அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA- National aeronautics and space administration) நிலவில் சூரிய வெளிச்சம்படும் பகுதிகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. நேச்சர் அஸ்ட்ரானமி (Nature Astronomy) என்கிற அறிவியல் இதழில் வெளிவந்துள்ள இரு ஆராய்ச்சி முடிவுகளின் விவரத்தில் நாம் முன்னர் நினைத்ததை விட அதிக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா சோபியா (SOFIA) என்கிற தொலைதூர ஆய்வுக்களம் மூலமாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. நிலவில் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, பூமியிலிருந்து பார்க்கும்போது தெரியும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் (Clavius) பள்ளத்தில் நீர் மூலக்கூறுகளை (H2O) சோஃபியா கண்டறிந்துள்ளது.
“இதற்கு முன்னால் நிலவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் ஹைட்ரஜன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அது தண்ணீரா (H20) அல்லது அதன் நெருங்கிய வேதியியல் மூலகூரான ஹைட்ராக்சில்லா (OH) என்பதில் குழப்பம் நிலவி வந்தது. மேலும் இந்த கண்டுபிடிப்பு குளிர்ந்த, நிழல் தரும் இடங்களில் மட்டுமல்லாமல் நீரானது நிலவின் மேற்பரப்பு முழுவதும் பரவி இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது” என நாசாவின் அறிக்கை தெரிவிக்கிறது.
2009-ம் ஆண்டு இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலம் தான் முதன்முதலில் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது. ஆனால் அது தண்ணீரா (H20) அல்லது அதன் நெருங்கிய வேதியியல் மூலகூரான ஹைட்ராக்சில்லா (OH) என்பதில் குழப்பம் நிலவி வந்தது. தற்போது நிலவில் காணப்படுவது தண்ணீர் தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாசாவில் உள்ள அறிவியல் பணி இயக்குநரகத்தில் வானியற்பியல்(Astro Physics) பிரிவின் இயக்குநர் பவுல் ஹெர்ட்ஸ்(Paul hertz) இந்த ஆய்வு முடிவுகள் நிலவின் மேற்பரப்பைப் புரிந்து கொள்வதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். “நமக்குத் தெரிந்த நீர் மூலகூறான H2O நிலவின் சூரிய ஒளி படும் பகுதிகளில் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன. தற்போது இந்த கண்டுபிடிப்பு நிலவின் மேற்பரப்பைப் பற்றி நமக்கிருந்த புரிதல்கள் குறித்து சவால்களை உருவாக்கியுள்ளது. மேலும் விண்வெளி குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான வளங்களைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.” என தெரிவித்தார்.
நிலவில் உள்ள மணலில் அல்லது இயற்கையான கண்ணாடி போன்ற துகள்களுக்கிடையில் நீர் மூலக்கூறுகள் சிக்கியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். “நான் கண்டறிந்துள்ளது பனிக்கட்டி என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை” என மேரிலாந்தில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தைச் சேர்ந்த கேசி ஹொன்னிபால் ‘ தி ராய்ட்டர்ஸ்’ ( The Reuters) செய்தியில் தெரிவித்துள்ளார். ”இது வெறும் நீர் மூலக்கூறே – அவை மிக பெரிய அளவில் பரவியுள்ளதால் அவை ஒவ்வொன்றும் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதால் பனிக்கட்டி அல்லது திரவ நீராக உருவாகவில்லை” என்றும் கூறியுள்ளார்.
இரண்டாவது ஆய்வு நிலவில் உள்ள “குளிர் பொறிகளை”( Cold Trap) மையமாகக் கொண்டுள்ளது. நிலவில் இந்த பகுதிகள் இருளில் உள்ளன மற்றும் இப்பகுதிகளில் வெப்பநிலை -160 டிகிரி செல்சியஸ் கீழே தான் இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள உறைந்த நீர் பில்லியன் ஆண்டுகள் வரை நிலையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் ஹெய்ன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் ( Lunar Reconnaissance Orbiter) விண்கலத்தைப் பயன்படுத்தி குளிர் பொறிகளில் பில்லியன் கணக்கான சிறிய நிழல்களைக் கண்டுபிடித்துள்ளனர். “நிலவில் முன்னர் அறியப்படாத பல பகுதிகளில் ஏராளமான பனிக்கட்டியை கொண்டிருக்கக்கூடும் என்பதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. மேலும் நாங்கள் முன்னர் நினைத்ததை விட நிலவின் துருவப் பகுதிகளில் நீர் பரவலாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதும் தற்போது இந்த நிரினை அணுகவும், பிரித்தெடுக்கவும் பகுப்பாய்வு செய்வதும் எளிதாகி உள்ளது” என்று ஹெய்ன் கூறியுள்ளார்.