குரூப் சேர்க்கக் கூடாது, வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தக் கூடாது, பகல் நேரத்தில் தூங்கக் கூடாது, வீட்டில் உள்ள மற்றவர்கள் மேல் வன்முறையை பிரயோகிக்கக் கூடாது இவையெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வோருக்கான முக்கிய விதிகளாக கொடுக்கப்படுகிறது.
இது மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்பதால் உள்ளே நடக்கும் வன்முறை வெளியே உள்ள மக்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது எனும் வகையில் அந்த விதிகள் முக்கியமானதுதான். சக போட்டியாளரை தாக்கியதாக பிற மொழிகளில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அஜாஸ் கான், பூஜா மிஸ்ரா உள்ளிட்ட பலர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
இப்படியெல்லாம் கவனமாக விதிகள் வகுக்கத் தெரிந்த பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு, நிகழ்ச்சியில் சாதி குறித்தான வார்த்தை பிரயோகங்களோ, மத அடையாளம் சார்ந்த பிரயோகங்களோ இருக்கக் கூடாது என்பதையும் விதிகளாக வகுக்க வேண்டும் என்பது எப்படி தெரியாமல் போனது?
ஏனென்றால் ஒருவரை நேரடியாக தாக்குவதை விட ஒருவரை சாதிய ரீதியாகவோ, அவருடைய பொருளாதார பின்புலம் சார்ந்தோ, பாலின அடையாளம் சார்ந்தோ, உருவக் கேலி சார்ந்தோ வார்த்தைகளை பயன்படுத்தி இழிவுபடுத்துவதோ மிக மோசமான செயல். அச்செயல்கள் உடனடியாகக் கண்டிக்கப்பட வேண்டுமில்லையா! நேரடியாக தாக்குபவர் வெளியேற்றப்பட வேண்டும் என்றால், அத்துமீறி கலாச்சார இழிவைத் திணிக்கும் நபர்களும் வெளியேற்றப்படத் தானே வேண்டும்.
விஜயதசமி வழிபாடு எனும் டாஸ்க் (Task)
நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் நவராத்திரி, விஜயதசமியை பூஜை செய்து கொண்டாடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அனைவரின் கடவுள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும், எவரின் வழிபடும் உரிமையும் தடுக்கப்படக் கூடாது என்பது தேவைதான். அதேபோல் ஒரு பொதுநிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட மத வழிபாட்டில் பங்கேற்றாக வேண்டும் என்று எவரும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதும் முக்கியமானதே. விஜயதசமி வழிபாட்டை நடத்த விரும்புபவர்கள் நடத்திக் கொள்ளலாம் எனும் உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் நவராத்திரி மற்றும் விஜயதசமி வழிபாட்டை ஒரு டாஸ்க்காக மாற்றி அனைவருமே பங்காற்றாக வேண்டிய அவசியத்தை உருவாக்குவது ஏன்?

மேலும் அந்த நிகழ்ச்சியில் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருக்கும்போது, விஜயதசமி வழிபாட்டினை டாஸ்க்காக வைப்பது அத்துமீறல் இல்லையா?
மகிசாசூரன் வதம் என்பது எதன் குறியீடு?
விஜயதசமி என்பது இந்து மதத்தினைச் சார்ந்தவர்களுக்கே கூட ஒட்டுமொத்த இந்துக்களுக்கான பொதுவான பண்டிகை கிடையாது. நவராத்திரி என்பது மகிசாசூரனை துர்க்கை வதம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. பிரம்மனிடம் வரம் பெற்ற மகிசாசூரன் எனும் அசுரன் தேவர்களை துன்புறுத்துவதாகவும், அதற்காக துர்க்கை மகிசாசூரனைக் கொல்வதாக ’தேவி மகாத்மியம்’ எனும் புராண நூல் குறிப்பிடுகிறது.
மகிசாசூரன் எருமையினை ஊர்தியாகக் கொண்டவனாகவும், இன்னும் சில இடங்களில் மகிசாசூரன் எருமைத் தலையினை கொண்டவன் என்றும் கூறப்படுகிறான். ஆரியக் கருத்தியலின்படி பசு புனிதத்தின் அடையாளமாகவும், எருமை இழிவின் அடையாளமாகவும் காட்டப்படுகிறது. எருமை ஊர்தியைக் கொண்ட மகிசாசூரன் தீய சக்தியாக சித்தரிக்கப்படுவதும், எருமை இழிவாக சித்தரிக்கப்படுவதும் ஒரு புள்ளியில்தான் இணைகிறது.
திராவிட மற்றும் பழங்குடி மக்களின் நாகரிகமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தில் எருமையின் அடையாளம் கொண்டாடப்பட்டு வந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன. சிந்துவெளி முத்திரைகளில் கூட எருமைச் சின்னங்கள் கிடைத்துள்ளன. எருமைகள் வீட்டு விலங்குகளாக பயன்படுத்தப்பட்டது கூட சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்துதான் உலகின் பிற பகுதிகளுக்கு பரவியிருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்றும் கூட பல பழங்குடி சமூகங்களில் எருமைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
”தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையோடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய”
என்று தமிழர்கள் எருமையை வணங்குவதைப் பற்றி சங்க இலக்கிய கலித்தொகை பாடல் குறிப்பிடுகிறது.
எருமை ஊர்தியினைக் கொண்ட மகிசாசூரனை இன்றும் பல பழங்குடிகள் தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். அசுரனாகக் காட்டப்பட்ட மகிசாசூரன், தேவர்களுக்காக வதம் செய்யப்பட்டது என்பது ஆரியப் படைகள் பழங்குடி மற்றும் திராவிட மக்களின் மீது நிகழ்த்திய போரின் ஒரு பகுதி என்று பல வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஜார்க்கண்டில் அசுர் பழங்குடி மக்கள் மகிசாசூரனை தங்கள் நிலத்தை ஆரியப் படையெடுப்பிலிருந்து காக்க போராடிய தலைமையாகவே வணங்குகின்றனர். ஆரிய-பழங்குடிப் போரில் பழங்குடி மக்களை வீழ்த்தி ஆரியர்கள் பெற்ற வெற்றியின் அடையாளமாகவே நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
ராவண வதமும், விஜயதசமியும், ஆர்.எஸ்.எஸ்.-சும்
அதேபோல்தான், விஜயதசமி நாள் என்பது ராவணனைக் கொன்ற நாளாக அறிவித்து, வட மாநிலங்களில் ராம்லீலா என்ற பெயரில் ராவணனின் உருவத்தினை எரித்துக் கொண்டாடுகிறார்கள். ராவணனும் பல பழங்குடிகளின் கடவுளாகவும், தமிழ் நிலத்தின் பேரரசனாகவும் அறியப்படுகிறார். இதுவும் ஆரிய-திராவிடப் போரின் குறியீடாகவே அடையாளம் காணப்படுகிறது.
இதனால்தான் ஆரிய மதவாதிகள் இணைந்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினை விஜயதசமி நாளன்று உருவாக்கினர். விஜயதசமி நாளைத்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் தங்கள் இயக்க விழாவாகவும் கொண்டாடுகின்றனர்.
வட மாநிலங்களைப் போல் தசரா எனப்படும் இந்த 10 நாள் விழா தமிழ்நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படாவிட்டாலும் தொடர்ச்சியாக ஊடகங்கள் வழியே அப்பண்டிகைக்கான கலாச்சார திணிப்பு நடத்தப்படுகிறது.
சுமங்கலியா இருக்குறவங்க வாம்மா! அனிதாவின் வாதம்
பிக்பாசில் நடத்தப்பட்ட இந்த விஜயதசமி கொண்டாட்டத்தின்போது விளக்கு ஏற்றி கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. அதற்காக அனைவரும் கூடி நிற்கும் போது, அக்கூட்டத்தில் மூத்தவரான சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத்தை அழைத்து சுமங்கலியா இருக்குறவங்க வாம்மா! என்கிறார். முதலில் அனிதா விளக்கேற்றிய பிறகு அனைவரும் ஏற்றுகிறார்கள். ஆட்டம், பாட்டம், உணவுப் போட்டி என பல போட்டிகள் நடக்கின்றன.

இந்த மொத்த நிகழ்வுகளுக்கும் அனிதா சம்பத் தொகுப்பாளினியாக நியமிக்கப்படுகிறார். அதன்பிறகு கிராமமா? நகரமா? என பேச்சுப் போட்டி நடக்கிறது. அதன் முடிவில் அனிதா சம்பத் பேசும்போது நகரத்திற்கு ஆதரவாக தன்னிடம் சில கருத்துகள் இருப்பதாகக் கூறி, கிராமத்தில் இன்னமும் சாதியம் குறித்தான ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். கிராமப் பகுதிகளில் ஒரு வேலைக்குப் போனால் முதலில் “நீங்க என்ன ஆளுங்க?” என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள். ஆனால் நகரங்களில் பெரும்பாலும் அப்படி யாரும் கேட்பதில்லை என்று சொன்னார்.

கிராமம், நகரம் குறித்த விவாதத்தில் வேறு யாரும் முன்வைக்காத மிக முக்கியமான சமூக விடயத்தினை அனிதா அங்கு முன்வைத்தார். சாதியும், சாதி ஒடுக்குமுறையும் இன்னும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்த ஒரு நவநாகரீக மனிதருக்கும் கோபம் வரக்கூடாதுதானே! ஆனால் அதிலிருந்தே சுரேஷின் முகம் மாறத் தொடங்கியது.

அடுத்ததாக அனிதா தன்னை “சுமங்கலி வாம்மா” என்று அழைத்து விளக்கேற்ற சொன்ன விடயத்தைப் பற்றி பேசுகிறார். ”கணவன் இறந்துவிட்டாலே அந்த பெண்களை வித்தியாசமாக சித்தரிக்கும் வழக்கம் கிராமங்களில் இன்னும் சில இடங்களில் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணமாய் இன்றைக்கு இங்கேயே பார்க்க முடிந்தது. சுமங்கலி யார் இருக்கீங்க என்று கேட்டுவிட்டு அனிதா முதலில் வா என்று கூப்பிட்டார். ஒருவேளை நான் அப்படியான பெண்ணாக இல்லாமல் இருந்திருந்தாலோ, ஒரு கணவன் இறந்துவிட்ட பெண் அந்த இடத்தில் இருந்திருந்தாலோ அவர்களின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்க்கிறேன். இதுபோன்ற தன்மை கிராமங்களில் அதிகமாக இருக்கிறது. இன்னும் எந்த நல்ல நிகழ்வுகளாக இருந்தாலும், சுமங்கலி யார் இருக்கீங்க, வந்த ஆரம்பிச்சு வைங்க அப்டின்னுதான் சொல்வாங்க. என் திருமண நிச்சயதார்த்தத்தின் போது, என் அம்மாவே எல்லாத்தையும் தொடங்கி வச்சாங்க, என் மாமனார் இறந்து விட்டதால், என் மாமியார் ஓரமாகவே நின்று கொண்டிருந்தாங்க. அப்போது நாங்க அவங்கள கூப்பிட்டு நீங்க வந்து ஆரம்பிங்க, சுமங்கலி ஆரம்பிக்கலனா அப்டி என்ன நடந்திடும் என்று ஆரம்பித்து வச்சோம். அந்த மாதிரியான சீர்திருத்தங்கள் நகர்ப்புறங்களில்தான் நடக்குது” என்று சொன்னார்.
நல்ல நாளில் சீர்திருத்தம் பேசக் கூடாதா? தொடர்ந்து சர்ச்சையாக்கிய சுரேஷ்
அதை அவர் சொன்னதற்கு சுரேஷ் சக்ரவர்த்தியின் முகம் மோசமாக மாற ஆரம்பித்தது. ஒரு நல்ல நாளில் இப்படி பேசுவது அபத்தமானது என்று வெறுப்புடன் பேச ஆரம்பித்தார். நிஷா, அர்ச்சனா என்று ஒரு குழுவினர் அனிதா அபத்தமாக பேசியதாக சுரேஷ் சக்ரவர்த்தியுடன் சேர்ந்து நின்றனர். அத்தோடு நில்லாமல், ”சுமங்கலியாக இல்லாவிட்டால் விளக்கு ஏற்றக்கூடாதா?” என்று அனிதா பேசியதை அபத்தம் என்றும், நல்ல நாளில் இப்படியா பேசுவது, இதெல்லாம் ஒரு பொண்ணா என்ற ரீதியில் தொடர்ச்சியாக நாள் முழுக்க அதனை ஒரு பிரச்சினையாக உருவாக்கிக் கொண்டே இருந்தார். அங்கிருந்த குழுவினரும் அனிதாவிற்கு ஆதரவாக நிற்பதற்கு பதிலாக சுரேஷ் சக்ரவர்த்தியை சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர்.
சுமங்கலி யாரும்மா வாங்க என்று சுரேஷ் சொன்னது அபத்தமாகவே யாருக்கும் தோன்றாதது தான் பிக்பாசின் உண்மையான அபத்தமாக இருந்தது.
சேரி பிகேவியர் என்று சொன்ன காயத்ரி ரகுராம்
இதேபோல்தான் பிக் பாஸ் முதல் சீசனின் போது தற்போது பாஜகவில் இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் அப்போட்டியில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர் ஒருவரை “சேரி பிகேவியரில்” செயல்படுவதாக சாதி ஆதிக்க மனநிலையுடன் மற்றவர்களிடம் பேசினார். அது சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளானது. ஒருவர் மீது பாட்டிலை வீசுவதைக் காட்டிலும், மோசமான வன்முறை ஒருவரின் செயல்பாட்டை சாதிய ரீதியில் இழிவுபடுத்துவது. இந்த வன்முறைக்காக காயத்ரி ரகுராம் அப்போதே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் இல்லையா!

இயல்பான உரையாடல் என்ற பெயரில் இன்னும் எத்தனை இழிவுகளை முன்வைக்கப் போகிறீர்கள்?
கலாச்சாரம் என்ற பெயரிக் சாதிய ரீதியிலோ, பாலின ரீதியிலோ, மத ரீதியிலோ ஒரு வகைப்பாட்டை வீட்டிற்குள் உருவாக்க முயல்வது குற்றம் என்று பிக் பாஸ் விதிமுறைகளில் ஏன் சேர்க்கப்படவில்லை? சேரி பிகேவியரில் தொடங்கியதுதான் இப்போது சுமங்கலி, அமங்கலி என்ற பிரிவில் வந்து நிற்கிறது. நல்ல நாளின் போது விதவைகளை தள்ளி வைப்பதில் என்ன தவறு என்ற பிற்போக்கு மனநிலை சரியானதாக ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இப்படி பேசுவது நிகழ்ச்சி பொறுப்பாளரான சோ கால்ட் பிக் பாசினால் உடனடி கண்டனத்திற்கு உள்ளாக்கப்படாமல், வார இறுதியில் கமலஹாசன் பஞ்சாயத்திற்கு வந்து தீர்த்து வைக்க வேண்டும் என்று எதற்காக இந்த அபத்தங்கள் வாரம் முழுதும் தொடர வைக்கப்பட வேண்டும். அனிதா முன்வைத்த சரியான கருத்து இழிவான கருத்தாக சித்தரிக்கப்பட்டு, ஒரு வாரம் முழுக்க ஏன் மன்னிப்பு கேட்டு காத்திருக்க வேண்டும்?
ஊடகங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.