உயிரினங்களும் அழிந்துவிடும் என்றும் எதிர்த்தனர். 2019-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது நடைபெற்ற கிராம சபா கூட்டங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சுற்றுச்சூழல் மாசுபாடு
இதுமட்டுமல்லாமல், இந்த அனல்மின் நிலையத்தில் 100% சதவீதம் இறக்குமதி நிலக்கரியைப் பயன்படுத்தாமல், 70:30 என்ற அளவில் உள்ளூர் நிலக்கரியைக் கலந்து பயன்படுத்த உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. உள்ளூர் நிலக்கரியானது அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதால், இப்பகுதியில் காற்று மாசுபாடு மிக மோசமடையும் என்பதும் கிராம மக்களின் கருத்தாக இருக்கிறது.
பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த கிராம மக்கள்
இதனையடுத்து கிராம மக்களைச் சேர்ந்தவர்கள் உப்பூர் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். மின்வாரிய அதிகாரிகள் உப்பூர் அனல்மின் நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 26% மட்டுமே விவசாய நிலங்கள் என்றும், மேலும் சுற்றுச்சூழல் அனுமதி விதிமுறைகளோ, கடற்கரை மேலாண்மை பகுதி விதிமுறைகளோ எதுவும் இத்திட்டத்தில் மீறப்படவில்லை என்று தெரிவித்தனர்.
தீர்ப்பாயத்தின் உத்தரவு
வழக்கினை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், உப்பூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலக்கரி ஆய்வினை மீண்டும் புதிதாக மேற்கொள்ளுமாறும், பாலம் கட்டுவதில் எழும் சிக்கல்கள் குறித்து மீண்டும் ஆராயுமாறும் கூறியுள்ளது. அடுத்த 6 மாத காலத்திற்குள் மீண்டும் சுற்றுச்சூழல் விதிகளை மீளாய்வு செய்து, சுதந்திரமான நிபுணர் குழுவின் முழுமையான விசாரணைக்குப் பின்பு புதிய அனுமதியினை வழங்குமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்கள்
தமிழ்நாட்டில் மொத்தம் 13,756 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவை தனது மொத்த உற்பத்தித் திறனில் 56% திறனுடன் மட்டுமே இயக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே பெரும் கடனிலும், நட்டத்திலும் இயங்கிவரும் நிலையில் புதிதாக 7,385 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்களை கட்டி வருகிறது.
எண்ணூர் விரிவாக்கத் திட்டன், உப்பூர் அனல் மின் நிலையம், உடன்குடி 1-2 நிலையம் போன்றவை கட்டுமானத்தின் துவக்க கட்டத்தில் உள்ளன.
பழைய அனல்மின் நிலையங்களை மூடுவதால் நிதியை சேமிக்கலாம் எனும் அறிக்கை
உற்பத்தித் திறன் மிகக் குறைவாகவும், மிகப் பழையதானதுமான அனல்மின் நிலையங்களை, புதுப்பிப்பதற்கு செலவழிப்பதற்குப் பதிலாக, அவற்றை மூடுவதன் மூலம் மின்சார வாரியத்தின் நிதி சிக்கலை ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பு ஆய்வறிக்கையினை வெளியிட்டிருந்தது.
தமிழ்நாடு தற்போதைக்கு மின்மிகை மாநிலமாக இருப்பதால், பழைய அனல்மின் நிலையங்களை மூடுவதன் மூலமும், புதிதாக பரிந்துரைக்கப்பட்ட எண்ணூர் விரிவாக்கம், உப்பூர் மற்றும் உடன்குடி 1-2 நிலையங்களின் பணிகளை நிறுத்துவதன் மூலமும் 34,100 கோடி ரூபாய் வரையில் மின்வாரியத்தினால் சேமிக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெருகிவரும் தமிழ்நாட்டின் மின் தேவையினை மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களில் இருந்தும், வெளிச்சந்தையில் கிடைக்கும் மின்சாரத்தினை வாங்கியும் சரிசெய்து கொள்ள முடியும் என்று அந்த அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது. வெளிச்சந்தைகளில் யூனிட் 4 ரூபாய்க்கு மேலாக மின்சாரத்தை வாங்கக்கூடாது என்றும் அந்த அறிக்கை கூறியிருந்தது.
வெளிச்சந்தையில் வாங்குவது நிரந்தரத் தீர்வாக இருக்காது என்றும், மின் தேவை அதிகரித்தால் விலை அதிகரித்துவிடும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.