தமிழ்செல்வன் ஜார்ஜ் புஷ்

ஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!

சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரமரணம் அடைந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

1993-ம் ஆண்டு பூநகரி சமர்முனையில் சிங்கள வான்படை தாக்குதல் மூர்க்கமாக இருந்தது.  சிங்கள விமானத்தின் ஓலம் அனைவரின் காதுகளையும் கிழித்தது. ஆங்காங்கே இடிபாடுகளுக்கு மத்தியில் துவக்குகளோடு போராளிகள் அமர்ந்திருந்தனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தை சிங்களம் குறிவைத்திருப்பதை அறிந்திருந்தனர். பகலும் இரவுகளைப் போல ஆள் நடமாட்டம் தவிர்க்கப்பட்டது. போராளிகள் துரிதமான சில கட்டளைகளுக்காக காத்துக்கொண்டிருந்தனர். ஏறத்தாழ ஒருவாரமாக உடுப்பை மாற்றாமல் களமுனையில் சொர்ணம் இருந்தார். அவர் மீது மண்புழுதி படர்ந்திருந்தது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவரைப் போன்ற உயரம் யாரும் கிடையாது. நல்ல உயரம், வாட்ட சாட்டமான உடல் அமைப்பு. மூன்று நாட்களாக சரியான உணவு இல்லாமல் முகக்தில் சிறு சோர்வு தெரிந்தது. தொலைவில் இருந்த அந்த முக்கியப் பொறுப்பாளரை நோக்கி பொறுமையாக நடந்து வந்தார். புழுதிபடிந்த அவரது உருவம் நடப்பது ஒரு மண்குவியல் நகர்ந்து வருவதுபோல் இருந்தது. 

சில போராளிகள் அந்த பொறுப்பாளரின் அருகில் நின்றுகொண்டு சிரித்து ஏதோ பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். வழக்கம்போல சொர்ணத்தை பார்த்தும் அந்த பொறுப்பாளர் தனக்கே உரித்தான சிரிப்பை வெளிப்படுத்தினார். கையில் இருந்த சில காகிதங்களை எடுத்து சொர்ணத்திடம் நீட்டி ஏதோ பேசதுவங்கினார். திடீர் என்று விமானத்தின் ஓலம் கேட்டது, அனைவரும் பதுங்கினார்கள். எதிர்பாராத விதமாக அவர்கள் இருந்த இடத்தை சிங்கள வான்படை கடுமையாக தாக்கியது. 

ஒரு கணப்பொழுதில் சூழ்நிலையை புரிந்து கொண்ட கேப்டன் வைத்தி, அந்த பொறுப்பாளரை நோக்கி பாய்ந்தார். அவரை கீழே வீழ்த்தி கேப்டன் வைத்தி, மேஜர் துளசி, மேஜர் அலெக்ஸ் இன்னும் சில போராளிகள் அவருக்கு மேலே படுத்து மனித அரண் அமைத்தனர். மிக மோசமான தாக்குதலில் வைத்திக்கு மண்டையில் பலத்த அடி, முதுகு தண்டு முறிந்து குப்புறக் கிடந்தார். சில மணித்துளிகள் அங்க என்ன நடந்தது என்று யாருக்கம் தெரியவில்லை.

தொலைவில் இருந்த ஒரு போராளி ஓடிவந்து புகைக்கு நடவே கிடந்த போராளிகளைப் புரட்டி உள்ளே இருந்த பொறுப்பாளரைப் பார்த்தார். அவர் மிக மோசமாக காயம்பட்டிருந்தார். சொர்ணம், துளசி, அலெக்ஸ் என அனைவருக்கும் பலத்த அடி. குப்புறக் கிடந்த வைத்தியைத் திருப்பிப் பார்த்தார்கள். அவர் உடம்பு முழுவதும் ரத்தம் கசிந்திருந்தது. வைத்தி சம்பவ இடத்திலேயே வீரச்சாவு அடைந்திருந்தார். பல்வேறு போராளிகள் தனது உயிரைப் பணயம் வைத்து  காப்பாற்றிய அந்த பொக்கிசம் தான் பிரிகேடியர் தமிழ்செல்வன். 

தமிழ்ச்செல்வன் அவர்களின் பன்முகத் திறன்

போர்களம், நிர்வாகம், அரசியல் ராஜதந்திரம் போன்ற பல்வேறு வேறுபட்ட பண்புகளோடு அணுகவேண்டிய பணிகளை அந்த புன்னகைக்கும் புலியால் தனித்து செய்ய முடிந்தது. தனது பணிகளுக்கு அப்பாற்பட்டு தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகவும், மாவீர்ர்களின் வழி நிற்கும் உறுதியான போராளியாகவும் பிரிகேடியர் தமிழ்செல்வன் இருந்தார். 

இந்திய அமைதிப் படையுடன் நடந்த யுத்தத்தில் தென்மராட்சி பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் மறைமுக இடத்தை இந்திய ராணுவம் சுற்றி வளைத்தது. வெடிக்க வைத்திருந்த சில குண்டுகளுடன் சாலையின் இரண்டு புறமும் திரண்டு வந்து கொண்டிருந்த ராணுவத்திற்கு நடுவே, சைக்கிளில் புன்னகைத்துக் கொண்டு அவர்களின் முற்றுகையைக் கடந்து சென்றார். 

அந்த புன்னகை ராஜதந்திர மேசையில் மட்டும் உதிர்க்கப்பட்டதல்ல. துப்பாக்கிகளின் நடுவில் மலர்ந்த ஒன்று. இந்தியப் படையின் தளபதி அப்பகுதி பொருப்பாளரான தினேசை (இவரது பழைய பெயர்) சந்திக்க விரும்பியதாக அழைப்பு விட்டார். இவர் நேரடியாக இந்தியப் படைத் தளபதியை சந்தித்து, ”தினேஸ் நூற்றுக்கணக்கான போராளிகளுடன் வேறு ஒரு பிரதேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். உங்கள் செய்தியை சொல்லுங்கள். நான் சொல்கிறேன்” என்று ராஜதந்திரமாக செயல்பட்டார். 

சமயோசித புத்தி, நெருக்கடி சூழலை இலகுவாகக் கையாளும் திறன் அவருக்கு இளம் வயதிலேயே இருந்தது. இந்த தனித்துவம் அவரைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவின் முதன்மை பாத்திரத்தை வகிக்கும் அளவிற்கு உயர்த்தியது. 

அரசியல் துறைப் பொறுப்பாளராக தமிழ்ச்செல்வன்

போர்க்களத்தில் காயம்பட்ட பிறரு 1993-ம் ஆண்டுவாக்கில் அவர் அரசியல் துறையில் பொறுப்பேற்றார். ஒரு ராணுவத் தளபதி அரசியல் பிரிவில் சாமர்த்தியமாக செயல்படுவது அவ்வளவு எளிய காரியமல்ல. குறிப்பாக 1990-களுக்குப் பிறகு புலிகள் இயக்கம் சந்தித்த பல்வேறு நெருக்கடியான காலக்கட்டதில் அரசியல் பொறுப்பில் வெற்றிகரமாக செயல்பட அசாத்தியமான மனஉறுதி தேவைப்பட்டது. அதற்கு பொருத்தமானவராக இருந்தார் தமிழ்செல்வன். 

சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தை, யாழ்ப்பாண இடப்பெயர்வு போன்ற காலகட்டத்தில் அவர் உறுதியாக செயல்பட்டார். யாழ்ப்பாண இடம் பெயர்வில் நோய், உணவுப் பற்றாக்குறை, மருத்துவ தேவை,  தொற்று நோய் பரவல், வாழ்வாதாரம், மீள் குடியேற்றம் போன்ற அனைத்து சுமைகளையும் களைந்து மக்களுக்கு ஏற்பட்ட சோர்வையும் நம்பிக்கையின்மையையும் துடைத்தெரிறிந்து மக்களை எழுச்சிபடுத்தி இளைஞர்களை அணிதிரட்டி புலிகள் இயக்கத்தை பலப்படுத்தியவர். இந்த பலப்படுத்துதல்தான் ஓயாத அலைகள் 1 ஒன்றில் புலிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.

முல்லைத் தீவு சிங்கள ராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட அந்த போர்தான் சர்வதேச மட்டத்தில் புலிகளை கவனிக்க வைத்தது. அத்தோடு புலிகளின் நீர்வழித்தடமான முல்லை தீவு திறக்கப்பட்டது. மேலும் புலிகளை கடலில் பலப்படுத்தியது. 

நெருக்கடிகளிலிருந்து மக்களை மீட்டவர்

ஆண்டுக்கணக்காக நடந்த வன்னிச்சமரில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வன்னியில் இடம் பெயர்ந்தவர்களின் வாழ்வு மிகவும் நெருக்கடிக்கு உள்ளானது. யுத்தம், முற்றுகை, பொருளாதாரத் தடை, பின்னடைவு, வறுமை, தொற்றுநோய், உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை போன்ற நெருக்கடியில் மக்களுக்கும் தலைவருக்கும் தோளோடு தோள்கொடுத்து நின்றவர்தான் தமிழ்செல்வன். 

அரசியல் துறையை மிக அசாத்தியமாக பயன்படுத்தி மக்களுக்கு எழுச்சியை கொடுத்தவர். இந்த காலகட்டத்தில்தான் மக்கள் படையை உருவாக்கி அனைத்து வன்னிவாசிகளையும் சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து ஒற்றைப் புள்ளியில் நிறுத்தியது புலிகள் இயக்கம். புது ரத்தம் பாய்ச்சப்பட்டு வீறு கொண்டு எழுந்து நின்றதை, அதுவரை சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுத்துவந்த நாடுகள் வெறித்துப் பார்த்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திர நிகழ்வில் தலைவருடன் தோள்கொடுத்து நின்றவர் தமிழ்செல்வன். 

இதன்பின்னர் சமாதானத்தின் பெயரில் ஒரு சூழ்ச்சி வேலையை சந்திரிரகா அரசு துவங்கியது. அதற்கும் அவர் தயங்கவில்லை. புன்முறுவலுடன் கிளம்பினார். ஏகாதிபத்தியத்தின் சமாதான முயற்சிகளின் தந்திரத்தை தெளிவாக அறிந்தவர். விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க செய்யப்படும் எந்த சூழ்ச்சிக்கும் சிறு இடம் கூட கொடுக்காமல் பேச்சுவார்த்தையை கையாண்டார். 

ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது 

ஜெனீவா இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டபடாதபோது, அடுத்த பேச்சுவார்த்தைக்கு தேதி கேட்டு நார்வே பிரதிநிதி எரிக் சோல்கெய்ம் நிர்பந்தித்த போது, உறுதியாக அதை தமிழ்செல்வன் மறுத்தார். ”தேதி உறுதி செய்யப்படவில்லை என்றால் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக ஏற்கப்படும். பின் நீங்கள் திரும்பிப் பாதுகாப்பாக போக  எங்களால் உத்திரவாதம் தரமுடியாது” என்று கூறிய எரிக் சோல்கெய்மை நோக்கி தமிழ்செல்வன் ”உயிர் அச்சுறுத்தல்களைக் கொடுத்து புலிகளைப் பணிய வைத்துவிட முடியாது” என்று கூறினார்

இறுதியில் எரிக் சோல்கெய்ம், ”நீங்கள் பேச்சுவார்த்தைக்கு தேதி குறிக்காமல் போவது நல்லதல்ல  என அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கருதுகிறார்” என்றார். அதற்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில் சர்வதேச பிரதிநிதிகளை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ”நாங்கள் அமெரிக்க ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், வில்சன் ஆகியோரின் கருத்தில்தான் கரிசனையாக உள்ளோம். ஜார்ஜ் புஷ்-ன் கருத்தில் இல்லை” என்று சொன்னார். இது விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ ஏடான புலிகளின் குரல் பத்திரிக்கையிலேயே வெளிவந்திருந்தது.

ஜெனீவா பேச்சுவார்த்தையில் பாலசிங்கம் இல்லை என்று நினைத்த, சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள அரசுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பிரிகேடியர் தமிழ்செல்வன். அவரின் உரையாடலில் இருந்த அமைதியும் அறமும் எதிர்தரப்பை தலைகுனிய வைத்தது. அன்றாட பிரச்சனைகளை எந்தவித குழப்பமும் தடுமாற்றமும் இன்றி பேச்சுவார்த்தையில் முன்வைத்தார். 

புலிகள் இயக்கத்தின் அரசியல் கோரிக்கையில் இருந்து எந்த வகையிலும் இம்மியளவு பிசகாமல் எதிர்தரப்பை கையாண்டவிதம் புலிகளை அரசியல் தளத்தில் மேலும் பலப்படுத்தி சர்வதே மட்டத்தில் உயர்த்தியது. ”நாங்கள் அரசியல் தீர்வாக தன்னாட்சி அதிகார சபையை முன்வைத்துள்ளோம். அரசியல் தீர்வு பற்றி பேசவந்த உங்கள் முன்மொழிவு எங்கே?” என்று சிங்களத் தரப்பை பேச்சுவார்த்தையில் நெருக்கியவர். 

பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட நினைவுக் குறிப்பு

எந்தவித அரசியல் தீர்வையும் தயாரித்து வராத சிங்களத் தரப்பை ஜெனீவா பேச்சுவார்த்தையில் அம்பலப்படுத்திய ராஜதந்திரி அவர். இந்த நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத சிங்களப் பேரினவாதம், தமிழ்செல்வன் கேட்ட கேள்விகளுக்கு அவரது உயிரை மாய்ப்பதையே பதிலாகத் தந்தது. அந்த பதில் தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களையும் சொல்லெனா துன்பத்தில் ஆழ்த்தியது. 

”சமாதானம் பேசிய எமது அமைதிப் புறாவை இராட்சதக் குண்டுகளை வீசி கொடுரமாக, கோரமாக கொன்றழித்திருக்கிறது. தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனை சிங்கள தேசம் சாகடித்துள்ளது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனை சிங்களம் பலி கொண்டிருக்கிறது” என்று 3.11.2007ம் ஆண்டு பிரபாகரன் அவர்கள் செய்தி வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *