ஆபிரகாம் பண்டிதர்

தமிழிசையின் பெருமையை ஆய்ந்து உலகறியச் செய்த ஆபிரகாம் பண்டிதர்

ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு உரிய சிறப்பினை செய்யாது சிறுமைப்படுத்தி விடுகின்றனர் என்று சாமர்செட் பிளைன் என்பவர் தனது Southern India: It is history of People, Commerce and Industrial resources என்ற புத்தகத்தில் ஆபிரகாம் பண்டிதர் குறித்து எழுதுகிற பொழுது குறிப்பிடுகிற அளவுக்கு சிறப்பு வாய்ந்தவராக வாழ்ந்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் முத்துசாமி நாடார் மற்றும் அன்னம்மாள் 1859-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் நாள் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியைப் பன்றிகுளம் எனும் கிராமத்தில்  படித்தார். 1874-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ள திண்டுக்கல் சென்றது அவரது வாழ்வில் முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்தது. 

சித்த மருத்துவத்தில் ஈடுபாடு

சடையாண்டி பண்டிதரிடம் பிடில் வாசிக்க கற்றுக் கொண்டவர், பழனிக்கு செல்லும் சாதுக்கள், முனிவர்கள், பரதேசிகளிடம் உரையாடுவதன் வழியாக சித்த மருத்துவக் குறிப்புகளை அறியத் துவங்கினார். மருத்துவத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக ஆனைமலைப்பட்டியில் இருந்த பொன்னப்ப நாடாரை சந்தித்து மேலும் வைத்தியம் படிக்கத் துவங்கினார். பொன்னப்ப நாடார் இவரை சுருளி மலைக்கு அழைத்துச் சென்று கருணானந்த முனிவரை சந்திக்கச் செய்தார். கருணானந்த முனிவர் இவருக்கு மருந்துகள் தயாரிப்பதையும், இசை இலக்கணங்களையும் கற்றுக் கொடுத்தார்.

பண்டிதர் தான் தயாரிக்கும் மருந்துகளுக்கு ’கருணானந்த சஞ்சீவி மருந்துகள்’ என்று பெயரிட்டு நன்றிக்கடன் செலுத்தினார். 1882-ம் ஆண்டு பொன்னம்மாள் எனும் ஆசிரியரை  திருமணம் செய்து கொண்டார். 1890-க்குப் பின் மனைவியும் இவரும் ஆசிரியர் வேலையை துறந்துவிட்டு முழுநேரமாக மருந்து தயாரித்து விற்கத் துவங்கினர்.

புதிய தாவரங்களையும், மூலிகைகளையும் வளர்க்க தனி தோட்டத்தை உருவாக்கினர். 1899-ம் ஆண்டு இந்தியாவின் பல இடங்களிலும் குறிப்பாக கோயம்புத்தூர், மைசூர் போன்ற பகுதிகளில் தொற்று நோய் பரவியபோது பண்டிதரின் மருந்துகள்தான் நோய்க்கு மருந்தாகப் பயன்பட்டன. இதனால் அவருடைய புகழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரவியது. சளி, இருமல், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு பயன்படும் சஞ்சீவி செந்தூரம் போன்ற மருந்துகள் அவருடைய பெருமையை காட்டும் கண்டுபிடிப்புகள் ஆகும்.

இந்திய மருத்துவத்துறை கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த டாக்டர் தியாகராஜன், ”தற்காலத்தில் இருப்பது போன்ற சிறந்த மருத்துவமனைகள் இல்லாத அக்காலத்திலேயே பண்டிதர் அவர்கள் பெருமளவில் மருந்துகளை தயாரித்து தமிழ்நாடு மட்டுமின்றி கடல் கடந்து தமிழர்கள் வாழுகின்ற இலங்கை முதலான பல அயல்நாடுகளில் தமிழ் மருந்துகளை வழங்கி வந்தார்” என்று குறிப்பிட்டிருப்பார்.

தமிழிசை ஆய்வுகள்

தமிழ் அறிஞரான ஆபிரகாம் பண்டிதர் சங்கீதம் கற்கும்போது பாடல்கள் தாய்மொழியில் இல்லாதது குறித்து கவலையுற்றார். பாடல்கள் எளிதில் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதுமட்டுமின்றி கலை என்பது மனமகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்தார். தெரியாத மொழியில் பாடல்கள் பாடுவதால் முழு பயனும் இல்லாமல் போய் விடுகிறது என்பதை உணர்ந்து, பாடும் போது பொருள் உணர்ந்து அர்த்த பாவத்துடன் பாட வேண்டும் என்று நினைத்து தமிழ் மொழியில் எளிய இனிய நடையில் எழுத ஆரம்பித்தார். அத்தோடு நிற்காமல் இசை ஆய்விலும் ஈடுபட்டார். 

ஒரு ஸ்தாயில்  22 சுருதிகள் என்று வட மொழி வல்லுநர்களின் கருத்தையே பிற்காலத்தில் திராவிட அறிஞர்களும் கூறிவந்தனர். ஆனால் ஆதித் தமிழ் மக்கள்  24 சுருதிகளை அறிந்திருந்தனர் என்பதைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார் ஆபிரகாம் பண்டிதர். இது தமிழ் மொழிக்கும், தமிழர் வரலாற்றுக்கும் பண்டிதர் செய்த மாபெரும் பணியாகும்.

தன் ஆய்வுகளை பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் முன்வைத்து, தனது மகள்களான மரகதவல்லி, கனகவல்லி ஆகியோரை 24 சுருதிகளையும் பாடி காட்ட செய்ததுடன், வீணையில் வாசித்துக் காட்டவும் செய்தார்.

பண்டிதர் நடத்திய இசை மாநாடுகள்

மருத்துவத் துறையில் தான் சேர்த்த பெரும் செல்வத்தை தமிழிசைப் பணிக்கு செலவு செய்தார். ஏழு இசை மாநாடுகளை சிறப்பாக நடத்தினார்.

முதல் இசை மாநாடு 27.5.1912
2வது இசைமாநாடு  21.8.1912
3வது இசைமாநாடு 19.4.1913
4வது இசை மாநாடு 9.8.1913
5வது இசை மாநாடு 18.4.1914
6வது இசை மாநாடு 24.10.1914
7வது இசை மாநாடு 19.08.1916

தஞ்சையில் நடைபெற்ற முதல் இசை மாநாடு

இசை மாநாடுகளிலும் இசை ஆய்வுகளில் சுருதி பற்றியே பெரும்பான்மையாக ஆய்வு செய்ய வைத்தார். தனது 15 ஆண்டுகால ஆய்வுகளைத் தொகுத்து 1365 பக்கம் கொண்ட ’கருணாமிர்த சாகரம்’ எனும் புத்தகமாக கொண்டுவந்தார்.

நாகசுரக்காரர்கள் பற்றிய ஆய்வு

நாகசுரம் என்ற தமிழகத்தின் இசைக் கருவியை நாதஸ்வரம் என்று இன்று பலர் அழைக்கின்றனர். இது நாதஸ்வரம் அல்ல நாகசுரமே. நாக வடிவில் இருப்பதாலும், ஏழு நாகங்களின் ஒலியமைப்பின் படி அமைந்த கருவியென்றும், பழங்காலத்தில் இசைவாணர்களை நாகரி என்றும் அழைப்பதாலும் பண்டிதர் ’நாகசுரக்காரர்’ என்றே அழைக்கிறார்.

நாகசுரக் கலையால் தமிழருடைய பண்பாடு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல என்று சொன்ன பண்டிதர், ”நாகசுரக்காரர்கள்  சிறந்த இசைவாணர்களாக திகழ்ந்தனர், இக்கலையை பலருக்கு கற்றுக்கொடுத்தனர். கலையைக் கற்றவர்கள் தாம் அறிந்தவற்றை நூல்கள் வாயிலாக எழுதி வைக்கவில்லை. எழுதி வைத்திருந்தார்கள் என்றால், மிக அரிய கலைச் செல்வங்களை தமிழ் உலகம் நன்கு அறிந்திருக்கும்” என்றும் எழுதியிருக்கிறார்.

