மகளிர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்களே வீரியம் மிக்கதாய் இருந்திருக்கின்றன. கோரிக்கையை சமரசமில்லாமல் முன்வைத்து நீண்ட நாட்கள் நடத்தி தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டங்களாய் அப்போராட்டங்களே இருந்திருக்கின்றன.
இந்த மகளிர் நாளில் பெண்கள் முன்னின்று நடத்திய சமரசமில்லா 5 போராட்டங்களைப் பார்ப்போம்.
1. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்
தமிழ்நாட்டின் அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு முன்மாதிரியாய் திருப்புமுனையை ஏற்படுத்திய போராட்டம் என்று இடிந்தகரை கிராமத்து பெண்கள் முன்னின்று நடத்திய கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தைக் குறிப்பிட்டால் மிகையாகாது.

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரை கிராமத்து மக்கள் துவங்கிய உண்ணாவிரதப் போராட்டமானது தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் தென்கோடிக் கிராமமான இடிந்தகரையில் குவிய வைத்தது. இடிந்தகரை மாதா ஆலயத்தின் முன்பு அமர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கேயே அமர்ந்துவிட்டனர். 2011-ம் ஆண்டு துவங்கிய போராட்டம் 3 ஆண்டுகளாக 1000 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அப்போராட்டம் நடைபெற்றது.

போராட்டப் பந்தலுக்கு அருகிலேயே பாத்திரங்களை வைத்து சமையல் செய்யப்பட்டது. காவல்துறையினர் மூலமாக கிராமத்தையே முற்றுகைக்கு உள்ளாக்கி பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எல்லாம் முடக்கியபோதும் போராட்டம் நிற்கவில்லை. பெரும்பாலான ஒருங்கிணைப்புகளை பெண்களே மேற்கொண்டனர். கடற்கரையில் அணு உலை முற்றுகைப் போராட்டத்தின் போது, பெண்களே முன்னின்று காவல்துறையின் தடியடியையும், கண்ணீர் புகை குண்டுகளையும் சந்தித்தனர். சிறைக்கும், வழக்குகளுக்கும் உள்ளானார்கள்.
இடிந்தகரை பெண்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டன. அந்நியக் கைக்கூலிகள் என்றும், காசு வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள் என்றும் அவதூறுகள் பரப்பப்பட்டன. அமைதியாக எந்த வன்முறையும் இல்லாமல், அகிம்சை வழியில் தொடர்ந்து நடைபெற்றது போராட்டம். ஆண்கள் மீன்பிடிக்கச் சென்றும், பெண்கள் போராட்டப் பந்தலிலேயே அமர்ந்து பீடி சுற்றியும் போராட்டத்தினைத் தொடர்ந்தனர். ரோசலின் என்ற பெண்மணி போராட்டத்தின் போதே உயிர்நீத்தார். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் அணுக்கதிர்வீச்சு குறித்தும், சூழலியக் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது இப்போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.

2. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் குமாரரெட்டியாபுரம் கிராமத்தின் பெண்கள் மிக முக்கியமான பாத்திரங்களை வகித்தனர். 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கிய இப்போராட்டத்தினை 100 நாட்கள் தொடர்ச்சியாக இடைவிடாமல், அமைதியான வழியில் பெண்களே முன்னின்று நடத்தினர். இடிந்தகரை போராட்டத்தைப் போலவே முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் இப்பெண்களின் போராட்டம், குமாரரெட்டியாபுரத்திற்கு வரவழைத்தது.

இப்போராட்டத்தின் 100வது நாளில் 2018 மே 22 அன்று நடைபெற்ற பேரணியின் போது திட்டமிட்டு வன்முறை ஏவிவிடப்பட்டது. பேரணியாகச் சென்ற மக்களின் மீது தமிழக காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இத்துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டார்கள். அதில் ஜான்சி ராணி, ஸ்நோலின் ஆகிய இரண்டு பெண்கள் பலியானார்கள்.

17 வயது மாணவியான ஸ்நோலின் வாயிலே சுட்டுக் கொலை செய்யப்பட்டது, தமிழக மக்களை அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியது. இத்துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து தமிழ்நாடு முழுதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மக்களின் கோபம் அதிகரித்ததால், ஸ்டெர்லைட் ஆலையினை இழுத்து மூடுவதாக அறிவித்து ஆலைக்கு சீல் வைத்தது தமிழக அரசு. தமிழ்நாட்டின் சூழலியல் பாதுகாப்பு குறித்தான அனைத்து உரையாடல்களின் போதும் குமாரரெட்டியாபுரத்தின் பெண்கள் பெயர் இடம்பெறுவது இனி தவிர்க்க முடியாதது.
3. ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் போராட்டத்திலும் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரிய விளையாட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விளையாட்டாக இருந்தபோதும், தமிழ்நாட்டின் பண்பாடு சிதைக்கப்படுவதாய் பெண்கள் இப்போராட்டத்தில் அலைஅலையாய் வந்து முன்னின்றனர்.

மெரீனாவில் ஜனவரி17-ம் தேதி போராட்டத்தைத் துவங்கியதிலிருந்தே பெண்களின் பங்களிப்பே முக்கியமானதாய் இருந்திருக்கிறது. 6 நாட்களும் பெண்கள் குடும்பம் குடும்பமாய் திரண்டனர். அச்சம், மடம், நாணமே பெண்களுக்குத் தேவை எனும் பழமைவாதத்தினை தூக்கியெறிந்துவிட்டு எழுச்சி முழக்கங்களை எழுப்பினர். குழந்தைகளை போராட்டத்திற்கு அழைத்து வந்தனர். பெண்கள் போராட்டத்தில் வந்து விட்டால், ஒரு போராட்டம்கூட எப்படி குடும்ப நிகழ்வைப் போலவும், ஒரு விழாவைப் போலவும் கொண்டாட்டமாய் மாறிவிடும் என்பதற்கு இப்போராட்டமே சாட்சியாக அமைந்தது.

இறுதி நாளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்துகிறது என்ற செய்தியைக் கேட்டவுடன் கடற்கரைக்கு ஓடோடி வந்தனர் மீனவ குப்பங்களின் ஆண்களும், பெண்களும். போராடிய இளைஞர்களையும், மாணவர்களையும் பாதுகாப்பதற்காக தங்கள் வீடுகளில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, மீனவப் பெண்கள் காவல்துறையினரிடம் தடியடி வாங்கினர். அவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட போதும் இளைஞர்களைக் கைவிடவில்லை. பெண்களின் சமரசமில்லா போர்க்குணத்திற்கு இப்போராட்டம் மற்றுமொரு உதாரணமாய் அமைந்தது.
4. நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டம்
ஜல்லிக்கட்டுப் போராட்டம் விவசாயம் குறித்தும், விவசாயிகளின் வாழ்வு குறித்தும், தற்சார்பு குறித்தும் ஒரு முக்கியமான விழிப்புணர்வை உண்டாக்கியிருந்தது. அந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆணை வெளிவந்தவுடன் அதற்கு தமிழ்நாடு முழுதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. டெல்டாவை காப்போம் என்ற பெயரில் ஏராளமான பரப்புரைகள் நடைபெற்றன. நெடுவாசல் கிராமம் போராட்டக் களமாக மாறியது.


அங்கும் பெண்களே முன்னின்று அப்போராட்டம் தொடர் போராட்டமாக மாற்றப்பட்டது. அரசியல் தலைவர்களை நெடுவாசலை நோக்கி திரும்ப வைத்தது இப்போராட்டம். நெடுவாசல் போராட்டத்தின் எழுச்சியினால் காவிரி டெல்டா முழுதும் திட்டமிடப்பட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்டமானது வேறுவழியின்றி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று காவிரி டெல்டா கம்பீரமாக நிற்பதற்கு நெடுவாசல் பெண்கள் ஒரு முக்கிய காரணமாய் உள்ளனர்.
இதேபோல் கதிராமங்கலம் எண்ணெய் குழாய் பதிப்பிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும் பெண்களின் பங்கு முக்கியமானதாய் மாறியது. கதிராமங்கலம் ஐயனார் கோயில் அருகே மரத்தடியில் தொட்டிலைக் கட்டிவிட்டு குழந்தையை அதில் தூங்க வைத்துவிட்டு, பெண்கள் போராட்டத்தில் பங்கேற்ற காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கதிராமங்கலத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தியபோதும் பெண்களே பெரும் அடக்குமுறைக்கு உள்ளானார்கள்.

5. சென்னையின் ஷாகின்பாக் (CAA எதிர்ப்பு போராட்டம்)
பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடு முழுவதும் ஏராளமான எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக இசுலாமியர்களின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்படும் என்று அனைத்து மாநிலங்களிலும் இசுலாமியர்கள் கொதித்தெழுந்தனர்.

டெல்லியில் ஷாகின்பாக் என்ற இடத்தில் பெண்கள் நடத்திய போராட்டம் தொடர் போராட்டமாக உருவெடுத்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான அனைவரும் ஷாகின்பாக்கில் கூடத் தொடங்கினார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஷாகின்பாக் பெயரில் தொடர் போராட்டங்களை இசுலாமிய அமைப்புகள் முன்னெடுத்தனர். டெல்லியில் ஷாகின்பாக் போராட்டத்தில் காவி வலதுசாரிகள் வன்முறையை ஏவிவிட்டனர்.

தமிழ்நாட்டில் சென்னை வண்ணாரப்பேட்டையில் சென்னையின் ஷாகின்பாக் என்ற பெயரில் நடைபெற்ற போராட்டமானது பெரும் எழுச்சியுடன் தொடர்ச்சியாக நடைபெற்றது. பெண்கள் எழுச்சியுடன் நடத்திய அப்போராட்டத்தினை எப்படி கலைப்பது என்று தெரியாமல் ஆளும் அதிமுக அரசாங்கம் விழி பிதுங்கி நின்றது. பெண்களே ஒருங்கிணைப்பாளர்களாக, பெண்களே முழக்கமிட்டு அப்போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் கொரோனா பரவ ஆரம்பித்ததால், அனைத்து ஷாகின்பாக் போராட்டங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
முகப்புப் புகைப்படம்: கூடங்குளம் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு நடுவே ஒரு வயதான பெண்மணியின் போராட்டம்