இலங்கையின் துறைமுக முனையத் திட்டத்தில் இந்தியா மீண்டும் இனைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முதலீட்டில் இத்திட்டம் செயல்பட இருக்கிறது.
2019-ல் கையெழுத்திடப்பட்ட துறைமுக முனையம்
2019-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, ஜப்பான் நாடுகளின் முத்தரப்பு பங்களிப்புடன் துறைமுக முனையத் திட்டம் ஒன்று கையெழுத்திடப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரை முனையத் திட்டம் (East Coast Terminal) என்றழைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட இருந்தது.
கொழும்பு துறைமுகத்தின் மற்றொரு பகுதியில் சீன முதலீட்டில் கொழும்பு சரக்கு பெட்டக முனையமும் இயங்கி வந்தது. இத்துறைமுக முனையப் பகுதிகளிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இலங்கையில் சீனா அமைக்கும் துறைமுக நகரமும் உள்ளது.
இந்திய துறைமுகத் திட்டத்தை ரத்து செய்த ராஜபக்சே அரசு
இலங்கையின் முந்தைய சிறிசேனா அரசால் கையெழுத்திடப்பட்ட கிழக்கு கடற்கரை முனையத் திட்டத்தை தற்போதைய ராஜபக்சே சகோதரர்களினுடைய ஆளும் கட்சியின் தொழிற்சங்கமும், பெளத்த பிக்குகளின் சங்கமும் எதிர்த்தது. இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது என மேலும் பல தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே ராஜபக்ஷே சகோதரர்களின் அரசு, கடந்த மாதம் கிழக்கு கடற்கரை முனையத் திட்டத்தை ரத்து செய்தது.
இது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் அரசுகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன. மேலும் இலங்கையுடனான இந்நாடுகளின் அரசியல் உறவில் குழப்பத்தை விளைவித்தது.
மேற்கு கடற்கரை முனையத் திட்டத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ள இந்தியா
இந்நிலையில் தற்போது இலங்கை மீண்டும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை தனது துறைமுகத் திட்டத்தில் இணைத்திருக்கிறது. முன்னர் கையெழுத்திடப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருந்த கிழக்கு கடற்கரை முனையத்தில் அல்லாமல், தற்போது மேற்கு கடற்கரை முனையத்தில் இணைத்திருக்கிறது. இந்தியா தரப்பில் அதானி குழுமம் இதற்கான முதலீடுகளை செய்ய உள்ளது. குறிப்பிட்ட திட்டத்தில் 85% சதவீத பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளது.
சீன ஆதரவு நிலைப்பாடு காரணமா?
முந்தைய கிழக்கு கடற்கரை முனையத் திட்டத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் 49% பங்குகளையும், இலங்கை அரசு 51% பங்குகளையும் கொண்டு செயல்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை அரசால் இத்திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியா தரப்பில் மீன்டும் இத்திட்டத்திற்காக தொடர் அழுத்தம் தரப்பட்டு வந்தது.
சீனா தரப்பிலிருந்து தரப்படும் அரசியல் நெருக்கடியினாலே இந்தியா, ஜப்பான் கூட்டுத் திட்டத்தை இலங்கை ரத்து செய்தது என சொல்லப்பட்டது. இதற்கு முன்னதாக சிறிசேனா ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட ஜப்பான் முதலீட்டிலான ரயில் திட்டத்தையும் ராஜபக்ஷே சகோதரர்கள் ஆட்சி ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மீதான ஐ.நா தீர்மானத்தை மீண்டும் கையிலெடுக்கும் அமெரிக்கா
கடந்த அக்டோபர் மாதம் அரசியல் பயணமாக இலங்கை சென்ற அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ,” சீனா வேட்டைக்காரனைப் போன்றது. அமெரிக்காவே இலங்கைக்கான நட்பு நாடு” என்ற ரீதியில் பேசியிருந்தார். அமெரிக்கா இலங்கையில் தொடரும் சீனாவின் ஆதிக்கத்தை விரும்பவில்லை. இந்நிலையில் முந்தைய இலங்கை ஆட்சி மாற்றத்திற்கு பயன்படுத்திய ‘இலங்கை மீதான ஐ. நா மனித உரிமை ஆணைய விசாரனை’ என்ற யுக்தியை அமெரிக்கா மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் ஆதரவு கோரும் இலங்கை
இதனை எதிர்கொள்ள இந்தியா உள்ளிட்ட ஐ.நா உறுப்பு நாடுகளிடம் இலங்கை ஆதரவு கோரி வருகிறது. அதன் பொருட்டு இந்தியா இலங்கையிடம்,’ ரத்து செய்யப்பட்ட குறிப்பிட்ட துறைமுகத் திட்டத்தை’ திரும்ப நிறைவேற்றித் தரும்படி கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதன் காரணமாகவே முந்தைய மாதத்தில் ரத்து செய்யப்பட்ட, 49% பங்குகளைக் கொண்டிருந்த இந்தியா+ஜப்பான் கூட்டுத் திட்டத்தை, அதற்கு அடுத்த மாதத்திலேயே மற்றொரு பகுதியில் 85% பங்குகளுடன் அதானி குழுமம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
பகடைக் காயாக பயன்படுத்தப்படும் தமிழர்களின் சிக்கல்
இலங்கைத் தீவில் உள்ளபடியே தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட, நிகழும் இனஅழிப்பு நடவடிக்கையை தடுப்பதற்காகவோ, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதற்காகவோ அல்லாமல், அமெரிக்கா தனது அரசியல் நலனுக்காகவே இலங்கை மீதான ஐ.நா மனித உரிமை ஆணைய விசாரணை என்பதை பயன்படுத்தி வருவதை அதனது கடந்தகால முன்னெடுப்புகள் உணர்த்துகின்றன.
தற்போது வேகமெடுக்கும் ‘இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணைய விசாரணையைப் பயன்படுத்தி இலங்கை மீதான தங்களது அரசியல் நலனை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிறைவேற்றிக் கொள்கின்றன. அதனது சிறு வெளிப்பாடே அதானி குழுமத்திற்கு கொழும்பு மேற்கு கடற்கரை முனையத் திட்டம் கையளிக்கப்பட்டிருப்பதாகும்.
மோடியின் குறிக்கோள் இந்து ராஜ்யம். தமிழர் நலம் பற்றிக் கவலையில்லை. இலங்கையிலும் குஜராத்திகள் ஆதிக்கம் இனி தொடரும்.