பயண இலக்கியங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன்னோடியான ஏ.கே.செட்டியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதிய பதிவு – Madras Radicals
“வாணிபத்திற்காக – பொருள் ஈட்ட கடல் கடந்து செல்லும் செட்டியார்கள் சமூகத்தில், புகைப்படக் கலையை கற்றுக் கொள்வதற்காக கடல் கடந்தவர் ஏ.கே. செட்டியார்” என்று ரோஜா முத்தையா அதிசயத்துக் கூறிய அண்ணாமலை கருப்பன் செட்டியாரின் நினைவு நாள் இன்று
ஏ.கே.செட்டியார் என்று அறியப்படுகிற கருப்பன் செட்டியார் காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில் அண்ணாமலை செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார்.
திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்ற அவர், பின்னர் 1935-ல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக் கழகத்தில் புகைப்படத்துறை பயின்றார். சிறப்பு பயிற்சிக்காக 1937-ல் நியூயார்க் சென்று அங்கு Photographical Institute-ல் ஓராண்டு பயின்று டிப்ளமோ பட்டம் பெற்றார்.
காந்தி ஆவணப்படமும் காந்தியவாதி செட்டியாரும்
தமிழின் ஆவணப்பட முன்னோடியான ஏ.கே.செட்டியார் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து காந்தி குறித்த புகைப்படங்கள், காணொளித் தொகுப்புகளை ஒருங்கிணைத்து 1940-ம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் வெளியிட்டார். அவரது தேடலில் முதலாவதாக தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற கோகலேவின் வரவேற்பு நிகழ்வில் காந்தி கோட்டு சூட்டு அணிந்திருக்கும் படம் லண்டனில் கிடைத்தது.
அவரது ஆவணப்படம் 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியானது. தமிழிலும் தெலுங்கிலும் வெளியான இந்த திரைப்படம் பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறையால் திரையரங்குகளில் வெகுநாள் இருக்கவில்லை. மீண்டும் இந்தியா விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு இந்தியில் வெளியிடப்பட்டது. ஏ.கே.செட்டியார் இதனை 1953-ம் ஆண்டு ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏ.கே.செட்டியாரின் பயணம் உலகம் இரண்டாம் உலகப்போரைச் சந்தித்துக் கொண்டிருந்த ஆபத்தான காலம். அந்த காலக்கட்டத்தில் ஏ.கே.செட்டியார் காந்தி குறித்த ஆவணப்படத்திற்காகத் உலகம் முழுவதும் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
”காந்தி ஆவணப்பட சேகரிப்பில் நான் எதிர்கொண்ட இடர்பாடுகளைப் பற்றி விரிவாக பல கட்டுரைகள் எழுதி வந்தேன். ஒரு முறை தற்செயலாக நான் இதைப் படித்தபோது, அவற்றில் என் ஆணவம் மேலோங்கி காந்தி மகான் முக்கியமிழந்து பின்தள்ளப் பட்டிருப்பதாக உணர்ந்தேன். இவை என் சுயபுராணமாக மாறிவிட்டதால் இத்தொடரை நிறுத்தி விடுகிறேன்.’’ என்று குமரி மலரில் வந்த தொடரை நிறுத்தினார். இது அவர் காந்தி மீது கொண்ட மரியாதையைக் காட்டும் முக்கியமான செயலாகும்.
இது மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் அட்டன்பரோ, மகாத்மா காந்தி திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன் இலண்டனில் அப்படத்தின் பிரீமியர் காட்சிக்கு வரும்படி ஏ.கே செட்டியாருக்கு ஒரு அழைப்பு விடுத்த போது, ‘அட்டன்பரோவின் படத்தில் காந்தியின் வேடத்தில் ஒருவர் நடிக்கிறார். காந்தியின் தோற்றத்தில் இருக்கும் ஒருவரை காந்தியாக கண்டுணர என் மனம் ஒப்பவில்லை’ என்று அவர் மறுத்துவிட்டார்.
பயண இலக்கிய நூல்கள்
ஆவணப் படங்களின் முன்னோடி என்றும், தமிழின் பயண இலக்கியத்தின் முன்னோடி என்றும் அழைக்கப்படுபவர். தனது ஜப்பான் பயணம் குறித்து இவர் எழுதிய பயணக் கட்டுரை நூல் 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவே இவரது முதல் நூலாகும். அதன்பின் உலகம் சுற்றும் தமிழன், மலேயா முதல் கனடா வரை, அமெரிக்க நாட்டிலே ஐரோப்பா வழியாக, கரிபியன் கடலும் கயானாவும், குடகு பிரயாண நினைவுகள், இட்டபணி, திரையும் வாழ்வும் ஆகிய பயண நூல்கள் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு பயணக்கட்டுரைகள் என்ற பெயரில் முந்தைய தலைமுறையினரின் கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டதும் இவரது முக்கியப் பணியாகும்.
நிறவெறியை ஆவணப்படுத்திய உலகம் சுற்றிய தமிழன்
உலகம் சுற்றிய தமிழன் நூலில், தன் பயண காலத்தில் உலகெங்கும் இருந்த நிறவெறியையும், அதன் காரணமாக தான் அவமானபடுத்தப் பட்டதையும் ஆவணப்படுத்தியிருப்பார்.
“தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். பெரிய கப்பல், சுமார் இருபதாயிரம் டன். இரண்டாவது வகுப்பில் சுமார் 60 பிரயாணிகள். பெரும்பாலோர் இங்கிலீஷ்காரர்கள். மற்றவர்கள் யூதர்கள். எல்லோரும் நிறத் திமிர் கொண்டவர்கள். இவர்களிடையே பிரயாணம் செய்வது மிகவும் சங்கடமாக இருந்தது. கப்பல் புறப்பட்ட முதலாவது இரவிலிருந்தே நிறத் துவேஷம் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது வகுப்புப் பிரயாணிகள் சாப்பிடுமிடத்தில் சுமார் 200 பேர் உட்காரலாம். ஒரே ஹாலில் இரண்டு பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள். ஒரு பிரிவில் என்னைத் தனியாக உட்கார வைத்தார்கள். மற்றப் பிரயாணிகள் எல்லோரும் மற்றொரு பிரிவில். இந்த அவமானத்தை என்னால் சகிக்கமுடியவில்லை.”
என்று நிறவெறி எவ்வளவு மோசமானதாக இருந்தது என்பதை அந்நூலில் வெளிப்படுத்தியிருப்பார்.
கப்பலில் நடந்த புறக்கணிப்பைப் பதிவு செய்த ஏ.கே.செட்டியார் லண்டனில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்லும் போது, கப்பலில் சந்தித்த தீண்டாமையையும், பின்னர் ரயிலிலும் அதை எதிர்கொள்ளத் தயங்கி விமானத்தில் பயணித்ததை பற்றி குறிப்பிட்டிருப்பார். ரயிலை இயக்கும் அதே நிறுவனமேதான் விமானத்தையும் இயக்கினாலும், விமானத்தை லாபகரமாக இயக்க இந்தியர்களை ஏற்றவேண்டிய கட்டாயம் இருந்ததால் அங்கு தீண்டாமை இல்லாததைக் குறித்தும் பதிவு செய்திருப்பார்.
புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்
தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்தியர்களின் போராட்டங்களில் தமிழர்களின் போராட்ட உணர்வும், தியாகமும் அதிகம். ஆனால் அந்த போராட்டங்களின் பயன்களில் குஜராத்திகள் மற்றும் தமிழர் அல்லாத இந்தியர்களே அதிக முன்னுரிமைகளைப் பெற்றார்கள் என்பதையும் வேதனையோடு பின்வருமாறு பதிவு செய்திருப்பார்.
“இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களிலே கலந்து அதிகமாகத் தியாகம் செய்தது தமிழர்கள்; அதன் பயனை அனுபவிப்பது காந்தி குல்லா அணியும் குஜராத்திகளும், மற்ற இந்தியர்களும்! காந்தியடிகள் ஆரம்பித்த சத்தியாக்கிரகத்திலே கடைசி வரை போராடி, எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான். தமிழர்களின் வாழ்க்கை நிலை உயரவில்லை. வயிறு நிறைய உணவு கிடைக்கிறதென்ற திருப்தியைத் தவிர வேறொன்றுமில்லை. உரிமை என்ற பேச்சே கிடையாது.”
அதுமட்டும் இல்லாமல் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற தமிழ்ப் பெண்களை சந்தித்தையும் தில்லையடி வள்ளியம்மையார், நாகம்மையார் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்றதையும் அதில் குறிப்பிட்டுருப்பார்.
ஜெர்மனியில் சந்தித்த பைதான் சாஸ்திரியைப் பற்றி குறிப்பிடும் போது, பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவிற்கு மத பரப்புரை செய்ய வரும் பாதிரிகள் தங்கள் விருப்பத்துடன் வருவதில்லை என்பதை எழுதியிருக்கிறார். அதேவேளையில் பைதான் சாஸ்திரி தமிழ்நாட்டுப் படங்கள், கூஜா, செம்பு, மணி முதலிய பொருட்களையும், ஏராளமான தமிழ் புத்தகங்களையும், சில தமிழ்ப் பத்திரிகைகளையும் சேகரித்து வைத்திருப்பதையும் குறிப்பிட்டிருப்பார்.
காவிரியும் குடகர்களும்
குடகு புத்தகத்தில் குடகர்களின் பொதுப்பண்புகளை எளிமையான நடையில் பதிவு செய்கிறார். காவிரி நதி பற்றிய தொன்மக்கதைகளை சொல்லும்போது குடகர்களின் வாழ்வியலில் ’துலாக் காவிரி ஸ்நானம்’ எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்பதை குறிப்பிடுகிறார். குடகர்களின் உணவு, உடை உள்ளிட்ட விடயங்களையும் நுட்பமாக கவனித்து எழுதுகிறார். குடகு நாட்டு வீடுகளின் அமைப்பு முறை வரை முழுமையாக பதிவு செய்திருக்கிறார்.
குடகர்கள் வாழ்வில் காவிரி மிக முக்கியமான பாத்திரம் வகிப்பதையும் குறிப்பிடுகிறார். அவர்களின் பாடல்களை மொழிப்பெயர்த்து அவற்றின் வழியாக காவிரியின் புகழை குடகர்கள் வெளிப்படுத்தியிருப்பதைக் காட்டியுள்ளார். ”குடகர்களுக்கு காவிரியின் புகழ் பாடத் திகட்டாது” என்றும், குடகர் பெண்களில் பத்தில் ஒருவருக்குக் காவேரி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதையும், ஆண்களில் கூட சிலருக்கு காவேரியப்பா என்று பெயர் வைப்பதையும் ஆவணப்படுத்தியிருப்பார்.
குமரி மலர் இதழ்
குமரி மலர் என்ற இதழை ஏ.கே.செட்டியார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்தார். இவ்விதழ் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு வந்தது. கடைகள் மூலம் விற்பனை செய்யப்படாத இதழ் குமரிமலர். புதிய சந்தாதாரர்களை சேர்ப்பதும் கிடையாது. யாராவது ஆண்டு சந்தாவை புதுப்பிக்காமல் விட்டால்தான் அவ்விடத்திற்குப் புதிய சந்தாதாரர் வர முடியும். இவ்விதியை அவர் கராராக பின்பற்றி வந்தார்.
கொய்த மலர்
மேலை நாட்டு அறிஞர்கள், சிந்தனையாளர்களின் சிறப்பான மேற்கோள்களின் தொகுப்புகளை ‘கொய்த மலர்கள்’ என்ற பெயரில் நூல்களாக வெளியிட்டுவந்தார். ஒவ்வொரு கொய்த மலரும் சுமார் 300 பக்கங்கள் கொண்டவையாக இருக்கும்.
”தமிழில் இதுவரை வெளியான எல்லா நூல்களையும், பத்திரிகைகளையும், அச்சேறாத கையெழுத்துப் பிரதிகளையும், சுவடிகளையும் தமிழ்மொழி, நாடு சம்பந்தமாக மற்ற மொழிகளில் வெளியாகியிருக்கும் எல்லா நூல்களையும், பத்திரிகைக் குறிப்புகளையும் ஒருங்கே சேர்த்து பாதுகாத்து, பயன்படுத்த வகை செய்யாத வேறெந்த முயற்சியும் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கந் தருவதாகாது.”
என்று தமிழ்நாடு கட்டுரைத் தொகுப்பின் முகவுரையில் கூறிய செட்டியார், பல தமிழ் இலக்கிய வரலாற்று ஆவணப்படுத்தும் பணிகளின் முன்னத்தி ஏராகவும் செயல்பட்டார்.
1983-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் நாள் தன் தமிழ்ப்பணியை முடித்துக் கொண்ட ஏ.கே.செட்டியாரின் நினைவு நாள் இன்று.
முதன்மைப் படம்: ஆஸ்திரியா நாட்டில் நேதாஜியுடன் ஏ.கே.செட்டியார்
உதவிய நூல்கள்:
உலகம் சுற்றிய தமிழன்
குடகு
தமிழ்நாடு