முகேஷ் அம்பானி

ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு

இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்போரின் சொத்து மதிப்பு கொரோனா ஊரடங்கு காலத்தில் 20% சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பது IIFL Hurun India நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பு கொண்டோரை பெரும் பணக்காரர்கள் என்று வரையறுத்து அவர்களின் பட்டியலை இந்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 1000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டோராக 828 பேர் இருக்கிறார்கள் என்று பட்டியலை வெளியிட்டுள்ளது. 

ஊரடங்கு காலத்தில் உணவிற்கே வழியின்றி, ஊருக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் கூட இன்றி நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள் தொழிலாளர்கள். இந்தியாவின் பொருளாதாரம் மைனஸ் 23% என்ற சரிவை நோக்கிச் சென்றது. சிறு குறு தொழில் செய்வோர் அனைவரும் தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நின்றனர். ஆனால் இந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் மிகப்பெரும் உயர்வினை சந்தித்திருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.

ஊரடங்கில் அம்பானியின் சொத்து 73% உயர்வு

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் இந்த ஊரடங்கு காலத்தில் 73% சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்ட காலம் தொடங்கியதில் இருந்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2,77,700 கோடி அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6,58,400 கோடியாக இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

10 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்த பணக்காரர்களின் சொத்து

  • இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள 828 பேரின் சொத்து மதிப்பு 60,59,500 கோடி ரூபாய். இது இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பான GDP மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமானதாகும்.
  • இந்த மதிப்பு ஊரடங்கு காலத்தில் மட்டும் 10,29,400 கோடி அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் சேர்த்து கொரோனா ஊரடங்கு நிவாரணமாக அரசு செல்வழித்த பணம் என்பது இந்த 10 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் மிகச் சிறு சதவீதமே ஆகும்.
  • இப்பட்டியலின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டுமே இந்த மொத்த பட்டியலில் இருப்போரின் சொத்து மதிப்பில் 64 சதவீதம் ஆகும்.
  • டாப் 5 குடும்பங்கள் மட்டும் இந்த மொத்த மதிப்பில் 21% அளவிற்கான சொத்துக்களை வைத்திருக்கின்றன.
  • அம்பானியின் சொத்து மதிப்பு 73 சதவீதமும், அதானியின் சொத்து மதிப்பு 48 சதவீதமும், ராதாகிஷன் தமானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 56 சதவீதமும், ஷிவ் நாடார் குடும்ப சொத்து மதிப்பு 34 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பெயர்சொத்து மதிப்புஅதிகரிப்பு
சதவீதம்
நிறுவனம்மாநிலம்
முகேஷ் அம்பானி6,58,400 கோடி73%ரிலையன்ஸ்மகாராஷ்டிரா
ஷிவ் நாடார் குடும்பம்1,41,700 கோடி34%HCLடெல்லி
கெளதம் அதானி1,40,200 கோடி48%அதானிகுஜராத்
ராதாகிஷன் தமானி 87,200 கோடி 56%அவென்யூ
சூப்பர் மார்க்கெட்
மகாராஷ்டிரா
திலீப் சங்வி84,000 கோடி17%சன் பார்மடிக்கல்மகாராஷ்டிரா

அதீத வளர்ச்சி பெற்ற மருந்து நிறுவன அதிபர்கள்

ஊரடங்கு காலத்தில் அதீத வளர்ச்சி பணக்காரர்களின் நிறுவனமாக மருந்து நிறுவனங்கள் இருக்கின்றன. 828 பணக்காரர்களின் பட்டியலில் 122 பேர் மருந்துப் பொருட்கள் தொடர்பான நிறுவனங்கள் நடத்துபவர்கள். அடுத்ததாக வேதியியல் மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் நடத்துபவர்கள் இருக்கிறார்கள். 55 பேர் வேதிப் பொருட்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் நடத்துபவர்கள். 

மும்பையில் மட்டும் 217 பணக்காரர்கள்

இந்த பட்டியலில் மும்பையை மையப்படுத்திய தொழிலதிபர்கள் மட்டும் 217 பேர் இருக்கிறார்கள். புதுதில்லியை மையப்படுத்தி 128 பேரும், மூன்றாவதாக பெங்களூரை மையப்படுத்தி 67 பேரும் இருக்கிறார்கள். சென்னையை மையப்படுத்தி 37 பேர் இருக்கிறார்கள்.

பாஜகவின் அரசியல் பிரதிநிதிகளாக இருக்கும் 5 பெரும் பணக்காரர்கள்

இந்த பட்டியலில் அரசியலை மையப்படுத்தி இயங்கும் பணக்கார தொழிலதிபர்களாக 11 பேர் இருக்கிறார்கள். அதில் 5 பேர் தற்போது பாஜக-வில் இருக்கிறார்கள். 

  • மேக்ரோடெக் நிறுவனத்தின் மங்கள் பிரபாத் லோதா, மேன் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் பராக் கிஷோர் ஷா ஆகியோர் பாஜகவின் சார்பில் மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
  • ஜூபிடர் கேபிடலின் ராஜீவ் சந்திரசேகர், செக்யூரிட்டி & இண்டலிஜன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் ரவீந்திர கிஷோர் சின்ஹா, வி.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் விஜய் சங்கேஷ்வர் ஆகியோர் பாஜகவின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். 

இப்பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் இரண்டு பேரும், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஒருவரும் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *