விவசாய அவசர சட்டங்கள்

மாநில சுயாட்சியை அழிக்கும் விவசாய அவசர சட்டங்கள்

கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு விவசாயம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களைப் பிறப்பித்துள்ளது.  

  1. The Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance, 2020, 
  2. The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance, 2020 and 
  3. The Essential Commodities (Amendment) Ordinance, 2020.

இந்த மூன்று சட்டங்கள் விவசாயப் பொருட்களின் வணிகம் மற்றும் வர்த்தகம், விவசாயப் பொருட்களின் விலை உத்தரவாதம், பண்ணை நிர்வாகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் குறித்தான விவகாரம் போன்ற இந்திய வேளாண்மை குறித்தான அனைத்து நடைமுறைகளையும் மாற்றியமைக்கிறது. 1950-க்குப் பிறகு மேலே குறிப்பிட்ட அனைத்து விவகாரங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருந்தது. கடந்த காலங்களில் அவற்றை படிப்படியாக மத்திய அரசு பறித்துவந்தது. பா.ஜ.க அரசு கொண்டுவந்த சட்டங்கள் அவற்றை முழுமையாக பறித்துவிட்டது. மாநில அரசுகளிடம் இருந்து எந்தவிதமான ஒப்புதலும் பெறாமல் ஒருதலைப்பட்சமாக ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. 

உலக வர்த்தகக் கழகத்தின் விவசாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு விவசாயத் துறையை தடையற்ற சர்வதேச வணிகத்திற்கு திறந்துவிடுவதற்கு ஏதுவாக இந்த சட்டத்தை மாற்றியமைத்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாநில வேளாண் அமைச்சகம் உள்ளது. அந்தந்த மாநில அரசுகள்தான் கடந்த 70 ஆண்டுகளாக விவசாயம் குறித்தான பல  ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இந்தியாவில் விவசாயம் என்பது வெறும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்ல. அது ஒரு சமூக, பண்பாட்டை உள்ளடக்கியது. அமெரிக்க ஐரோப்பிய தேசங்களைப் போல், அது வெறும் வணிக நடவடிக்கையல்ல. வடக்கும் தெற்குமாக நீண்டு கிடக்கும் இந்திய துணைக்கண்டத்தில் தட்பவெட்பம், நிலம், நீர், மண், கால்நடைகள் போன்ற அனைத்தும் பன்மைத்தன்மை கொண்டவை. இவ்வனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட பல்வேறு விவசாயிகள்,  இடைத்தரகர்கள், வியாபாரிகளின் சங்கங்கள் உள்ளன. அவ்வனைத்தும் தனது உரிமைகளை நேரடியாகப் பெறுவதற்கு ஏதுவாக மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் இருந்துவந்தன. 

இந்திய உணவு சந்தையில் குவியும் அந்நிய முதலீடு

இந்தியாவில் 58%பேர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 19.48 லட்சம் கோடி. உலகத்தின் உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் சந்தையில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இவையனைத்தும் உள்ளுர்வாசிகளை அடிப்பபடையாக வைத்து இயங்கிவரும் சிறு, குறு வணிக பொருளாதார நடவடிக்கைகள். இதை படிப்படியாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒப்படைக்கும் வகையில்தான் இந்த மாற்றங்களை மோடி  அரசு எடுத்துவருகிறது. 

இந்திய உணவு சந்தையில் ஏப்ரல் 2000-ம் ஆண்டில் இருந்து மார்ச் 2020 வரை 9.98 பில்லியன் அமெரிக்க டாலர் அன்னிய நேரடி முதலீடாக குவிந்துள்ளது. வருகிற காலகட்டங்களில் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளும், அந்நிய நிறுவனங்களும் இந்த சந்தையை பங்கிட்டுக் கொள்வதற்கான போட்டியில் குதித்துள்ளது. இந்த வணிகப் போட்டிக்கு ஏதுவாக ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அவசர சட்டங்கள் பல்வேறு  உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. 

உலகப் போரின் போது பறிக்கப்பட்ட மாகாண உரிமைகள்

காலனிய காலத்தில் மாநில எல்லைக்குள் நிகழும் வர்த்தகம், வணிகம், உற்பத்தி மற்றும் பகிர்ந்தளிப்பு குறித்தான அனைத்து விடையங்களும் இந்திய சட்டம் 1935-ன்படி மாகாண அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் அன்றை ஒன்றிய பாராளுமன்றமானது அவசரநிலையில் இயங்கியது. அந்த காலக்கட்டத்தில் மேற்கண்ட வர்த்தக நடைமுறைகள் குறித்து சட்டங்கள் இயற்றும் மாகாண அரசின் அதிகாரத்தை கையகப்படுத்தியது. உலக போரின் முடிவிற்குப் பிறகு அவசரநிலை நீக்கப்பட்டது. இருந்தபோதிலும் அபகரிக்கப்பட்டட மாகாண அதிகாரங்கள் திரும்ப அளிக்கப்படவில்லை. அத்தோடு The Essential Supplies (Temporary) Powers Act, 1946 என்ற தற்காலிக சட்டத்தையும் இயற்றி ஒன்றிய அரசு தனது பிடியினை இறுக்கிக் கொண்டது. 

சரத்து 369

1947-க்குப் பிறகு இந்த நடைமுறை தொடர்வதற்கு ஏற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாக அரசியலமைப்பு சட்டத்தில் சரத்து 369 உருவாக்கப்பட்டது. அது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் துவங்கி 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டது. 1955 ஜனவரி 26-ம் தேதியுடன் சரத்து 369 மற்றும் The Essential Supplies (Temporary) Powers Act, 1946 இரண்டும் காலாவதியாகிவிட்டது. 

Article 369Temporary power to Parliament to make laws with respect to certain matters in the State List as if they were matters in the Concurrent List Notwithstanding anything in this Constitution, Parliament shall, during a period of five years from the commencement of this constitution, have power to make laws with respect to the following matters as if they were enumerated in the Concurrent List, namely: trade and commerce within a State in, and in production, supply and distribution of, cotton and woollen textiles, raw cotton (including ginned cotton and unginned cotton or kapas), cotton seed, paper (including newsprint), foodstuffs (including edible oilseeds and oil), cattle fodder (including oil cakes and other concentrates), coal (including coke and derivatives of coal), iron, steel and mica;“

விவசாய சந்தையின் மீதான மாநில உரிமையை கேள்விக்குறியாக்கும் அரசியலமைப்பின் பகுதி 33

அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது விவசாயம் மற்றும் அதன் துணை நிறுவனங்களான வேளாண் ஆய்வு மற்றும் வேளாண் கல்வி, பூச்சிக்கொல்லி, தாவர நோய்களில் இருந்து தடுப்பது போன்ற அனைத்தும் மாநிலப் பட்டியல் பகுதி 14-ல் சேர்க்கப்பட்டுள்ளது. அத்தோடு மாநிலத்திற்குள்ளான வணிகம், வர்த்தகம், உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தை ஆகியவை மாநிலப் பட்டியலில் பகுதி 26, 27, 28-ல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் பொதுப்பட்டியலின் பகுதி 33-ன் விதிக்கு உட்பட்டது என்று ஒரு முட்டுக்கட்டையும் வைத்துள்ளது.

14. Agriculture, including agricultural education and research; protection against pests and prevention of plant diseases. 26. Trade and commerce within the State subject to the provisions of entry 33 of List III. 27. Production, supply and distribution of goods subject to the provisions of entry 33 of List III.28. Markets and fairs.

உணவுப் பொருட்கள் கள்ள சந்தையில் பதுக்கப்படும் சூழலை தடுப்பதற்காகவும், தேவையின் போது சில முறைப்படுத்தலை கையாள்வதற்கு என்ற போர்வையில் மாநில அரசுகளுக்கு இருந்த தனித்துவமான உரிமையை மட்டுப்படுத்தும் வகையில் 1955-ம் ஆண்டு ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்தியது. பொதுப் பட்டியல் பகுதி 33-ல் நான்கு துணை உள்ளீடுகளை ஒன்றிய அரசு சேர்த்தது. அவை உணவுப் பொருட்களின் உற்பத்தி, வணிகம், விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பது ஆகியவற்றை சேர்த்ததன் மூலம் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு இரண்டும் சட்டமியற்றலாம் என மாற்றியதன் மூலமாக ஒன்றிய அரசு அவற்றின் மீதான அதிகாரத்தினை எடுத்துக்கொண்டது. அத்தோடு அத்தியவசியப் பொருட்கள் சட்டத்தையும் ஒன்றிய அரசு இயற்றிது.  

33. Trade and commerce in, and the productionsupply and distribution of,-(a) the products of any industry where the control of such industry by the Union is declared by Parliament by law to be expedient in the public interest, and imported goods of the same kind as such products(b) foodstuffs, including edible oilseeds and oils(c) cattle fodder, including oilcakes and other concentrates(d) raw cotton, whether ginned or not ginned, and cotton seed; and(e) raw jute.      34. Price control. 

  பொதுப் பட்டியலின் பகுதி 33 மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைக்கிறது. தனித்துவமாக மாநில பட்டியலில் இருக்க வேண்டிய ஒன்றை பொதுப் பட்டியலுக்கு வைப்பது மாநில உரிமைக்கு முட்டுக்கட்டை போடும் யுக்தி. 

சர்காரியா ஆணையத்தில் அன்றே முறையிட்ட தமிழ்நாடு அரசு

சர்காரியா ஆணையம் இதுகுறித்து சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்றிய அரசு பொதுப் பட்டியல் பகுதி 33-ஐப் பயன்படுத்தி the Essential Commodities Act 1955 என்றழைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை இயற்றியுள்ளது. அதேபோல் பொருட்களின் விலைநிர்ணயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் பொதுப் பட்டியலில் பிரிவு 34-ல் சேர்க்கப்பட்டது. 

பொதுப்பட்டியலில் இருக்கும் பகுதி 33 & 34 இரண்டையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று அன்றைய தமிழ்நாடு அரசு சர்காரியா ஆணையத்திற்கு ஒரு memorandum அனுப்பியது. அத்தோடு அன்றைய மேற்கு வங்க ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசு இன்னும் ஒரு படி முன்னுக்கு சென்று, ”விவசாயம் குறித்து ஒன்றிய பட்டியலில் இருக்கும் அனைத்தும் நீக்கப்படவேண்டும். விவசாயம் உணவு பொருள் குறித்து முழு அதிகாரம் மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்” என்று சர்காரிய ஆணையத்திடம் memorandum கொடுத்தது.

கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் பாஜக-வின் அவசர சட்டங்கள்

இதேபோன்று கடந்த காலங்களில், விவசாயம் குறித்து மாநில அரசுகள் தொடர்ந்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து வந்த நிலையில். பாஜக அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டங்கள் மாநில உரிமைகளை அடியோடு பறித்துவிட்டது. இந்திரா காந்தி அரசு அவசரநிலை காலக்கட்டத்தில் பல்வேறு அவசர சட்டங்களினூடாக மாநில அதிகாரத்தை பறித்தது. கூட்டாட்சி தத்துவத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கல்வி மற்றும் வனவியல் உரிமைகளை பொதுப்பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. கொரானா தொற்றால் நாடு முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில், பல்வேறு அவசர சட்டங்களை மோடி அரசு பிறப்பித்து மாநில உரிமைகளை எடுத்துக் கொள்கிறது.

மாநில அரசுகள் எந்தவிதமான சுயமான முடிவுகளையும் எடுக்காமல், ஒன்றிய அரசின் ஆணையின்படிதான் செயல்பட்டாக வேண்டும் என்ற போக்கினைத்தான் விவசாயப் பொருட்களின் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை நிர்வாக சட்டம் 2020 வலியுறுத்துகிறது.

“The Central Government may, from time to time, give such instructions, as it may consider necessary, to the State Governments for effective implementation of the provisions of this Act and the State Governments shall comply with such instructions.”

அத்தோடு மாநில நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றிய அரசின் ஏற்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தையும் திணித்துள்ளது. இந்தபோக்கு நேரடியாகவே கூட்டாட்சி அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது.

 “The Central Government may, for carrying out the provisions of this Ordinance, give such instructions, directions, orders or issue guidelines as it may deem necessary to any authority or officer subordinate to the Central Government, any State Government or any authority or officer subordinate to a State Government”.

கேள்விக்குறியாகும் மாநில நிதி ஆதாரம்

கடந்த காலங்களில் மாநில அரசுகளுக்குக் கிடைத்த குறைந்தபட்ச நிதி ஆதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. Agricultural produce market committee வாயிலாக மண்டி முறையின் மூலம் கடந்தகாலங்களில் வசூலிக்கப்பட்ட சந்தைக் கட்டணம், செஸ் போன்ற எதுவும் இனிமேல் மாநில அரசுகளால் வசூலிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கட்டணம் குறித்து எந்த புதிய சட்டமும் வரையறுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்ட விற்பனை வரியையும் இப்போது GST தடுத்துவிட்டது. எனவே மாநில அரசுகளின் நிதி ஆதாரம் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டது.

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, பதுக்கல், கருப்பு சந்தைபடுத்தல், கட்டுக்கடங்காத விலை ஏற்றம் போன்ற பல சிக்கல்களை ஒன்றிய அரசு சமாளிக்க முக்கிய பொறுப்பளிக்கப்பட்டது. பொதுவாக இவை நடைமுறைப் படுத்தப்படுவது கிடையாது. ஆனால் இந்த விதிகளைப் பயன்படுத்தி மாநிலத்திற்கு உள்ளே நடக்கும் விவசாயப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனை முறையை ஒன்றிய அரசு அடியோடு கட்டுப்படுத்துகிறது. 

பகுதி 33-ல் உள்ள துணை உள்ளீடுகளின் நோக்கம் மற்றும் அது உருவான பின்னணியை புறக்கணித்துவிட்டு ஒன்றிய அரசு இச்சட்டங்களை இயற்றியுள்ளது. 

எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு சொல்வது என்ன?

ஒன்றிய அரசுக்கு எதிராக போடப்பட்ட புகழ் பெற்ற எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கூட்டாட்சி தத்துவத்தில் மாநில அரசுகளுக்கான உரிமையை பின்வருமாறு உறுதி செய்துள்ளது.

S. R. Bommai v. Union of India (1994

“The fact that under the scheme of our Constitution, great power is conferred upon the Centre vis-à-vis the States does not mean that States are mere appendages of the Centre. With the sphere allotted to them, States are supreme. The Centre cannot tamper with their powers. More particularly, the courts should not adopt an approach, an interpretation, which has the effect of or tends to have the effect of whittling down the powers reserved to the States.” 

பாஜக அரசின் விவசாயம் குறித்தான அவசர சட்டங்களில் முதல் இரண்டு சட்டங்கள் மாநில உரிமையை நேரடியாகவே ஆக்கிரமிக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இந்தியாவில் ஒன்றிய அரசின் இதுபோன்ற செயல்கள் பெரும் முரண்பாடுகளை உருவாக்கும். இங்கு அரசியலமைப்புச் சட்டங்கள் மதிப்பிழப்பதற்கு அப்பாற்ப்பட்டு விவசாயிகளின் நலன்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும். பிராந்திய சிக்கல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வணிக நோக்கத்தை மையமாக வைத்து உலக வர்த்தகக் கழகத்தின் தலையீட்டிற்கு இணங்க செய்யப்படும் இதுபோன்ற மாற்றங்கள் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தினை கேள்விக்குள்ளாக்குவதாய் இருக்கிறது. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *