பெரியார்

’தி இந்து’ 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னிப்பு கேட்டது நினைவில்லையா?

சேலத்தில் 23-1-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு மற்றும்   ஊர்வலம் நடத்த திராவிடர் கழகத்தால் முடிவு  செய்யப்பட்டது. இன்றைய பாஜக-வின் தாய் அமைப்பான ஜனசங்கம், மாநாட்டைத் தடுக்க முயற்சிகள்  எடுத்தும் முடியாததால் தந்தை பெரியார் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, அந்த ஊர்வலத்திற்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு அனுமதி கேட்டார்கள். அன்றைய திமுக அரசு அதற்கான அனுமதியை அளித்தது. அப்போது சேலம் தீயணைப்பு நிலையத்திற்கு எதிர்புறத்தில் நின்று 50 பேர் கருப்புக்கொடி காட்டினார்கள்.

கூட்டத்தில் வீசப்பட்ட செருப்பு

தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். விழுந்த செருப்பு ராமர் படம் எடுத்துச் சென்ற வண்டியின் அருகில் விழுந்தது. உடனே அந்த செருப்பை எடுத்து கூட்டத்திலிருந்தவர்கள் ராமர் படத்தை செருப்பால் அடித்தார்கள் என்பது உண்மைதான். அது குறித்து பின்வருமாறு பெரியார் பேசியும் எழுதுயும் வந்திருக்கிறார்.

”ஊர்வலம் வந்து கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் 30, 40 பேர் கருப்புக் கொடியை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் வளைத்து நின்று கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்கின்ற தைரியத்தில் கருப்புக் கொடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் ஒரு செருப்பை எடுத்து ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வீசினான். 

ஊர்வலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். நான் கண்டிக்காவிட்டால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கும். அவன் வீசிய அந்தச் செருப்பை எடுத்து ஒரு தோழர் ஊர்வலத்தில் வந்த இராமன் உருவத்தை அடித்தார். அதைப் பார்த்து மற்ற தோழர்களும் தங்கள் தங்கள் செருப்பாலடிக்க ஆரம்பித்தனர். இதுதான் நடந்த உண்மை யாகும். 

இதை அவர்கள் தி.மு.க அரசு உத்தரவு கொடுத்தார்கள். அந்த உத்தரவின் பெயராலேயே அடித்தோம் என்று பிரசாரம் செய்தான்; பத்திரிகைகளில் எல்லாம் எழுதினான்.”

 28.03.1971 அன்று மதுரையில் தந்தை  பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -(“விடுதலை”, 11.05.1971)

மாநாட்டிற்குப் பின் பரப்பப்பட்ட பொய் செய்திகள்

மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஆரம்பத்தில் இருந்தே தடுக்க  முயன்றவர்கள் தடுக்க முடியாது போனதால் மாநாட்டிற்குப் பின் மாநாட்டின் தீர்மானங்களை திரித்தும், இந்து கடவுள்களை திமுகவின் ஆதரவுடன்  அவமதித்து விட்டதாகவும் பொய்களைப் பரப்பினர். 

தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, துக்ளக் உள்ளிட்ட ஏடுகள் தீர்மானத்தை திரித்து வெளியிட்டன. உண்மைக்கு மாறாக செய்தியை வெளியிட்டதற்காக மேற்கண்ட ஏடுகள் மீது இ.பி.கோ. 500 மற்றும் 501 ஆகிய பிரிவுகளின்படி வழக்கு தொடுக்கப்பட்டது. சேலம் மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவர் பேராசிரியர் டி.வி.சொக்கப்பா இந்த வழக்கினைத் தொடர்ந்தார். 

மன்னிப்பு கேட்ட தி இந்து

9.2.1971 அன்று சென்னை பிரதம மாகாண மாஜிஸ்திரேட் திரு.எஸ்.நடராசன் அவர்கள் முன் தனியார் கிரிமினல் வழக்காகத் தொடுக்கப்பட்டது. வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையிலும், இந்து ஏடு வேண்டுமென்றே பழைய பாணியில் (14.2.1971) ஒரு செய்தியை வெளியிட்டது. இது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி, திராவிடர் கழகப்   பொறுப்பாளர் கி. வீரமணி  அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 17.2.1971 அன்று வழக்கொன்றைத் தொடுத்தார். அந்த வழக்கு 16.3.1971 அன்று நீதிபதிகள் கே.வீராசாமி, வி.வி.இராகவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்து பத்திரிக்கை சார்பில் உண்மையான, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரப்பட்டதன் பேரில் வழக்கு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. 

துக்ளக் பத்திரிக்கையின் புரட்டுகள்

சேலம் மாநாடு பற்றியும், தீர்மானங்கள் குறித்தும், இராமன் படத்தை அடித்தது  குறித்தும் அப்பொழுதும் துக்ளக் மானாவாரியாக எழுதிக் குவித்தது. அன்று முதல்வராக இருந்த  கருணாநிதி இந்து விரோத செயல்களை  ஆதரிப்பதாகவும், பெரியார் மீதும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும்    எழுதியது. பெரியாரே நேரடியாக ராமன் படத்தை செருப்பால் அடிப்பது போல திரித்து வெளியிட்டது. 

தொடர்ச்சியாக பொய்களை எழுதுவதோடு அதை அன்றைய திமுகவிற்கு எதிரான பிரச்சாரமாக மாற்ற முயன்றது துக்ளக். சேலம் மாநாட்டு நிகழ்வுகள் குறித்து போலீசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், பெரியாரை பொறுத்தவரை அவர் புரட்சிகரமாக சிந்திக்கக் கூடியவர், அவருக்கு அந்த உரிமை உண்டு என்றும் முரசொலியில் வந்த செய்தியைக் கொண்டு திமுக இந்து விரோத கட்சி என்று பரப்புரை செய்தது. ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் திமுகவுக்கா ஓட்டு என்று பிரச்சாரம் செய்தனர். 

1967-ல் 138 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, மூடநம்பிக்கை ஒழிப்பு  ஊர்வலத்திற்குப்பின் நடைபெற்ற தேர்தலில் 183 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலின் முடிவு என்பது மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை முன்வைத்து பெரியாருக்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரங்களை, தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தது.

அம்பலப்பட்டுப் போன புரட்டினை மீண்டும் கொண்டுவரும் தி இந்து நாளிதழ்

அன்று பொய் செய்தி பரப்பி மன்னிப்பு கேட்ட தி இந்து, இன்று வரலாற்று  அடிப்படையில் அதன் மறு பிரதியை வெளியிட்டுள்ளது. பெரியாருக்கு எதிராகவும், துக்ளக் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும் சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராடியதாக எழுதியுள்ளது. கழுத்தை தலையோடு ஒட்டிவிட்டால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு இம்சை அரசன் 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்பது தெரியவா போகிறது என்கிற வடிவேலுவின் கதையைப் போல இருக்கிறது இன்று தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள அன்றைய பொய் Archive.

சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு மாணவர்களிடமும், மக்களிடமும் பெரிய எதிர்ப்பை உருவாக்கியதாக அன்று காட்ட முயன்று தோற்றுப் போன தி இந்துவின் பத்திரிக்கை தர்மம், மீண்டும் அந்த வரலாற்றுப் புரட்டினை ஆவணம் என்று காட்டி இன்று வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *