அதானி விமான நிலையங்கள்

விதிமுறைகளுக்கு மாறாக அதானிக்கு கையளிக்கப்படும் 6 விமான நிலையங்கள்!

விதிமுறைகளை மீறி அதானி நிறுவனத்திற்கு 6 விமான நிலைய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சகம் ஆட்சேபனை தெரிவித்தும் அது பொருட்படுத்தப்படவில்லை. 

வங்கி, காப்பீட்டுத் துறை, ரயில்வே என பல துறைகளில் தனியார்மயத்தை தீவிரப்படுத்தி வரும் மோடி அரசு, விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவெடுத்தது. அதன்படி அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களுர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை தனியார் நிறுவனங்கள் நிர்வகிப்பதற்கான டெண்டரை அறிவித்தது. 

50 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட விமான நிலையங்களை தனியார்மயமாக்க நடந்த டெண்டரில், அதானி நிறுவனம் மட்டும் 6 விமான நிலையங்களுக்கான டெண்டரைப் பெற்றுள்ளது. தற்போது மீண்டும்  இம்மாதத்தில், இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையத்துக்கான டெண்டரையும் அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் இவ்விமான நிலையங்கள் அடுத்த 50 ஆண்டுகள் அதானி நிறுவனத்தின் கையிலிருக்கும்.  

ஒரே நிறுவனத்திடம் தரக்கூடாது என்பது புறக்கணிப்பு

இவ்விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக ‘பொது- தனியார் நிறுவன கூட்டு ஊக்குவிப்பு குழு (Public- Private Partnership Appraisal Committee), நிதி விவகாரத் துறையிடம் கருத்து கேட்டிருந்தது. 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பாக கருத்து கூறிய நிதி விவகாரத் துறை, “ஒன்றுக்கு மேற்பட்ட விமான நிலையங்களை ஒரே நிறுவனத்திடம் தரக்கூடாது” என குறிப்பிட்டிருந்தது. 

மேலும், “அதிக பொருட் செலவுடைய இந்த பணிகளை ஒரே நிறுவனத்திடம் ஒப்படைப்பதன் மூலம் போதிய நிதி ஆதாரமில்லாமல், அக்குறிப்பிட்ட நிறுவனம் விமான நிலையங்களுக்கு செய்ய வேண்டிய செலவினங்களை சரிவர செய்ய முடியாமல் போகும். இதனால் விமான நிலையப் பணிகள் பாதிக்கப்படும்” என்றும், “பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கும்பட்சத்தில் போட்டியின் காரணமாக குறைந்த விலை டெண்டருக்கு வாய்ப்பு உருவாகும்” என ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களை ஒரே நிறுவனத்திற்கு ஏன் வழங்கக் கூடாது என்பதற்கான காரணமாகக் கூறியிருந்தது. 

முன் அனுபவமில்லாத அதானி நிறுவனம்

நிதி ஆயோக்கானது, “குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் (அதானி நிறுவனம்) விமான நிலைய நிர்வாகம் தொடர்பாக போதிய தொழிற் முறை அனுபவமில்லாமல் இருப்பதால், விமான சேவையில் பாதிப்பேற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையானது, ஒரு அரசு உத்திரவாதப்படுத்த வேண்டிய தரமான விமான சேவையில் சமரசப்படுத்திக் கொண்டது போல் ஆகிவிடும்” என தன் சார்பாக கருத்து தெரிவித்திருந்தது. 

இப்படியாக ஒன்றிய அரசின் துறைகள் மற்றும் அமைப்புகள், 6 விமான நிலைய டெண்டரையும் ஒரே நிறுவனத்திற்கு வழங்குவதிலுள்ள பாதகத்தை சுட்டிக்காட்டி ஆட்சேபனை தெரிவித்திருந்தன.  

ஆனால் விமான நிலையப் பராமரிப்பு, நிர்வாகம் தொடர்பாக முன் அனுபவம் இல்லாத போதும், 6 விமான நிலையங்களின் டெண்டர்களை வழங்கியதன் மூலம் அதானி நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு மோடி அரசு வழி வகுத்திருக்கிறது. டெண்டரின் போதே நிதி விவகாரத் துறையும், நிதி ஆயோக்கும் ‘ஒற்றை நிறுவன ஏகபோக’ காரணத்தைக் குறிப்பிட்டே அதானி நிறுவனத்திற்கு 6 விமான நிலையத்தை ஒப்படைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தன. 

ஜி.எம்.ஆர் குழுமத்திற்கு மறுக்கப்பட்ட ஒப்பந்தம்

ஒற்றை நிறுவன ஏகபோகத்திற்கு வழிவகுக்கக் கூடாதென்ற காரணத்தினாலேயே விமான நிலைய பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் நீண்டகால அனுபவமுள்ள ஜி.எம்.ஆர் குரூப் என்ற தனியார் நிறுவனத்திற்கு டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு விமான நிலையங்களை, ஒரே நிறுவனத்திற்கு தரக்கூடாது என வாய்ப்பு மறுத்தது குறிப்பிடதக்கது. 

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

இந்தியாவிலுள்ள விமான நிலையங்கள் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்குகின்றன. முன்னர் இந்திய விமான நிலையங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்கு தனித்தனியாக இருந்த நிர்வகிக்கும் அமைப்புகள், 1995-ம் ஆண்டு ஏர்போர்ட் அத்தாரிட்டி இந்தியா என்ற ஒற்றை நிறுவன அமைப்பிற்குக் கீழ் மாற்றப்பட்டது. இந்தியாவிலுள்ள 78 உள்ளூர் விமான நிலையங்கள், 18 சர்வதேச விமான நிலையங்களை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிர்வகித்து வருகிறது.

வாஜ்பாய் ஆட்சியில் நுழைக்கப்பட்டு மன்மோகன் ஆட்சியில் விரிவாக்கப்பட்ட தனியார்மயம்

தனியார்மயத்தை பல்வேறு வழிகளிலும் நுழைத்த முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் பொருட்டு டெல்லி மற்றும் மும்பை விமான நிலைய நிர்வாகத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தது. அரசு பொதுத்துறை சேவைகளில் தனியார் நிறுவங்களை அனுமதிக்கும் பொது- தனியார் நிறுவன கூட்டு (Public- Private Partnership) கொள்கை திட்டத்தின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டது. 

அதைத் தொடர்ந்து வந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்கு கூட்டனி) அரசு, விமான நிலைய சேவையை தனியார்மயமாக்க முயன்றது; ஆனால் அது நிறைவேறாமல் போனது. 

மோடி ஆட்சியில் அதானியின் வசமாகும் விமான நிலையங்கள்

இந்நிலையில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசில், மீண்டும் விமான சேவையில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு டிசம்பர் மாதமே விமான சேவை தொடர்பாக தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. 

2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், விமான நிலையங்களை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு சேர்ப்பதற்குரிய வழிமுறைகளை உருவாக்குமாறு நிதி அமைச்சகத்தின் கீழுள்ள நிதி விவகாரத் துறையிடமும், நிதி ஆயோக்கிடமும் பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. இவற்றில் விமான சேவை தொடர்புடைய விமான போக்குவரத்து அமைச்சகம் தலையிடவில்லை; மாறாக பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டது. நிதி விவகாரத் துறை மற்றும் நிதி ஆயோக்கிடம், விமான நிலையத்திற்கு சொந்தமான இடங்களில் ரியல் எஸ்டேட் சம்பந்தமான செயல்பாடுகளுக்கும் வழியமைத்து தரும்படியும் பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியது. 

லாபத்துடன் இயங்கிய ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

2017- 18ம் ஆண்டைய நிலவரப்படி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, 2,801.6 கோடி நிகர லாபத்துடன் இயங்கிக் கொண்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் உள்ளிட சில முக்கிய விமான நிலையங்களை பல கோடி ரூபாய் செலவு செய்து சமீபத்தில் தரம் உயர்த்தியிருக்கிறது. நல்ல லாபகரமாக இயங்கும் வகையில் இந்திய விமான சேவைக் கட்டமைப்பு வளர்த்தெடுக்கப்பட்ட பிறகு, அதனை தனியார் நிறுவனத்திற்கான லாப வணிகமாக மாற்றுகிறது மோடி அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *