சார்லி சாப்ளின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
தன் வலிகளையும், சோகங்களையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு ஒட்டுமொத்த உலகையும் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் ஏப்ரல் 16, 1889 அன்று இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹென்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார்.
வறுமை சூழ்ந்த இளமைக் காலம்
இசை நிகழ்வில் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட பெற்றோர்கள் பிரிந்துவிட, தாயினால் வளர்க்கப்பட்ட சாப்ளினும் அவரது சகோதரரும் வறுமையின் காரணமாக வொர்க் அவுஸ் எனப்படும் அரசின் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்தனர். அவரது இளம் வயது வறுமை சூழ்ந்ததாக இருந்தது.
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் சார்லி சாப்ளின்.
சாப்ளின் முதலும் கடைசியுமாக கலையைக் கற்றது அவரது தாயிடம் தான். சிறு வயதில் பல நாட்கள் உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது அம்மா அருகில் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டுவார். அதில் இருந்துதான் சாப்ளின் நடிக்க கற்றுக் கொண்டார்.
சாப்ளினின் முதல் மேடை
சார்லி சாப்ளினுக்கு ஆறு வயது இருக்கும் போது, அவரது தாய் ஹென்னா ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்சினை; பாட முடியவில்லை! ஒரே கூச்சல். சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான். தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடல் ஒன்றைப் பாடி கூட்டத்தினரை அமைதிப்படுத்தினான். தன் இளம் கால், கைகளை அசைத்து நடனமாடியபோது கூட்டத்தில் விசில் பறந்தது. சில்லறைகளைப் பொறுக்கினான் சார்லி. பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம். சில்லரையைப் பொறுக்கிவிட்டு பாடுகிறேன் என்னால் ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்ய முடியாது என்றார். அரங்கம் அப்பொழுதும் சிரித்தது.
அடுத்த மேடைகள்
சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்தபொழுது, சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரது அம்மா மூலம் கிடைத்தது. 1903-ம் ஆண்டில் “ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்’ நாடகத்தில் நடித்தார்.
ஷெர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லியாக நடித்தார். அதன்பின் கசீஸ் கோர்ட் சர்க்கஸ் குழு நிகழ்ச்சிகளில் கோமாளியாக நடித்துக் கொண்டிருந்தார். அதுதான் அவரது முதல் நிரந்தர வேலை எனலாம்.

காதல் பிரிவு
சார்லி சாப்ளின் தன் வாழ்வில் குறைந்த அளவில் மகிழ்வோடு இருந்தது ஹெட்டியுடனான காதலில் தான். ஹெட்டியை சார்லியின் வறுமையைக் காட்டி அவளது குடும்பத்தினர் பிரித்துவிட்டு அதையும் வலியாக மாற்றினர். அந்த பிரிவை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, தீவிர வாசிப்பை மேற்கொண்டார்.
சார்லி சாப்ளினின் உடை அடையாளம் வந்த விதம்
ஃபிரெட் கார்னோ நாடகக் குழுவுடன் அக்டோபர் 2, 1912 அன்று அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த சார்லி சாப்ளின் அக்குழுவில் இணைந்து தன் வாழ்க்கையை ஓட்டினார். ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர். அவர் சைசுக்கு உடைகள் இல்லை என்பதால், பெரிய சைஸ் தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி என்று உருவானது தான் இன்று சார்லி சாப்ளினின் அடையாளமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் அடையாளம்.
சாப்ளினின் முதல் திரைப்படத்திற்கு எழுந்த சவால்
தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டார். அதன் பின் சார்லி சாப்ளினுக்கு திரை வாழ்வில் ஏறுமுகம் தான். ஒட்டுமொத்த உலகமும் அவரது நகைச்சுவைக்கு அடிமையானது.
ஒரு நாள் சாப்ளின் என்னிடம் கதை ஒன்று இருக்கிறது. அதை நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்று தயாரிப்பாளர் சென்னடிடம் கூறினார். முதலில் சம்மதிக்க மறுத்த தயாரிப்பாளர் ஒரு நிபந்தனையுடன் சம்மதித்தார். “அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக சாப்ளின் திருப்பித் தரவேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. அதை முழுமையாக ஏற்று கொண்ட சார்லி சாப்ளின் அந்தப் படம் தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்” என்றார். அவர் இயக்குனரான முதல் படம் Caught in the rain இப்படித்தான் உருவாகி மாபெரும் வெற்றிபெற்றது.

பேசும் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த சாப்ளின்
சாப்ளின் 1919-ம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிஃபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டூடியோவைத் துவங்கினார்.
1927-ம் ஆண்டில் பேசும் திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானது. ஆனாலும் 1930-ம் ஆண்டு வரை சார்லி சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சார்லி சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராக திகழ்ந்தார்.

1952-ம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ம் ஆண்டுத் திரைப்படம் “தி சர்க்கஸ்” படத்தின் இசையமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல்.
ஹிட்லரை எதிர்த்து வெளியிட்ட திரைப்படம்
சாப்ளினின் முதல் பேசும் படம் 1940-ம் ஆண்டில் வெளியான ’தி கிரேட் டிக்டேட்டர்’, அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம்.
இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் கலந்து கொள்வதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சார்லி சாப்ளின் ஹிட்லராகவும் மற்றும் நாஜி படையால் கொடுமையாகக் கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒருவராகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

இவரது கடைசி திரைப்படங்கள் “தி கிங் இன் நியூயார்க்” (1957), “தி சாப்ளின் ரெவ்யூ” (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த “அகௌண்டஸ் ஃப்ரம் ஹாங்காங்” ஆகியவை.
கம்யூனிஸ்ட் என்று அமெரிக்க உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்ட சார்லி சாப்ளின்
சாப்ளினின் திரை வழியாக பேசிய அரசியல் சிந்தனைகள் இடதுசாரிகளின் கருத்துகள்தான். “மாடர்ன் டைம்ஸ்” உள்ளிட்ட திரைப்படங்களில் அது வெளிப்படையாகவே தெரியவந்தது. இந்த படம் தொழிலாளிகள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலையைப் பற்றியது. அமெரிக்க அரசு இவரை கம்யூனிஸ்ட் என்றே சந்தேகப்பட்டு உளவுத்துறை மூலம் கண்காணித்தது. தனது வாழ்வின் வெற்றிகள் அனைத்தையும் அமெரிக்காவில் பெற்றிருந்தாலும் பிரிட்டிஷ் குடியுரிமையினையே நீட்டித்தார்.

ஆஸ்கர் விருதுகள்
1952-ம் ஆண்டில் சார்லி சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பின் அவர் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்யப்பட்டது. அதனால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது. இவர் 1972-ம் ஆண்டில், தனக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஆஸ்கர் விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார்.

சார்லி சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கர் விருதினைப் பெற்றார். மே 16, 1922-ல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் ’தி சர்க்கஸ்’ திரைப்படத்துக்காக சிறப்பு விருது பெற்றார். 1922-ம் ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதையும் பெற்றார்.
சர் பட்டம்
1975-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் அரசி சாப்ளினுக்கு “சர்” பட்டம் அளித்தார். இவருக்கு இந்த பெருமையை வழங்கக்கோரி 1956-ம் ஆண்டே பரிந்துரைத்திருந்தாலும், இதனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எதிர்த்தது. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், அவரைச் சிறப்பிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே உறவு பாதிக்கப்படும் என்றும் கருதினார்கள்.
சாப்ளின் 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். சார்லி சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.
திரை உலகின் மாபெரும் சாதனையாளனான சாப்ளினுக்கு இங்கிலாந்து அரசு அஞ்சல் தலை ஒன்று வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1992-ம் ஆண்டு இவரது வாழ்க்கை “சாப்ளின்” என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.
2005-ம் ஆண்டு நடைபெற்ற “நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்” கருத்துக்கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஒட்டுமொத்த உலகையும் புன்னகைக்க வைத்த சாப்ளினின் பிறந்த நாள் இன்று.