ஆசிய-பசுபிக் பிராந்திய வணிகத்தில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முன்னணி இடத்தை எட்டியுள்ளது. பிரிட்டிஷ் பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனமான HSBC நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் ஆசிய- பசுபிக் பிராந்திய நிறுவனங்களுடனான வணிகத்தில் அமெரிக்க நிறுவனங்களை விட சீன நிறுவனங்கள் கூடுதலான வணிகத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
உலக வணிக பரிமாற்ற சங்கிலியில் (Global Supply Chain) சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக வணிக பரிமாற்ற சங்கிலியில் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவினை விஞ்சும் அளவிற்கு சீனாவின் வளர்ச்சி உள்ளது. சீனாவின் இத்தகைய வளர்ச்சிப் போக்கானது இவ்விரு நாடுகளுக்கும் இடையே வணிகப் போரினை உருவாக்கியுள்ளது.
சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள்
அமெரிக்காவில் குறிப்பிட்ட சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது. சீன தொழில்நுட்ப (Chinese Technology Inventions) உற்பத்தி பொருட்களுக்கும், செயலிகளுக்கும் தடை விதித்திருக்கிறது. மேலும் சீனாவிற்கெதிரான தொடர் எதிர்- பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை ‘சீன வைரஸ்’ என்ற அமெரிக்காவின் பிரச்சாரம் இத்தகையதே.
அமெரிக்காவின் எதிர்முக நாடுகளுடன் உறவை பலப்படுத்தும் சீனா
மறுபுறம் சீனாவோ அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் அமெரிக்க எதிர் முகாம் நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. அத்தகைய நாட்டில் ஒன்றான ஈரானுடன் புதிய பொருளாதார ஒப்பதங்களை உருவாக்குகிறது; வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ஆசிய-பசுபிக் பிராந்திய வணிகத்தில் முன்னணி இடம் பெற்ற சீனா
அமெரிக்க-சீன வர்த்தகப் போட்டியில் கொரோனா பெருந்தொற்றானது அமெரிக்காவிற்கு பின்னடைவினை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்குலகமயமான உலக வணிக பரிமாற்ற சங்கிலியை கிழக்குலகமயமாக மாற்றியிருக்கிறது. அதனது வெளிப்பாடாகத் தான் ஆசிய-பசுபிக் பிராந்திய வணிகத்தில் சீனா முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
HSBC நிறுவனமானது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் 39 நாடுகளிலுள்ள 10,400 நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்நிறுவனங்களில் 28 சதவீத நிறுவனங்கள் அமெரிக்காவுடனும், 29 சதவீத நிறுவனங்கள் சீனாவுடனும் வணிக உறவைக் கொண்டுள்ளது இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
RCEP ஒப்பந்தம்
இந்நிலையில் கடந்த மாதம் சீனாவின் முன்னெடுப்பில் தென்-கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தம் (RCEP- Regional Comprehensive Economic Partnership Agreement), சீனாவின் வணிக மேலாதிக்கத்தை விரிவுப்படுத்தக்கூடியது.
உலகின் மிகப்பெரிய வணிக ஒப்பந்தமான இவ்வொப்பந்தத்தில் மொத்தம் 15 தென்-கிழக்கு ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது 26,20,000 கோடி ரூபாய் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடையது.
இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி
சீன அதிபரின் இந்திய வருகையின் போதான பேச்சுவார்த்தை உட்பட பல்வேறு வழிகளிலும் முயற்சி கொண்டும், இந்தியா இந்த தென்- கிழக்கு ஆசியப் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திடவில்லை.
இந்திய உள்நாட்டு உற்பத்தி மற்றும் விவசாயத்தினை பாதிக்கக்கூடிய இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாதென கடந்த ஆண்டே இந்திய சமூக அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் இவ்வொப்பந்த புறக்கணிப்பு அதன் காரணமாக நடந்ததாக இல்லை. மாறாக இந்திய உள்நாட்டு உற்பத்தியையும், விவசாயத்தையும் பெருமளவில் பாதிக்கக்கூடிய பல்வேறு வகையான ஒப்பந்தங்களை இந்தியா, அமெரிக்காவுடன் கையெழுத்திட்டுள்ளது.
கடந்த மாதத்தில் நடந்த இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான 2+2 கூட்டத்தில், அமெரிக்க விவசாயப் பொருட்களை இந்தியாவில் தங்குத்தடையின்றி இறக்குமதி செய்வதற்கான சில்லரை வணிக ஒப்பந்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. ஆக, இந்திய அரசு, தென்- கிழக்கு ஆசிய பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை (RCEP) புறக்கணித்த நிலைப்பாடு என்பது அமெரிக்க சார்பு நிலைப்பாட்டின் காரணமாக விளைந்ததே. இந்தியாவின் தற்சார்பு நிலைப்பாட்டினால் விளைந்ததன்று.
சீனாவின் வணிக மேலாதிக்கப் போக்கு அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தென்-கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் முகமையாக இந்தியா மாறியுள்ளதையே மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அமெரிக்காவின் தென்- கிழக்கு ஆசிய, இந்தோ- பசுபிக் பிராந்திய புவிசார் அரசியலின் ஆடுகளமாக இந்தியா மாறியிருக்கிறது. இந்தியாவின் இந்நிலையானது இந்திய மக்களின் சமூக- பொருளாதார நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கிறது.