கவிஞர் சுரதா

முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய உவமைக் கவிஞர் சுரதா!

கவிஞர் சுரதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

உவமைக் கவிஞர் சுரதா தஞ்சை மாவட்டம் பழையனூர் என்னும் ஊரில் திருவேங்கடம் – செண்பகம் அம்மையாருக்கு மகனாக 23.11.1921 அன்று பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜகோபாலன் என்பதாகும். 

பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதன் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று மாற்றிக்கொண்டார்.

பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாச்சல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றவர். 

சுரதாவின் ’சொல்லடா’ என்னும் தலைப்பிட்ட கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்ரல் மாத இதழில் வெளியிட்டது. முதலில் இவர் பாரதிதாசன் வழிவந்த கவிஞராக அறியப்பட்டார். தந்தை பெரியார் மற்றும் கலைவாணர் தலைமையில் நடைபெற்ற பாவேந்தரின் ’புரட்சிக் கவி’ நாடகத்தில் நடித்தவர்.

இதழ்களில் சுரதா

புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ’தலைவன்’ இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். 

இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’சாவின் முத்தம்’ என்பதனை 1946 மார்ச் மாதம் வெளியிட்டார். 1956-ல் ’பட்டத்தரசி’ என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954-ல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி உள்ளிட்ட திராவிட இயக்க இதழகளில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

1955-ல் காவியம்’ என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) என கவிதை வளர்ச்சிக்கு பல இதழ்களை வெளியிட்டார். 

தனித்தனி நூல்களாக இருந்த பாரதிதாசனின் கவிதைகளைத் தொகுத்து ஒரே புத்தகமாக வெளிவரச் செய்ததில் சுரதாவின் பணி முக்கியமானதாக இருந்தது.

”கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை” என்று எழுதியவர். 

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966-ல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

எழுதிய நூல்கள்

பாவேந்தரின் காளமேகம், புகழ்மாலை, மங்கையர்க்கரசி, முன்னும் பின்னும், வார்த்தை வாசல், வெட்ட வெளிச்சம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கவிதைகள், பாடல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

திரைப்படத் துறையில்

மங்கையர்க்கரசி திரைப்படத்திற்கு முதன்முதலில் வசனம் எழுதிய போது குறைந்த வயதில் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் என்ற புகழைப் பெற்றார். நாடோடி மன்னன், அமரகவி, தை பிறந்தால் வழி பிறக்கும், தலை கொடுத்தான் தம்பி, நீர்க்குமிழி, மறக்க முடியுமா, நேற்று இன்று நாளை முதலிய படங்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றன.

கவியரங்கங்களில் புதுமை

வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக்கவியரங்கம் என்று கவியரங்க நிகழ்ச்சிகளில் புதுமையையும், புரட்சியையும் புகுத்தியவர்.

இவரது நூல்கள் மதுரை பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், மலேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடநூலாக வைக்கப்பட்டிருக்கின்றன.

விருதுகள்

தமிழக அரசின் கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம், தமிழ் பல்கலைக்கழகத்தின் ராசராசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது எழுத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. 

உவமைக் கவிஞர் சுரதா தனது 84-ம் வயதில் 2006 ஜூன் 20 அன்று இயற்கை எய்தினார்.

எழுதுகிறவர்கள் எழுதாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் யாரைப் பார்த்தாலும் “எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக” என்று ஊக்கப்படுத்தும் உவமைக் கவிஞர் சுரதாவின் பிறந்த நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *