கொரோனா நோய்த்தொற்று இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளின் மருத்துவக் கட்டமைப்புகளில் உள்ள ஓட்டைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கொரோனா போன்ற இன்னொரு சுகாதாரப் பேரிடர் மீண்டும் வருமானால், அரசுகளால் அதனை தாக்குப்பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
பேரழிவுகளை உருவாக்கத் தயாராகும் காலநிலை மாற்றம்
தீவிர காலநிலை மாற்றங்கள், காடுகள் அழிப்பு போன்றவையே கொரோனா போன்ற பெருந்தொற்றுகளுக்கு காரணங்களாக இயற்கை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள். உலகளாவிய காலநிலை மாற்றத்தினால் ஆபத்தினை அதிகமாக சந்திக்க வாய்ப்புள்ள நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக வெள்ளம், புயல், பூகம்பம், ஆழிப்பேரலை, பெருந்தொற்று நோய்கள் என இயற்கைப் பேரிடர்கள் உருவாவது சகஜமாக அதிகரிக்கும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இவற்றை எதிர்கொள்ள இயற்கையைக் காப்பது எனும் பணியினை முதன்மைப் பணியாக நாம் செய்யவேண்டியது ஒருபுறம் இருந்தாலும், சுகாதாரக் கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
பொது மருத்துவக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதோடு காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்விற்காக பலதரப்பட்ட தரவுகளை ஒன்று சேர்க்கும் அறிவியல் மட்டுமே எதிர்வரும் பேரிடர்களை நம்மால் ஓரளவிற்காவது சமாளிக்க உதவும்.
இந்திய மருத்துவக் கட்டமைப்பின் போதா நிலை
இந்தியாவின் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மொத்த உற்பத்தியான GDP-ல் வெறும் 1% ஆகத் தான் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் ஏழை மக்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. GDP-ல் 2.5 சதவீதத்தையாவது ஒதுக்கினால் தான் மருத்துவத் துறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று India Spend இணையத்திற்கு கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
இந்தியாவில் ஒரு நபருக்கு சுகாதாரத்திற்காக ஆண்டுக்கு 1,657 ரூபாய் வீதம் மட்டுமே செலவு செய்யப்படுவதாக National Health Profile 2019 அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் ஒரு நபருக்கான செலவு 4000 ரூபாய் வரையில் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் மருத்துவர்கள் எண்ணிக்கையிலும் பற்றாக்குறையே நிலவுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் 10,000 நபர்களுக்கு குறைந்தது 10 மருத்துவர்கள் இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால் இந்தியாவில் அது 7.7 என்ற அளவிலேயே இன்னும் இருக்கிறது.
வலுப்படுத்தப்பட வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்
இந்திய ஒன்றியத்தில் மக்களுக்கு முதல்கட்ட சுகாதார சேவையை 1,56,231 துணை மருத்துவ நிலையங்கள் வழங்குகிறது. இதில் 78,569 துணை மருத்துவ நிலையங்களில் ஆண் சுகாதார ஊழியர்கள் இல்லை என்றும், 6371 இடங்களில் பெண்களுக்கான கருத்தரிப்பு உள்ளிட்டவை குறித்து வேலை செய்யக் கூடிய செவிலியர்கள் இல்லை என்றும், மேலும் 4243 நிலையங்களில் இந்த இருவருமே இல்லை என்றும் 2017-ம் ஆண்டிற்கான ஊரக சுகாதார புள்ளி விவரங்கள் (Rural Health Statistics 2017) கூறுகின்றது.
ஆரம்ப சுகாதார நிலையங்களை நம்பி இந்தியாவில் தினந்தோறும் குறைந்தபட்சம் 10 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவதற்கு மட்டும் 25,650 மருத்துவர்களை பணியமர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1974 மையங்களில் மருத்துவர்களே இல்லை என்றும், அவற்றில் 3027 மருத்துவர்களுக்கான இடங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அப்புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக மொத்தத்தில் தினமும் 1,21,080 நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த ஊரக சுகாதாரக் கட்டமைப்பினை வலிமைப்படுத்தா விட்டால், காலநிலை மாற்றத்தினால் உருவாகும் பெரும் விளைவுகள் ஏழை, எளிய மக்களை.பெரும் சிக்கலான சூழலுக்குள் தள்ளிவிடும்.
அதிகாரத்தினை மையப்படுத்தும் சிக்கல்
இந்திய ஒன்றியத்தில் சுகாதாரத்திற்கான செலவினங்களில் மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் பங்குதாரர்களாக இருந்தாலும் மாநில அரசுகளே கிட்டதட்ட 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பை செய்கின்றன. இப்பெரும் பங்களிப்பை செய்யும் மாநில அரசுகளின் அதிகாரங்கள், நீட் தேர்வு மற்றும் ஒன்றிய அரசின் இதர மையப்படுத்தும் கொள்கைகளால் கேள்விக்குள்ளாக்கப்படுவதால், மாநில அரசுகளும் சுகாதாரக் கட்டமைப்பு குறித்து நிலையான முடிவெடுக்க இயலாத சூழலுக்கு தள்ளப்படுகின்றன.
காலநிலை மற்றும் சுகாதார புள்ளி விவரங்கள் இணைந்த தரவுகளின் தேவை
ஒரு இடத்தில் இருக்கும் நோய்களானது, வெப்பநிலையில் (Temperature) ஏற்படும் மாற்றங்களால், மற்ற இடங்களுக்கும் பரவக்கூடும். மேலும் காலநிலை மாற்றத்தின் (Climate Change) காரணமாக புதிய தொற்று நோய்களும் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொற்றுக்கான காரணிகள் பெருகுவதற்கான சூழலை உருவாக்கி விடுகிறது. உதாரணத்திற்கு வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட டெங்க், சிக்குன் குன்யா போன்ற நோய்களைப் பரப்பும், கொசுக்கள் நாடு முழுதும் பரவுவதற்கான வாய்பினை ஏற்படுத்தி விடுகிறது.
புவி வெப்பநிலை உயர்வின் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்களை அடிக்கடி உண்டாக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது. ஆகவே இதுபோன்ற பெருந்தொற்று சூழலை சமாளிப்பதற்கு அரசுகள் தயாராக வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பல நாடுகள் ஏற்கனவே சுகாதாரப் பின்னடைவினை வலுப்படுத்துவதில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் அவசியத்தையும், இது குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டார்கள். ஆப்ரிக்கா கண்டத்தின் சில நாடுகளில் கூட சில முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன.
தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களினூடாக, காலநிலை மாற்றங்கள் குறித்த பலதரப்பட்ட தகவல்கள் நாம் எளிதாக பெற்றுவிட முடியும். இத்தகவல்களை முறைபடுத்துவதோடு, சுகாதார புள்ளி விவரங்களோடு, காலநிலைப் புள்ளி விவரங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் தனித் துறை நம் நாட்டில் தேவையாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி: IndiaSpend