பிரபாகரன்

பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வரலாறு குறித்தான சிறப்புப் பதிவு.

உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் என்பது தவிர்க்க இயலாததாகும். குறிப்பாக தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக பிரபாகரன் உள்ளார். 

ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இலங்கைத் தீவில், தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தினை பிரபாகரன் கட்டியெழுப்பினார். 

தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக இலங்கைத் தீவின் சிங்கள-பெளத்த பேரினவாத அரசுடன், உலக வல்லரசுகளை எதிர்த்தும் தங்கள் விடுதலைக்காக பிரபாகரன் நடத்திய வீரச் சமர், இன்றைய பல மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனப் போராட்டத்திற்கு மிக முக்கிய படிப்பினைகளை வழங்கியுள்ளது. 

விடுதலை பெற்ற இலங்கையில் பறிக்கப்பட்ட தமிழர் உரிமை

1948-ல் விடுதலையடைந்த இலங்கைத் தீவு, சிங்கள இனவாதிகளின் கைகளில் கொடுக்கப்பட்டது. சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள- பெளத்த மேலாதிக்கத்தை அரசியல் சாசனமாக உருவாக்கினர். இலங்கை அரசியல் சாசனத்தால் தமிழும், தமிழர்களும் இரண்டாம் தரத்தினராக நடத்தப்பட்டனர். சிங்கள பெளத்த மேலாதிக்கம் சிங்கள- பெளத்த இனவெறியாக சிங்களவர்களிடையே வெறியூட்டப்பட்டு அப்பாவித் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலை நிகழ்த்தியது. 

அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு ரீதியாக தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர். இலங்கைத் தீவின் இத்தகைய அரசியல் சூழ்நிலையில் தான், 1954 நவம்பர் 26 அன்று பிரபாகரன் பிறந்தார்.

சாமானிய இளைஞனை போராளியாக மாறத் தூண்டிய நிகழ்வுகள்

1984ல் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பின் கேள்விக்கு பதிலளித்த பிரபாகரன், 

”நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958-ம் ஆண்டின் இனக்கலவரங்களில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம்மக்கள் ஈவிரக்கமில்லாது குரூரமாக கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது இந்த இனவெறியாட்டத்தால் அவர் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். 

இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் அவர் வீட்டைத் தாக்கினார்கள். அவர் வீட்டுக்குத் தீ வைத்து, அவரது கணவரையும் குரூரமாக கொலை செய்தனர். அவரும், அவரது குழந்தைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினர். அவர் உடலில் காணப்பட்ட எரிக்காயத் தழும்புகளை நான் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளை கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். 

அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் கேட்கும் பொழுது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது.” 

என கூறினார்.

தமிழரின் போராட்டம்: அகிம்சை முதல் ஆயுதம் வரை 

சிங்கள இனவாத அரசால் பறிக்கப்படும் வாழ்வுரிமைக்காக தமிழர்கள் முதலில் பாராளுமன்ற ஜனநாயக வழியில் போராடினர். தமிழர்களின் போராட்டக் குரலை சிங்கள ஆளும் வர்க்கம் புறந்தள்ளியது; புறந்தள்ளியது மட்டுமல்லாமல் தமிழர்களுக்கெதிரான இனக் கலவரங்களை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக தமிழர் தரப்பு தமிழீழ தனி நாடு கோரிக்கையை நோக்கி நகர்ந்தது. மேலும் இலங்கையின் அரசியல் சாசனத்திற்குட்பட்ட பாராளுமன்ற வழியில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்து ஆயுத விடுதலைப் போராட்டத்தை நோக்கி நகர்ந்தது. 

புரட்சிவாதியாகவே அரசியலுக்குள் புகுந்தேன்

“எழுபதுகளின் ஆரம்பத்தில், இளம் தலைமுறையினர் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த காலக்கட்டத்தில் தான் நான் அரசியலுக்குள் நுழைந்தேன். ஆயுதம் தாங்கிய புரட்சிவாதியாகவே நான் அரசியலுக்குள் புகுந்தேன். அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் எமது மக்களின் துன்ப, துயரங்களை ஈவு, இரக்கமின்றி புறக்கணித்து வந்த காரணத்தினால் பாராளுமன்ற அரசியலில் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது” என்று பிரபாகரன் அவர்கள் தனது நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

விடுதலைப் புலிகள் இயக்கம்

இந்நிலையில் 1976-ம் ஆண்டு மே 5-ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரபாகரன் தோற்றுவித்தார். இலங்கைத் தீவில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையைக் களைவதற்கு தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்பதை குறிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பியல் முழக்கமாக “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” என்பதை பிரகடனப்படுத்தினார்.

“..திரிகோணமலையிலும், வவுனியாவிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைக் கொல்வதற்கான ஒரு நாசகாரத் திட்டத்தை, இனவெறிப் பிடித்த பாசிச சக்திகள் உருவாக்கி வருகின்றன. தங்களுடைய உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த தேசிய ராணுவத்தின் உதவியுடன், சுதந்திரமான தமிழீழ நாடு நிறுவப்பட்டால் ஒழிய, ஒருபோதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.” 

என்று பிரபாகரன் கூறியிருந்தார். 

தமிழர்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் ’தமிழீழ தேசிய ராணுவம்’ என்பதாகவே விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களை பிரகடனப்படுத்தியது.

ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவத்தை வெளியேற்றிய புலிகள் 

தமிழர் தாயகப்பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த சிங்கள ராணுவத்தை வெளியேற்றி தமிழீழ தாயகப் பகுதிகளை மீட்கின்ற அரசியல் நோக்குடன், பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனது பாய்ச்சலைத் தொடங்கியது. 

தமிழீழ தாயக பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பு- சிங்கள ராணுவத்தினை கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றத் தொடங்கினார்.

இச்சூழலில் இலங்கைத் தீவின் இனப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டது. தமிழர் தரப்பின் கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் இந்தியா- இலங்கை அமைதி ஒப்பந்தத்தை ராஜீவ் உருவாக்கினார். சிங்கள ஆட்சியாளர்களை ஒரு அரசு என்ற ரீதியிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு குழுவின் தலைவர் என்ற ரீதியிலும் இப்பிரச்சனையை இந்தியா கையாள முனைந்தது. 

பிரபாகரன் அவர்களுக்கு பதவி ஆசைகள் காட்டியும், அதிகார பலத்தைக் காட்டியும் தனது சிங்கள அரசு சார்பான ஒப்பந்த முடிவினை இந்திய அரசு பிரபாகரனின் மீது திணித்தது. பிரபாகரன் தனது அரசியல் கோரிக்கையில் உறுதியாக நின்றார். மிகப்பெரிய ராணுவமான இந்தியாவின் படையை எதிர்த்து போரிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்த போதும், தனது உறுதியை பிரபாகரன் கைவிடவில்லை.

ஒரு கொரில்லா ஆயுதப் போராட்ட இயக்கமாக தொடங்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை மரபான இராணுவமாக பிரபாகரன் கட்டமைத்தார். ஓயாத அலைகள் தாக்குதல்கள் மூலம் இலங்கைத் தீவின் வட, கிழக்குப் பகுதிகள் புலிகள் வசமாகத் தொடங்கின. 

தமது ஆயுதப் போராட்ட இயக்கத்தின் ராணுவ வெற்றியினூடாக மீட்கப்பட்ட பகுதிகளில் தமிழீழ நடைமுறை அரசை உருவாக்கினார் பிரபாகரன். அமெரிக்கா முதல் இந்தியா வரை பல்வேறு நாடுகளின் துணையுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டாலும், பிரபாகரனிடம் ஈழம் கற்ற வரலாற்றுப் பாடம், தலைமுறை கடந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைஞர்களிடம் கையளிக்கப்பட்டு தொடர்கிறது. 

கவிஞர் பழனிபாரதி பிரபாகரன் அவர்கள் குறித்து எழுதிய கவிதையின் வார்த்தைகள்,

”மனிதர்களுக்கு எதிரானவர்கள் 
அந்தப்பெயரை முள்ளிவாய்க்காலில் 
புதைக்க நினைத்தார்கள்.
நந்திக்கடலில் கரைக்க நினைத்தார்கள்.
அது எங்கள் கைகளைப்பிடித்துக்கொண்டு
அழைத்துச்செல்லத்தொடங்கிவிட்டது.
அந்தப்பெயர் எங்கள் வழித்துணையல்ல
வழியே அதுதான்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *