ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி 2019 அன்று இந்திய குடிமைப் பணி(UPSC) தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து 44 பேர் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள், சமூகத்தில் பின்தங்கிய OBC, SC, ST மாணவர்களை விட குறைவாக வந்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த EWS பொருளாதாரத்தில் பின்தங்கிய, முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குடிமைப் பணி தேர்வுகளில் முதன்முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. 10% EWS இட ஒதுக்கீட்டினை எதிர்த்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், எதற்காக அவசர அவசரமாக குடிமைப் பணி தேர்வுகளில் கடைபிடிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான பின், மதிப்பெண் பட்டியலில் பார்க்கும் போது, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் (OBC), பட்டியல் பிரிவு (SC) மற்றும் பழங்குடியின மக்களுக்கும் (ST) இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 100 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களின் வாயிலாகப் பெற்ற சமூக நீதி இடஒதுக்கீடு கொள்கையினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன..
குடிமைப் பணிகளில் மூன்று நிலைகளில் நடக்கும் தேர்வுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் OBC பிரிவினரைக் காட்டிலும், முன்னேறிய வகுப்பினரான பொருளாதார அடிப்படையிலான EWS பிரிவினருக்கு குறைவான மதிப்பெண்களே கட் ஆஃப் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை தேர்வில் (Preliminary) கட்ஆஃப் மதிபெண்ணாக OBC மாணவர்களுக்கு 95.34 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னேறிய வகுப்பினருக்கான EWS பிரிவிற்கு 90 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தகட்ட முதன்மைத் தேர்வில் (Main Exam), OBC பிரிவினருக்கு 718 மதிப்பெண்களும், SC பிரிவினருக்கு 706 மதிப்பெண்களும் மற்றும் பழங்குடி ST பிரிவினருக்கு 699 மதிப்பெண்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, முன்னேறிய சமூகத்தைச் சார்ந்த EWS பிரிவினருக்கு 696 என்று OBC, SC, ST மாணவர்களை விட குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வில் (Interview), இதர பிற்படுத்த பட்டவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்கு 925 மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் EWS பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 909 மதிப்பெண் பெற்றாலே போதும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட OBC பிரிவினரைக் காட்டிலும், முன்னேறிய வகுப்பினரான EWS பிரிவிற்கு 14 மதிபெண்கள் குறைவாகவே இருக்கிறது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பதவிகளுக்கு இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஏற்கனவே நேர்முகத்தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இது மேலும் பல எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 927 பணியிடங்களுக்கு 829 இடங்களுக்கு மட்டுமே முடிவுகளை அறிவித்துள்ளனர். மீதம் உள்ள 98 பதவிகள் ஏன் அறிவிக்கப்படவில்லை என்றும், அவை யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.