மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
தமிழ் கவிதை மரபில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களில் முதன்மையானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிறு கிராமத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி அம்மையாருக்கு மகனாக 13.04.1930 அன்று பிறந்தார். விவசாயக் குடும்பமாக இருந்த போதும் இவரது தந்தை கவிதை பாடும் புலமை பெற்றவர். ‘முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி’ எனும் நூலையும் அருணாச்சலனார் எழுதி இருக்கிறார். திண்ணைப் பள்ளியோடு கல்வியை நிறுத்திக் கொண்ட கல்யாணசுந்தரம் மாம்பழ வியாபாரம் முதல் 17 தொழில்களை செய்ய முயன்று இறுதியில் இளம்வயது முதல் தான் கொண்டிருந்த கவிபாடும் திறன் காரணமாக கவிஞரானார்.
விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு
இளம் வயதில் விவசாய சங்கத்திலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தவர். சிறு குறு விவசாயிகளின் உரிமைக்கும், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்கும் அன்று தஞ்சை மண்ணில் பெரும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் போராடிய தியாகிகள் சிவராமன், இரணியன் போன்றவர்களுடன் இணைந்து இயக்கத்தை கட்டி வளர்க்கும் பணியில் பங்கெடுத்தார். தான் பின்பற்றி வந்த கொள்கையை வளர்த்தெடுக்கவும் மக்களிடம் கொண்டு செல்லவும் கலையைப் பயன்படுத்தினார்.
திண்டுக்கல்லில் 1.8.1954 அன்று நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில், ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் ப.ஜீவானந்தம் அவர்களின் தலைமையில் நடந்தது. நாடகத்தின் அத்தனை பாடல்களையும் கல்யாணசுந்தரமே எழுதினார். நாடகத்தின் முடிவில் ஜீவா “மக்கள் கவிஞருக்குரிய தர உயர்வு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களில் ஒளி விடுகின்றன!” என்று பாராட்டினார்.
சக்தி நாடக சபா
நாடகக் கலையில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவும், நடிப்பின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாகவும் சக்தி நாடக சபா’வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ.ஏ.கே.தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர்.
பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்ந்தார்
சக்தி நாடக சபாவின் நாடகங்களை ஒவ்வொன்றாய் திரைப்படமாகின. அதன் காரணமாக சபாவின் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டு பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.
மருதகாசியின் பரிந்துரையால் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ’பாசவலை’ எனும் திரைப்படத்தை தயாரித்தபோது அப்படத்திற்கு பாட்டெழுத பாடலாசிரியர் மருதகாசி அவர்களை அழைத்தனர். அப்போது மருதகாசி, “என்னை விடவும் சிறப்பாக எழுதக்கூடிய என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பிவைக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். “பாரதிதாசனின் பட்டறையில் உருவானவன் என்றும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வான்” என்றும் கூறியிருக்கிறார்.
மருதகாசியின் பரிந்துரையில் மாடர்ன் தியேட்டர்ஸ்-க்குப் போன பட்டுக்கோட்டை முதல் கல்லையே பலமாக வீசியதை நாமறிவோம். அந்த பாடல்தான் “குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்” என்பது. அந்த ஒற்றைப் பாடலிலேயே தன்னை யாரென்று நிரூபித்து திரைத்துறையின் கயிற்றைப் பற்றி மேலேறியிருக்கிறார் பட்டுக்கோட்டை.
பெண்ணடிமைத்தன ஒழிப்பினை பாடல்களில் சாட்டையாய் சுழற்றினார்
சமூகத்தில் பெண்களின் தாழ்வுற்ற நிலைமையை தம் பாடல்களின் மூலம் வெளிக்கொணர்ந்து பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பட்டுக்கோட்டையார்,
“உலகிற்கு ஒளி அளிப்பது ஆதவன்
வாழ்விற்கு ஒளி அளிப்பது பெண்மை”
என்று பாடினார்.
ஒரு நாட்டின் மேன்மையை அந்நாட்டு பெண்களின் மூலம் கணக்கிட முடியும் என்பதே மக்கள் கவியின் கருத்தாகும்.
“ஆணுக்குப் பெண்கள் அடிமையென்று
யாரோ எழுதி வச்சாங்க”
என்று எழுதியவர் பட்டுக்கோட்டையார்.
பொது உடமைக் கருத்துக்களை பாடல்களில் முதன்மைப்படுத்தினார்
வெகுஜன ஊடகமாக திரைத்துறை அன்று திராவிட இயக்கத்தின் அரசியல் கொள்கைகளைப் பரப்ப பயன்படுத்தப்பட்டு வந்த காலத்தில், அதில் பொதுஉடைமை கருத்துக்களை இணைத்துப் பாடியவர் பட்டுகோட்டையார்.
”கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன்
காரணங்கள் இவை எனும் அறிவுமிலார்”
என்று பாரதி கேட்டதையே,
”அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே
சேர்ந்ததினால் வந்த தொல்லையடி”
என்று வறுமைக்கு காரணம் வேலை இல்லாதது மட்டுமில்லை. ஒருவர் உழைக்க அது இன்னொருவரிடம் குவிக்கப்படுவது தான் என்பதை எழுதியிருப்பார்.
”காலுக்குச் செருப்பும் இல்லை
கால் வயிற்றுக் கூழும் இல்லை”
என்ற ஜீவா-வின் புகழ் பெற்ற வரிகளின் கருத்தினை ஒத்த,
“கையில் ஒரு காசுமில்லை
கடன் கொடுப்பார் யாருமில்லை
கஞ்சிக்கொரு வழியுமில்லை
கொல் வறுமை தாழவில்லை
ஏங்கி இரந்துண்ணவோ எங்கள் மனம்
கூசுதடா”
என்று பசியிலும் பாட்டாளிகளின் தன்மான உணர்வைக் கைவிடாத அறத்தை பாடியவர் பட்டுக்கோட்டையார்
குல தெய்வம், ரங்கோன் ராதா, சக்கரவர்த்தி திருமகள், அலாவுதீனும் அற்புத விளக்கும், புதையல், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், அன்பு எங்கே, திருமணம், பதிபக்தி, தங்கப் பதுமை, கல்யாணப்பரிசு, நல்ல தீர்ப்பு உட்பட 57 திரைப்படங்களுக்கு 182 திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார் கல்யாணசுந்தரம்.
தமிழக பாட்டாளிகளின் பாவலன் பட்டுக்கோட்டை உடல் நலக்குறைவால் 29-வது வயதில் 1959 அக்டோபர் 8-ம் நாள் தன் பரப்புரை பணியை முடித்துக் கொண்டார்.
இன்று அவரது நினைவு நாள்