வணிக சினிமாவில் கொடிகட்டிப் பரந்த திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் வரிசைப் படங்கள் மிக முக்கியமானவை. M16 என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் உளவு அமைப்பின் உளவாளி 007 என்ற கதாபாத்திரம் அசாத்தியமான சாகசத்தோடு பேரழிவில் இருந்து இந்த உலகத்தை பாதுகாக்கப் போராடும் வகையில் சித்தரிக்கப்படும். இந்த தொடர் சினிமா 1962-ம் ஆண்டு டாக்டர் நோ என்ற திரைப்படத்தின் வாயிலாக துவங்கப்பட்டது.
உலக அரசியலும், உளவு நிறுவன கதாபாத்திரங்களும்
1962-ம் ஆண்டு துவங்கி 2015 வரை ஏறத்தாழ 24-க்கும் அதிகமான திரைப்படங்கள் இதுவரை வந்துள்ளது. பனிப்போர் காலத்தில் ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளுடனான ஏகாதிபத்தியத்தின் முரண்பாடு, வியட்நாம் யுத்தம், வளைகுடா யுத்தங்கள், துருக்கி, சீன மற்றும் கொரியாவுடனான அரசியல் தகராறு போன்ற அனைத்து பதட்டமான உலக அரசியலிலும் ஏகாதிபத்தியத்தின் உளவு அமைப்புகளின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் போக்கு இத்திரைப்படங்களில் சித்தரிக்கப்படும். உலக அமைதிக்கும் உலக சமாதானத்திற்கும் மறைமுகமாகப் போராடும் கதாபாத்திரங்களாக உளவு நிறுவனங்கள் சித்தரிக்கப்படும்.
எதார்த்தத்தில் ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்காகவே உளவு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். அரசியல் கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்பு, பொருளாதாரப் போட்டிகள், சர்வேதச ஆயுதக் கடத்தல், தீவிரவாதிகளுக்கு ஆயுதம் விற்பது, போதை மருந்து, சூதாட்டம் மற்றும் பெண் விபச்சாரம் போன்ற அனைத்து வகையான மனித விரோத செயல்பாடுகளையும் திட்டமிட்டு இயக்கி வரும் வரலாறு உளவு அமைப்புகளுக்கு உண்டு. ஆனால் பொது புத்தியில் உளவு நிறுவனங்களையும், உளவாளிகளையும் பற்றி அதீதமான கற்பனைகளை விதைத்தது சினிமாக்கள்தான். அதில் முக்கியமானது குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்.
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தின் தன்மை
இயன் ஃப்ளெமிங் என்ற எழுத்தாளர் எழுதிய துப்பறியும் நாவல் வரிசையில் சித்தரிக்கப்படும் கதாப்பாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட். இந்த கதாபாத்திரம் அதீதமான திறமையும், கூர்மையான மதிநுட்பமும், உடல் பலமும் கொண்டவர், அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் மிக எளிதாக கையாளக் கூடியவர். அவசர காலகட்டத்தில் உடனுக்குடன் வெற்றிகரமான முடிவுகளை எடுப்பவர். நேர்த்தியான கோட் சூட் அணியக் கூடியவர், பெண்களை அதிகமாக கவரக்கூடியவர், சூதாட்டத்தின் ரகசியம் தெரிந்தவர், உடை, உணவு, சுருட்டு, மது போன்ற அனைத்திலும் தனக்கான தனித்துவத்தை விட்டுக்கொடுக்காதவர் இதுபோன்ற ஒரு அசாத்தியமான ஆளுமையாக 007 விளங்குவார்.
ஷான் கானரி
இயன் ஃப்ளெமிங்-கின் இந்த கதாப்பாத்திரத்தை உயிர் கொடுக்க நினைத்த இயக்குனர் டெரன்ஸ் யங்-க்கு நினைவில் வந்த ஒரே நடிகர் ஷான் கானரி. இவர் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கின் குடிசைப் பகுதிகளில் பிறந்தவர். வறுமையின் காரணமாக பல்வேறு தொழில்கள் செய்து பிழைத்து வந்தவர். பின்னர் லண்டனில் உள்ள சில நாடகக் குழுவிலும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களும் நடிக்கத் துவங்கினார். ’நோ ரோட் பேக்’ என்கிற திரைப்படத்தில்தான் அவருக்கு முதன்முதலாக சிறந்த கதாப்பாத்திரம் அமைந்தது.
ஷான் கானரியின் நெடிய உயரம், அழுத்தமான குரல், கூர்மையான கண்கள், அசட்டுத்தனமான சிரிப்பு, பதட்டத்தை வெளிக்காண்பிக்காத உடல் அசைவுகள் போன்ற அனைத்தும் டெரன்ஸ் யங்-க்கு பிடித்துப்போனது. இவர்தான் 007 கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து இயன் ஃப்ளெமிங்-கின் டாக்டர் நோ என்ற நாவலை ஷான் கானரியை வைத்து 1962-ம் ஆண்டு திரைப்படமாக எடுத்தார்.
DR. No திரைப்படம்
Dr. No திரைப்படத்தில் ஒரு கிளப்பில் ஜேம்ஸ்பாண்ட் சூதாட்ட மேசையில் “Bond, James Bond’‘ என்ற வசனத்துடன் அறிமுகமாவார். அந்த அறிமுகம் மிக கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏறத்தாழ 50 ஆண்டுகளாக திரைக்கு வந்த 25 ஜேம்ஸ் பாண்ட் படங்களிளும் இதுபோன்ற ஒரு வசனம் கட்டயாமாக அமைந்து விட்டதற்குக் காரணம் ஷான் கானரியின் அழுத்தமான முகபாவனை.
Dr. No திரைப்படத்தில் ”ஜான் ஸ்ட்ராங்க்வேஸ் என்ற M16 உளவாளியின் கொலையை துப்பு துலக்குவதற்காக ஜமைக்கா செல்கிற 007 பல்வேறு சாகசங்களைப் புரிகிறார். அந்த புலனாய்வு சுவாரஸ்யத்தைத் தனது நடிப்பில் முழுமையாக வெளிப்படுத்துவார். Dr. No படத்தில் ஷான் கானரியின் நடிப்பும் ஆளுமையும் பல்வேறு மாறுபட்ட கதைக்களத்திலும் வெவ்வேறு நடிகர்களிடமும் கடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம்
Dr. No திரைப்படத்தின் வெற்றியில் புகழின் உச்சத்திற்கு சென்றார் ஷான் கானரி அதனை தொடர்ந்து 1963-ம் ஆண்டு From Russia with Love, 1964-ம் ஆண்டு Goldfinger, 1965-ம் ஆண்டு Thunderball, 1967-ம் ஆண்டு you only live twice, 1971-ம் ஆண்டு Diamonds Are Forever மற்றும் 1983-ம் ஆண்டு Never Say Never Again போன்ற பல்வேறு படங்களில் ஜேம்ஸ் பாண்ட கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் வெற்றார்.
கவர்ச்சிகரமான வோட்கா வசனம்
1964-ம் ஆண்டு வந்த Goldfinger படத்தில் தனக்கு பிடித்த வோட்கா மார்டினி மதுவை ”Vodka Martini , shaken not stirred” என்று கேட்டுவாங்கும் அந்த போக்கு மிக கவர்ச்சிகரமாக அமைந்தது. “Shaken, not stirred என்ற வசனத்தை இயன் ஃப்ளெமிங் 1956-ல் எழுதிய Diamonds Are Forever என்ற நாவலில் முதன்முதலில் பயன்படுத்தினார். அதிலும் ஜேம்ஸ்பாண்ட பேசுவதாக அமையாது வில்லன் கதாபாத்திரம் தான் அந்த வசனத்தை முதலில் பயன்படுத்துவார்.
பின் அது திரைப்படமாக எடுக்கும்போது 1962-ம் ஆண்டு திரைக்கு வந்த Dr. No படத்தில் இரண்டு முறை பயன்படுத்தப்பட்டது. ஒரு விடுதியில் தங்கியிருக்கும்போது ஜேம்ஸ்பாண்ட கேட் மதுவகையை கொண்டுவந்து கொடுக்கும் வெயிட்டர் பின்வருமாறு கூறுவார். “one medium dry vodka martini mixed like you said, sir, but not stirred.” பிறகு அப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரிம் ஜேம்ஸ் பாண்டுக்கு மது பரிமாறும் போது “A medium dry martini, lemon peel. Shaken, not stirred.” என்று பயன்படுத்துவார்.
முதல் இரு படங்களிலும் இந்த வசனத்தை ஜேம்பாண்ட் பயன்படுத்துவதாக அமையாது. மூன்றாவது படமான Goldfinger-ல் தான் அவர் முதன்முதலாக பயன்படுத்துவார். பின் அந்த வசனம் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்கியது. குறிப்பாக 60 மற்றும் 70 களில் மேற்கத்திய மதுக்கூடங்களில் மிகப் பிரபலமக பயன்படுத்தப்பட்டது. ஷான் கானரியை தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரித்தில் நடித்த ஜார்ஜ் லாசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் ப்ரோஸ்னன், டேனியல் கிரேக் போன்ற அனைத்து நாயகர்களும் இந்த வசனத்தைப் பயன்படுத்துவார்கள்.
2005-ம் ஆண்டு American Film Institute கடந்த 100 ஆண்டுகளில் திரைப்பட வசனங்கள் மக்களிடம் பிரபலமாக இருந்ததைப் பட்டியலிட்டு கௌரவப்படுத்தியது. அதில் இந்த வசனமும் முக்கிய இடம் பெற்றது. இந்த பாரம்பரியத்தை உருவாக்கியதில் ஷான் கானரியின் dialogue delivery மிக முக்கியமாக அமைந்ததாக புகழப்பட்டது.
சர்ச்சைக்குரிய சாகசக்காரர்களின் பிரதிபலிப்பாக மாறிய ஷான் கானரி
1987-ம் ஆண்டு ஷான் கானரி The Untouchables என்ற படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.
2000-ம் ஆண்டு திரைத்துறையில் அவருடைய சாதனைக்காக பிரிட்டிஷ் அரசு சர் பட்டம் வழங்கியது. வெகுசன மக்களின் பொதுபுத்தியில் ஏகாதிபத்யத்திய உளவு அமைப்புகள் மீதும், உளவாளிகள் மீதும் கட்டியமையக்கப்படும் கவர்ச்சியும், நியாயப்பாடும் ஷான் கானரியின் நடிப்பு அழுமையில் இருந்து துவங்கியது என்று சொன்னால் மிகையாகாது.
இன்றுவரையிலும் CIA, M16, போன்ற சர்ச்சைக்குரிய நிறுவனங்களை சாகசக்காரர்களாக பொதுபுத்தியில் நிலைநிறுத்திக்கொள்ள உறுதுணையாக இருந்த ஷான் கானரி நேற்று 90 வயதில் காலமானார். அவருடைய ஆளுமையின் பிரதிபலிப்பாக இன்று பல சாகசக்காரர்கள் திரையில் தோன்றுகின்றனர். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் ஷான் கானரியின் நடிப்பில் இருந்து விலகி நிற்கவில்லை.
முக்கியமான ஜேம்ஸ் பாண்ட படங்கள்
Dr. No | 1962 |
From Russia with Love | 1963 |
Goldfinger | 1964 |
Thunderball | 1965 |
You Only Live Twice | 1967 |
On Her Majesty’s Secret Service | 1969 |
Diamonds Are Forever | 1971 |
Live and Let Die | 1973 |
The Man with the Golden Gun | 1974 |
The Spy Who Loved Me | 1977 |
Moonraker | 1979 |
For Your Eyes Only | 1981 |
Never Say Never Again | 1983 |
Octopussy | 1983 |
A View to a Kill | 1985 |
The Living Daylights | 1987 |
Licence to Kill | 1989 |
GoldenEye | 1995 |
Tomorrow Never Dies | 1997 |
The World Is Not Enough | 1999 |
Die Another Day | 2002 |
Casino Royale | 2006 |
Quantum of Solace | 2008 |
Skyfall | 2012 |
Spectre | 2015 |
No Time to Die | 2021 |