தென்னிந்தியாவின் சங்கீத பரம்பரையினர் இசைத்தமிழில் சில நுட்பமான அம்சங்களைக் கொண்ட நூல்களின் கருத்தை அறிந்து கொள்ள இயலாமல் போனவர்களாக இருந்தாலும், ஆதி பண்கள் பலவும் அவர்களாலேயே பேணப்பட்டு வருகிறது என்றும் கூறுகிறார். வீணை வாசிப்பதிலும், வாய் பாட்டிலும் தேர்ந்த வித்வான்களுக்குக் கூட சொல்லிக் கொடுக்கக் கூடியவர்களாக நாகசுரக்காரர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

தென்னிந்தியாவில் சங்கீதத்தில் தேர்ந்த வித்வான்களின் பெயர்களும், அவர்களைப் பற்றிய முக்கியக் குறிப்புகளும் என்ற தலைப்பில் இசைவாணர்கள் பலரைப் பற்றி ’கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தின் முதல் பாகத்தில் குறிப்பிடுகிறார் அதில் பல நாகசுரக்காரர்கள் பற்றிய குறிப்பையும் எழுதியிருக்கிறார்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களும் தமிழிசையும்

பண்டைய தமிழ் இலக்கியங்களே தமிழிசையின் முதல் ஆதாரங்கள் என்று விரிவாக நிரூபித்தவர் பண்டிதர். 

நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தது தமிழ் மரபு. நான்கிற்கும் கருப்பொருள், உரிப்பொருள் வகுத்தது. இது நமது கலை, இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவான இலக்கண அடிப்படையாகும். நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பெரும் பண்கள் கூறப்பட்டுள்ளன. நான்கு பெரும் பண்களும், நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன. 

நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும் போது அதற்கும் பெரும் பண்கள் மற்றும் சிறு பண்கள் வகுக்கப்பட்டுள்ளது. பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். அதை மெட்டு என்றும் கூறலாம். நான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களை பாலை என்கிறோம். 

நமது பழந்தமிழ் இலக்கியங்களில் ஏழ்பெரும் பாலை என்பது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரம் கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்துக் கூறியவர் பண்டிதரே. 

ஏழ்பெரும் பாலைகளாவன

1. செம்பாலை 
2. அரும்பாலை 
3. கோடிப்பாலை 
4. மேற்செம்பாலை 
5. படுமலைப்பாலை 
6. செவ்வழிப்பாலை
7. விரிம்பாலை 

இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டியவர் பண்டிதரே. வட்டப் பாலை முறையில் ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனை என்று தமிழிசை அறிஞர் ந.மம்முது ஒரு நேர்காணலில் கூறினார்.

இசைக் கருவூலமாய் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தை அதன் உரையாசிரியர்களான அரும்பதனார், அடியார்க்கு நல்லார் ஆகியோர் உரை வழியாகக் கற்று, உலகம் முழுவதற்கும் சிலப்பதிகாரம் காட்டும் செந்தமிழ் இலக்கணம் முழுமையானதும் முதன்மையானதுமாக மாறுகிறது என்பதை பண்டிதர் விளக்கினார். மேலும் கால அளவில் சிலப்பதிகாரத்திற்கு பின்வந்த ’சங்கீத ரத்னாகரம்’ போன்ற நூல்கள் விளக்காதவற்றை எல்லாம் சிலப்பதிகாரம் விளக்கியுள்ளது என்பதை நிறுவினார். தொன்மையான இசை மரபுகளை அருளிய இசைக் கருவூலம் சிலப்பதிகாரம் என்பதையும் நிரூபித்துக் காட்டினார்.

ஆசிரியராக, சித்த மருத்துவராக, கவிஞராக, தமிழிசை ஆய்வாளராக தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதர் 

1918-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் நாள் இயற்கை எய்தினார்.

தமிழிசை உலகின் நீண்ட இருளைக் கிழித்து வெளிவந்த முழுமதி ஆபிரகாம் பண்டிதர் நினைவுதினம் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *