லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை கடந்த வாரம் ஆர்.பி.ஐ (RBI- Reserve Bank of India) தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததின் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்கள் மற்றும் மீட்புக் கொள்கைகள் குறித்த விவகாரங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
லட்சுமி விலாஸ் வங்கி கரூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்களால் 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 93 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்த வங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட கடுமையான நட்டம் காரணமாக நிதி நெருக்கடியில் இயங்கி வந்தது. கடந்த ஆண்டு முதலே மூலதனத்தைப் பெருக்குவதற்காக முதலீட்டாளர்களைத் தேடிக் கொண்டிருந்தது. முதலீட்டாளர்கள் யாரும் வங்கியை மீட்க முன்வராத காரணத்தினால் மத்திய அரசின் அனுமதியோடு மத்திய ரிசர்வ் வங்கி ஒரு மாத காலத்திற்கு லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்தது.
தற்போது வாடிக்கையாளர்கள் 1 மாத காலத்திற்கு வங்கியில் இருந்து ரூபாய் 25,000 வரை மட்டுமே பணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு கல்வி அல்லது மருத்துவம் போன்ற அவசர காரணங்களுக்காக தேவையான ஆதாரங்களைக் காட்டி ஆர்.பி.ஐ-யின் அனுமதியுடன் ரூபாய் 5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லட்சுமி விலாஸ் வங்கி தென்னிந்தியாவை குறிப்பாக தமிழகத்தை மையப்படுத்தி கிராமப்புறங்களில் அதிகமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஒரு முக்கிய வங்கியாகும். கடந்த 2 ஆண்டுகளில் யெஸ் வங்கி(yes bank), பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra co-operative Bank) முதலிய வங்கிகளைத் தொடர்ந்து தற்போது மூன்றாவதாக ஆர்.பி.ஐ-யின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் வங்கி பட்டியலில் லட்சுமி விலாஸ் வங்கியும் இணைந்துள்ளது.
யெஸ் வங்கி வங்கியின் பங்குகளை வாங்க பொதுத்துறை நிறுவனமான எஸ்.பி.ஐ முன்வந்தது. ஆனால் தற்போது வரை பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை மீட்பதற்கான முதலீட்டாளர்கள் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் (BEFI) இணை செயலாளரான சி.பி.கிருஷ்ணன் லட்சுமி விலாஸ் வங்கியின் வீழ்ச்சி மற்றும் அரசு எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் சில முக்கிய விடயங்களை தெரிவித்துள்ளார்.
லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான மூல காரணங்கள்
- கடந்த 3-4 வருடங்களுக்கு முன்னர் லட்சுமி விலாஸ் வங்கியானது பெரு நிறுவனங்களுக்கு (Corporate) வழங்கப்படும் கடன் தொகைகள் குறித்தான தனது கொள்கையை மாற்றியது.
- இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு லட்சுமி விலாஸ் வங்கியின் சில நிர்வாகிகள் முறைகேடான வழியில் 790 கோடி அளவிலான கடன்களை பெரு நிறுவனங்களுக்கு வழங்கினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.
- லட்சுமி விலாஸ் வங்கியின் தற்போதைய வாராக் கடன் தொகை பட்டியலில் 80% பெருநிறுவனங்களே (Corporate) உள்ளன. அதன் மதிப்பானது கிட்டத்தட்ட ரூ.3,500 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2020-ம் ஆண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன்கள் 25.4% ஆக அதிகரித்துள்ளன. லட்சுமி விலாஸ் வங்கியின் 80% வாராக் கடன்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள்ளாக ஏற்பட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
- சர்பாசி சட்டம் (sarfaesi Act),கடனைத் திரும்பப் பெறுவதற்கான சட்டத் தீர்ப்பாயம் (Debt recovery tribunal Act), திவால் சட்டம் (Insolvency and bancktrupsy code) போன்ற வங்கிக் கடன்களை மீட்டெடுப்பதற்கான சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
- பெரும்பாலும் பெருநிறுவனங்கள் புலன்களால் உணரக்கூடிய சொத்துகள் எதையும் பிணையாக வைக்காத காரணத்தினால் சர்பாசி சட்டம் (sarfaesi Act) செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிகிறது. மேலும் திவால் சட்டத்தால் (Insolvency and bancktrupsy code) 44% அளவிற்கான கடன்களுக்கு உரிய சொத்துக்களை மட்டுமே மீட்க முடியும். அதுமட்டுமல்லாமல் மீட்கப்படும் 44 சதவீத சொத்துகளும் உடனடியாக வங்கிகளுக்கு வந்து சேர்வதில்லை.
- BASEL-III விதிமுறைகளின்படி 9% இருக்கவேண்டிய மூலதன விகிதாச்சாரம், கடந்த ஜூன் மாதம் 0.17 சதவீதமாக லட்சுமி விலாஸ் வங்கியில் குறைந்தது. இது மேலும் குறைந்து செப்டம்பர் மாதம் பாதாளத்திற்கு சென்றது. மூலதன விகிதாச்சாரம் குறைந்து வருவதை முன்கூட்டியே அறிந்த ஆர்.பி.ஐ மற்றும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
- கடந்த ஆண்டுகளில் இந்தியா புல்ஸ் (India bulls housing finance) மற்றும் கிளிக்ஸ் (Clix Capital Ltd) நிறுவனத்துடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைப்பதற்கான திட்டத்தை முன்வைத்தபோது ரிசர்வ் வங்கி அதை ரத்து செய்தது. ஆர்.பி.ஐ-யின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதுதான் என கிருஷ்ணன் தெரிவித்தார்.
- மேலும் தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய அவர், இது போன்ற புதிய தனியார் வங்கிகள், லாபத்தை மட்டுமே முன்னிறுத்தி அதிகளவில் நகர்புறங்களிலேயே தங்கள் வங்கி கிளைகளை விரிவுபடுத்த கவனம் செலுத்தும் என்றும், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தங்கள் செயல்பாடுகளை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் (BEFI) சார்பாக அவர் முன்வைத்த பரிந்துரைகள்
- லட்சுமி விலாஸ் வங்கியை கண்டிப்பாக ஒரு பொதுத்துறை வங்கியுடன் தான் இணைக்க வேண்டும்.
- வாராக் கடன்களை வைக்கும் பெரு நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் உட்பட கடன் பெறும் நிறுவனங்கள் என அனைத்தின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை நிறுத்தி அனைத்து தனியார் வங்கிகளிலும் பொதுத்துறை வங்கிகளாக மாற்ற அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- வங்கிகள் இணைப்பிற்குப் பின் கிராமப்புற வங்கிகளில் பணியாற்றிவரும் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் விதமாக அழுத்தம் கொடுத்து விருப்ப ஓய்வு எடுக்குமாறு வற்புறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடன் மற்றும் மீட்புக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்களைச் செய்ய இந்திய அரசு முன்வர வேண்டும். சிறு கடனாளிகளுக்கு செய்யப்படுவது போல கார்ப்பரேட் கடன்களுக்கும் 100% collateral security வழங்கப்பட வேண்டும்.