ரகுராம் ராஜன்

கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதிப்பது நிலைமையை மோசமாக்கும் – ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் ஆளுநர் வைரல் ஆச்சார்யா ஆகியோர் ஆர்.பி.ஐ-யின் செயற்குழு வெளியிட்ட அறிக்கையை விமர்சித்து கடிதம் வெளியிட்டு உள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியில் சமீபத்தில் நிபுணர்களிடம் ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் மற்றும்  தொழில் நிறுவனங்களை வங்கித் துறையில் அனுமதிக்கலாம் என்ற பரிந்துரைத்துறை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் குழு வெளியிட்ட பரிந்துரை அறிக்கை

மத்திய ரிசர்வ் வங்கியில் பி.கே.மொஹந்தி(P.k.Mohanty) தலைமையில் அமைக்கப்பட்ட குழு(Internal Working Group) கடந்த வெள்ளிக்கிழமை, தனியார் வங்கிகளின் கொள்கைகளை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பித்தது. 

  • இதில் வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949-ஐ திருத்துவதன் மூலம் பெருநிறுவனங்கள்(corporate) மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. 
  • இனி புதிதாக ஒரு வங்கி தொடங்குவதற்கான உரிமம் பெற வேண்டுமெனில் குறைந்தபட்ச முதலீடாக தற்போதுள்ள 500 கோடி ரூபாயில் இருந்து 1000 கோடியாக உயர்த்தபட்டுள்ளது. 
  • சிறு நிதி வங்கிகளின்(Small finance bank) குறைந்தபட்ச முதலீடு 200 கோடியில் இருந்து 300 கோடியாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
  • 50 ஆயிரம் கோடி மற்றும் அதற்கும் அதிகமான சொத்துகளை கொண்டு 10 ஆண்டு காலம் சிறப்பாக செயல்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை(NOFHC- Non operative Financiall Holding Company )முழு அளவிலான வங்கியாக மாற்ற பரிசீலிக்கலாம். 
  • வங்கிகளின் பங்குதாரர்கள் அதிகபட்சமாக 15 விழுக்காடு வரை பங்குகள் வைத்திருக்கலாம் என்பதை மாற்றி அடுத்த 15 ஆண்டுகளில் 26 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

பலனடையவுள்ள நிறுவனங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ்(Bajaj Finserv), எம்&எம் நிதி நிறுவனம்(M&M Finance), டாடா கேபிடல்(TATA Capitals), எல்&டி நிதி நிறுவனம்(L & T Fiancial Holdings), ஆதித்யா பிர்லா மூலதன நிறுவனம் (Aditya Capital), ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்(Sriram Transport), சோளமண்டலம் நிதி மற்றும் முதலீடுகள்(Cholamandalam investment and Finance),முத்தூட் நிதி நிறுவனம்(Muthoot Finance) போன்ற பெரும் தொழில் நிறுவனங்கள் இந்த அறிவிப்பால் ஆதாயம் அடைவார்கள் என தெரிய வந்துள்ளது.  

ரகுராம் ராஜன் மற்றும் வைரல் ஆச்சார்யா RBI அறிக்கையை விமர்சித்து வெளியிட்டுள்ள அறிக்கை

LinkedIn இணையதளத்தில் “வங்கித் துறையில் பெருநிறுவனங்கள் தேவையா?” என்கிற தலைப்பில் ரகுராம் ராஜன்(Raguram Rajan) மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் வைரல் ஆச்சார்யா(Viral aacharya) ஆகிய இருவரும் ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தற்போது முன்மொழிந்திருக்கும் திட்டமானது வங்கிகள் தற்போது இயங்கி வரும் மோசமான நிர்வாகத்தை மாற்றுவதற்கு பதிலாக, அதைவிட மோசமான முரண்பட்ட அமைப்பின் கீழ் நிர்வாகத்தைக் கொண்டு செல்லும் என எச்சரித்துள்ளார்கள்.

இருவரின் அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிக்க கூடாது என்பதற்காக இரு காரணங்களை முன்னாள் ஆளுநர்கள் முன்வைத்து உள்ளனர்.

  1. எந்தவித கேள்விகளுக்கும் இடம் இல்லாமல் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் கிளை நிறுவனங்களுக்கே குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் சூழல் உண்டாகும் எனவும், இப்படி தொடங்கப்பட்ட வங்கிகளின் வரலாறு பேரழிவு தரக்கூடியதாக முடிந்துள்ளது. வங்கியின் கடன் பெறுபவரே வங்கியின் முதலாளியாக இருந்தால் எவ்வாறு கடன்களை நல்லவிதமாக வழங்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளனர். 
  1. பெரும் தொழில் நிறுவனங்கள் வங்கியில் நுழைவதைத் தடை செய்வதற்கான இரண்டாவது காரணமாக இந்நிறுவனங்களில் அதிகரிக்கும் பொருளாதார (மற்றும் அரசியல்) நலன்களால் அதிகாரக் குவிப்பை நோக்கி நகர்ந்து முடிவில் எதேச்சதிகாரத்திற்கு வழிசெய்யும். வங்கி உரிமங்கள் நியாயமான முறையில் ஒதுக்கப்பட்டாலும், அது அதீத மூலதனத்தைக் கொண்ட பெரிய வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமைவதோடு, கடன்கள் மிகுந்த அல்லது அரசியல் பின்புலம் கொண்ட நிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவதற்கான சாதகமான அம்சங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆர்.பி.ஐ-யின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியாவுக்கு அதிகளவிலான வங்கி சேவைகள் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள், அதேசமயம் இந்தியாவில் குறைந்த அளவில் கொடுக்கப்படும் கடன்களில் பெரும் அளவிற்கான இழப்புகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

வணிக நிறுவனங்கள் பேமெண்ட் வங்கி(payment bank) தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனுமதித்து இருக்கிறது. பின்னர் “ஏன் மீண்டும் தொழில் நிறுவனங்கள் முழு அளவிலான வங்கியாக செயல்படுவதற்கான உரிமங்களைப் பெற வேண்டிய தேவை வருகிறது? மிக முக்கியமாக, ​​நாம் ஐ.எல்.எஃப்.எஸ்(ILFS) மற்றும் யெஸ் வங்கிகளின்(yes bank) தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் ஏன் இப்பொழுது?” என கேள்வி எழுப்பி உள்ளனர்.

என்ன செய்யலாம்?

பொதுத்துறை வங்கி நிர்வாகத்தை தொழில்முறையாக முன்னேற்றி, பெரும் அளவிலான மக்களுக்கு பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மூலம் செல்வத்தை பரந்துபட்ட மக்களிடம் பகிர்ந்தளிக்க உதவும் என தெரிவித்தனர். 

தொழில் நிறுவனங்களின் கீழ் இயங்கும் பேமெண்ட் வங்கிகள் முழுநேர வங்கியாக மாறுவதற்கு அனுமதிக்கபட்டுள்ளதையும், பேமெண்ட் வங்கி முழு நேர வங்கியாக மாறுவதற்கான காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கபட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, “ஆச்சரியமான இந்த பரிந்துரைகளை ஒன்றாக படிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

பெரும் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பதற்கு முன்பாக ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்குடன் 1949-ம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை வரவேற்றுள்ள இவர்கள், பெரும் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ள பரிந்துரையை விட்டுவிடுவது சாலச் சிறந்தது என அறிக்கையை முடித்துள்ளனர்.

பன்னாட்டு ஆய்வு நிறுவனமும் தெரிவித்துள்ள அதே கவலை

இதற்கிடையில், எஸ்&பி குளோபல் மதிப்பீடு (S&P Global Ratings) நிறுவனம் திங்கள் அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் திட்டம் தொடர்பான கவலைகளை  ‘ராய்ட்டர்ஸ்'(Reuters) செய்தியில் தெரிவித்துள்ளது.

பெறு நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிப்பது கருத்து வேற்றுமையையும், பொருளாதார அதிகார குவிப்பு மற்றும் நிதி சமநிலையையும் உருவாக்கும் என கவலை தெரிவித்துள்ளது.

மேலும் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் இணை நிறுவனக் குழுக்களுக்கு இடையே கடன் வழங்கி நிதிகளைத் திருப்புவதற்கான ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *