அசோக் சந்த்வானே

வெறுப்பு அரசியலில் லாபம் பார்ப்பதா? – ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பொறியாளர்

ஃபேஸ்புக் நிறுவனம் வெறுப்புப் பேச்சுகளுக்கான தளமாக செயல்படுவதாகவும், அதிலிருந்து லாபம் சம்பாதிப்பதாகவும் கூறி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அசோக் சந்த்வானே (Ashok Chandwaney) என்பவர் அந்நிறுவனத்தின் பணியினை ராஜினாமா செய்திருக்கிறார். 

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஃபேஸ்புக் நிறுவனம் பாகுபாட்டுடன் இயங்குவதாக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அசோக் சந்த்வானே வெளியேறியிருக்கிறார். இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் ஒருபக்க சார்புடன், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக, அக்கட்சி தலைவர்களின் இசுலாமிய விரோத வெறுப்புப் பேச்சுகளை நீக்காமல் அனுமதித்து வருவதாக வாஷிங்க்டன் ஜார்னல் (WSJ) வெளியிட்ட கட்டுரை பல்வேறு விவாதங்களுக்கும் உள்ளானது. மேலும் மியான்மரில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையில் ஃபேஸ்புக் தளமும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாக ஐ.நா நிபுணர்கள் ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தனர். 

இதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பி கடிதங்கள் எழுதியிருந்தனர். வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்துவதில் பாகுபாடு கூடாது என்பதை வலியுறுத்தி ஃபேஸ்புக் நிறுவனப் பணியாளர்களும் இருந்தும்  மார்க் சூகர்பெர்க்குக்கு கடிதம் அனுப்பினர்.

இதையும் படிக்க: பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்

அமெரிக்காவிலும், உலக அளவிலும் வெறுப்பிலிருந்து லாபம் பார்க்கும் (Profiting of Hate) ஒரு நிறுவனத்திற்கு என்னால் இனி பங்களிப்பு செய்ய முடியாது, அதனால் விலகுகிறேன் என்று ஒரு ராஜினாமா கடிதத்தினை ஃபேஸ்புக் நிறுவன பொறியாளர் அசோக் சந்த்வானே எழுதியிருக்கிறார்.

ஃபேஸ்புக் தளத்தினில் அதிகரித்து வரும் இனவெறி (Racism), தவறான தகவல்கள், வன்முறைகளை தூண்டும் பதிவுகள் ஆகியவற்றை முறியடிப்பதற்கு நிறுவனம் குறைவான முயற்சிகளையே எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மியான்மர் ரோகிங்கியா இசுலாமியர்கள் மீதான படுகொலையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு கருவியாக செயல்பட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அமெரிக்காவின் கெனோஷா (Kenosha violence) பகுதியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் துப்பாக்கிகளை கொண்டுவருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பதிவுகளை செய்த அமைப்பின் பக்கம் நீக்கப்படாததையும் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த ஃபேஸ்புக் பக்கம் குறித்து 455 முறை புகார்கள் வந்திருந்த போதும், அந்த புகார்கள் தவிர்க்கப்பட்டன என்று BuzzFeed News ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) ஊடகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மே மாதத்தின் போது நடைபெற்ற BalckLivesMatter போராட்டங்களில் காவல்துறையினால் துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை ஆதரித்து, ”கொள்ளையடிப்பது துவங்கும்போது, துப்பாக்கிச் சூடு தொடங்குகிறது (When the looting starts the shooting starts)” என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டதை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்க மறுத்ததை குறித்தும் தெரிவித்திருக்கிறார்.

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகளாக சொல்லப்படும் அனைத்தும் வெறும் விளம்பர நடவடிக்கைகளாகவே இருப்பதாகவும், மேலும் அரசியல்வாதிகள் தங்கள் ஃபேஸ்புக் பிரச்சார விளம்பரங்களில் தெரிவிக்கும் பொய்களை சோதிக்காமல் அப்படியே வெளியிடுவதாகவும் அசோக் குற்றம் சாட்டியுள்ளார். 

என்னைப் போன்ற பல பணியாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பிறகும், வெளியிலிருந்து வந்த அழுத்தங்களுக்குப் பிறகும், வரலாற்றில் தவறான பக்கத்தினை ஃபேஸ்புக் தேர்ந்தெடுக்கிறது. வன்முறை குழுக்களும், வலதுசாரி ஆயுத குழுக்களும் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களை தீவிரவாதிகளாக்கி பல்வேறு குற்றங்களை செய்வதற்கு ஃபேஸ்புக்கினை பயன்படுத்துகின்றன. வெறுப்புப் பேச்சுகளை நீக்குவதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வர்த்தக லாபம் இல்லை என்று நிறுவனம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாஷிங்க்டன் போஸ்ட் நிறுவனம் இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் கேள்வியெழுப்பிய போது, வெறுப்பு பேச்சுகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க கொள்கைகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும், நாங்கள் வெறுப்பு பேச்சுகள் லாபம் அடைவதில்லை என்றும், சமூக பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் பல நூறு கோடி டாலர்களை முதலீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனம் பாகுபாட்டுடன் இயங்குவதாக ஒவ்வொரு நாளும் பல்வேறு தரப்புகளிலிருந்து அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *