விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மனுஸ்மிருதி நூலுக்கு எதிராக பேசியதற்கு, அவருக்கு எதிராக போராடுவதற்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ தலைமையில் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி புறப்பட்ட 13 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு பக்கம் குஷ்பூ கைது செய்யப்பட்டது அராஜகமானது என்று பாஜக தலைவர்கள் கண்டனத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். குஷ்பூ கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவதாக செய்திகளிலும் வெளியானது.
கைது செய்யப்பட்ட குஷ்பூ உள்ளிட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டு கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் சதன் ரெசிடன்சி எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்து நெட்டிசன்கள் கடுப்பாகி இதுக்கு பேர்தான் அரெஸ்டா என்று கலாய்த்து வருகிறார்கள்.
வழக்கமாக அரசியல் ரீதியான போராட்டங்களுக்காக கைது செய்யப்படும் அரசியல் கட்சியினர் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, சமூக நலக் கூடங்களிலோ அல்லது எளிமையான வாடகைக்கு கிடைக்கும் பழைய திருமண மண்டபங்களிலோ தங்க வைக்கப்படுவதுதான் வழக்கம். குஷ்பூவும், பாஜகவினரும் ஏசியுடன் கூடிய சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட படங்கள் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
நடைபயிற்சி செய்வதற்கேற்ற பசுமையான நிழல் படர்ந்த தோட்டங்கள், மரங்கள், கண்ணாடி சுவர்கள், டைனிங் டேபிள்கள், சோஃபா, குஷன் சேர்கள் என குஷ்பூ கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணப்படும் விடுதி ஒரு ஐந்து நட்சத்திர விடுதியைப் போல இருக்கிறது.
சாமானியர்கள் கைது செய்யப்பட்டால் இப்படித்தான் அரசு நடந்து கொள்ளுமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் குஷ்பூ விடுதிக்கு முன்னே தரையில் அமர்ந்து கொண்டு ஆவேசமாக ரெடியாகி பேசிக் கொண்டிருந்த போது, எதிர்லே வீடியோ எடுத்துக் கொண்டிருப்பவர் ரிப்பீட் என்று சொல்ல, ”ஏம்மா..ஒரு ஃப்ளோவுல போகும்போது..” என்று குஷ்பூ கடுப்பாகி சொன்னதையே மீண்டும் ரிப்பீட் செய்த வீடியோவையும் கலாய்த்து பரப்பி வருகிறார்கள்.