அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்

பிரிட்டிஷ் ஒன்றியத்தைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனேகா (AstraZeneca) நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்ட நபருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

சுமார் 37 வயது மதிக்கத்தக்க பெண்மணிக்கு இருமுறை கொடுக்கப்பட்ட அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்தின் தடுப்பூசியைத் தொடர்ந்து இந்த மாதம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஸ்ட்ரா ஜென்கா நிறுவனத்திற்குள்ளாக அனுப்பப்பட்ட பாதுகாப்பு அறிக்கையிலிருந்து CNN செய்தி நிறுவனம் இதனை வெளிக்கொண்டு வந்துள்ளது.

அந்த குறிப்பிட்ட பெண்மணிக்கு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது முறை செலுத்தப்பட்ட தடுப்பூசியைத் தொடர்ந்து, இரண்டு வாரத்திற்குப் பின் நரம்பியல் தொடர்பான சிக்கல்கள் காட்டத் துவங்கியது எனவும், ஜூன் மாதம் முதல்முறை செலுத்தப்பட்ட தடுப்பூசிக்குப் பின் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 

அப்பெண்மணி செப்டம்பர் 2-ம் தேதி ஜாகிங் சென்ற பொழுது கால் இடறியதாகவும், இதற்கு மறுநாள் நடப்பதற்கு சிரமமாக இருந்ததாகவும், கை பலவீனமாக ஆனதாகவும், கை செயல் இழந்தது போன்ற உணர்வும், உடம்பில் உணர்ச்சி குறைந்து காணப்பட்டதாகவும், தலைவலி ஏற்பட்டதாகவும் அந்த ஆவணம் குறிப்பிடுகின்றது. 

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி செப்டம்பர் 5-ம் தேதி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு Transverse Myelitis என்கிற பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

முன்னர் அஸ்ட்ரா ஜெனேகா (Astra zeneca) நிறுவனம் இந்த பெண்மணியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது குறித்து ஊடகத்தில் வந்த தகவல்களை மறுத்ததாகவும், ஆனால் தற்போது அந்நிறுவனத்தின் ஆவணங்கள் இரண்டு இடங்களில் உறுதி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

அப்பெண்மணிக்கு இதற்கு முன்னர் நரம்பியல் தொடர்பான எந்த நோயும் இருந்ததில்லை எனவும், மேலும் அப்பெண்மணியின் முழுமையான மருத்துவ வரலாறு விவரம் குறித்து போதிய தகவல் இல்லை எனவும், அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒரு வார காலத்திற்குள் விரைவாக குணமடையத் தொடங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கு முன்னர் வெளிவந்த பங்கேற்பாளர் தகவல் அறிக்கையில், ஒரு பங்கேற்பாளருக்கு நரம்பியல் தாக்கம் தொடர்பான அறிகுறிகள் தென்படுவதாகவும், இதனால் நோய் தடுப்பு சோதனை நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிகுறிகள் தடுப்பு மருந்தின் காரணமாகத்தான் வருகிறது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தெரிவித்திருந்தது. 

அமெரிக்காவின் தடுப்பு மருந்து குழுவின் ஆலோசகர் மோன்செஃப் ஸ்லோய் (Moncef Slaoui) தெரிவிக்கையில், அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டு சுகாதார அதிகாரிகளின் மறு உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், ஆனால் இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் சோதனை ஓட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அஸ்ட்ரா ஜெனேகா அல்லது AZD1222 தடுப்பு மருந்தானது 3-ம் கட்ட பரிசோதனை (Phase 3) நிலையில் இருக்கிறது. இந்த தடுப்பு மருந்தானது கொரோனா நோய்க்கிருமிகளின் மரபணுவோடு ஒத்த ஜீனைக் கொண்ட அடினோவைரஸ் எனும் கிருமியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உலக அளவில் 18000 தன்னார்வலர்கள் உள்ளாகப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் விவரங்கள்

  • உலக அளவில் கிட்ட தட்ட 182 தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனைக்கு தயாராகி வருகிறது.
  • இதில் 36 மருந்துகள் மருத்துவ பரிசோதனை கட்டத்தில் உள்ளன.9 தடுப்பு மருந்துகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. 
  • கிட்டத்தட்ட எட்டு தடுப்பு மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் இரண்டு முதற்கட்ட பரிசோதனையைத் தாண்டி இரண்டாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. 
  • இதில் குறிப்பிடத்தக்க முக்கியமான தடுப்பு மருந்துகள் மாடர்னா (Moderna), பைசர் மற்றும் பயோNடெக்(BioNtech) இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்து, ஜான்சன் அண்ட் ஜான்சன்( Johnson & Johnson), சனோஃபி(Sanofi) மற்றும் கிலாக்ஸோ ஸ்மித் கிளைன்( Glaxo Smith Kline) இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்து, ரஷ்யாவின் கமாலியா நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வரும் தடுப்பு மருந்து ஆகியவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *