தமிழீழம் காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் நீதி கேட்கும் தமிழீழ தாய்மார்கள்

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுதும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 72 ஆண்டுகளாக இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். குறிப்பாக இறுதிப் போரின் போது 2009-ம் ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன ஆனதென்று இப்போது வரை தெரியவில்லை.

இறுதிப் போரின் போது கொல்லப்பட்டு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டு கணக்கில் வராத தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 ஆக மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் தாய்மார்களும், உறவினர்களும் கடந்த 2017-ம் ஆண்டு துவங்கிய போராட்டத்தை 4 ஆண்டுகளாக இடைவிடாமல் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் பெரும் திரளான தமிழர்கள் ஒன்று திரண்டு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் முழுவதிலும் பேரணிகளையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் என்பது என்ன?

21 டிசம்பர் 2010 அன்று உலகின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் குறித்து பல்வேறு கருத்தாடல்கள் மேற்கொள்ளப்பட்டு அப்படிப்பட்ட நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் (UN General Assembly) நிறைவேற்றப்பட்டது. 

பிறகு அத்தீர்மானத்தை ஒட்டி, சர்வதேச காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை (International Convention for the Protection of All Persons from Enforced Disappearance) அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டிலிருந்து ஆகஸ்ட் 30 என்ற நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளாக அனுசரித்திடவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு தமிழ் மக்கள் நடத்திய நிகழ்வுகள்

இலங்கையில் இறுதிப் போர் நிறைவடைந்து 11 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் தமிழர்கள் நீதிக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடைபெற்று வரும் காணாமல் ஆக்கபட்ட தாய்மார்களின் போராட்டத்தில், இதுவரை 72 தாய்மார்கள் போராட்டக் களத்திலேயே இறந்திருக்கிறார்கள். 

இதுகுறித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்” இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ”இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ஐ.நா-வைக் கோருவதன் மூலமாக நீதியைப் பெற வேண்டும. நாமும் இறந்து போகும் முன் எமக்கான நீதி வேண்டும், இதுவே எமது கடைசி ஆசை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் மாபெரும் மக்கள் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பிருந்து கச்சேரியடி வரையிலும், மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலும் பேரணிகள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றனர். தங்கள் பிள்ளைகளை திரும்ப அளிக்கக் கோரி கதறி அழுதுகொண்டே தாய்மார்கள் பேரணியில் பங்கேற்றது அனைவரையும் கலங்கச் செய்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டி யாழில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டி யாழில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டதின் பதிவுகள்…..#justice4disappearedtamils

Posted by Solidarity for Tamil Eelam on Sunday, August 30, 2020
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியின் காணொளி

மேலும் யாழ்ப்பாணத்தில் கிட்டு பூங்காவில் துவங்கி ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தில் (UNHCR) மனு கையளிக்கப்பட்டது. 

முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற தமிழர்களின் அனைத்து போராட்டங்களிலும், உள்நாட்டு விசாரணை முறைகளில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்றும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை சர்வதேச விசாரணை மூலமே உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒருசேர வைத்திருந்தனர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (ஆகஸ்ட் 29) தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தினை ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சென்னையில் நடைபெற்ற போராட்டம்

தங்கள் பிள்ளைகளை தேடி ஓயாமல் போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் வலிசுமந்த இந்த போராட்டத்திற்கு சர்வதேசம் உடனடியாக செவி சாய்க்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் குரலாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *