கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்கக் கோரியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் கட்டமைப்பு சிக்கல் காரணமாக மெட்ராஸ் ரேடிகல்ஸ் இணையதளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
படிக்க: அத்திப்பட்டியாக மாறும் இரயுமன்துறை கிராமம்! மீனவர்கள் கேட்பது என்ன?
நுழைவுவாயிலில் பெரிய மணற்திட்டு உருவாகியிருப்பதால் பல சமயங்களில் பேரலைகள் எழுகிறது. இதனால் கரையில் இருந்து கடலை நோக்கிச் செல்லும் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். கடலுக்கு செல்லும் பைபர் படகுகள் தூக்கி வீசப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் கடந்த ஒன்றரை வருடத்தில் 5 மீனவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று மீன்பிடி துறைமுகத்தில் தேங்காய்பட்டணம் முக்கியமானதாகும். ரூபாய் 97.40 கோடி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த துறைமுகம் கடந்த ஆண்டு மே மாதம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இது 300 பைபர் படகுகளும், 500 ஆழ்கடல் விசை படகுகளும் கட்டப்படும் வசதி கொண்டது. இது தமிழக எல்லையில் கடைசி துறைமுகம் என்பதால் இங்கிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்பவர்கள் அதிகம்.
இந்த துறைமுகத்தில் கட்டுமான நிறுவனத்தின் குறைபாடு காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டு மீனவர்கள் உயிர் பலியாக்கப்படுவது தொடர்கிறது. பலமுறை இந்த துறைமுகத்தை சீரமைக்கக்கோரி மீனவர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
மீனவர்களின் கோரிக்கைகள்
- தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்கக் கோரியும்,
- துறைமுகத்தை 500 மீட்டர் விரிவாக்கம் செய்யக்கோரியும்,
- சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,
- உயிரிழந்த 5 மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும்,
- அவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும்
கன்னியாகுமரி சின்னத்துறை கிராம சந்திப்பில் அனைத்து மீனவ சமுதாயங்களும் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
அரசு உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை என உறுதியாக சொல்கிறார்கள். ஏனென்றால் ஒவ்வொரு முறை தாமதப்படுத்தப்படும்போதும் உயிரிழப்புகள் தொடர்வதாக சொல்கிறார்கள்.