காவிமயமாகும் வரலாறு

காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்

பல்கலைக்கழக மானியக் குழு தலைமையில் வரலாறு படிக்கும் இளங்கலை பட்டதாரிகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டது. அதில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக மத இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மதச்சார்பற்றதாகக் கருதப்படும் தலைப்புகளை திட்டமிட்டு தவிர்த்துவிட்டது. 

இந்தியாவில் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டுமானம் முதல் பாடத்திட்டம் வரை அனைத்து நடைமுறைகளும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC)-வின் பரிந்துரைக்கு உட்பட்டவை. 

இந்துத்துவ சித்தாந்தத்தை புகுத்தும் வரைவு

இவ்வளவு முக்கியமான பொறுப்பில் இருக்கும் மானியக் குழு  இளங்கலை பட்டதாரிகளுக்கான வரலாறு பாடத்திட்டத்திற்கான வரைவினைக் கொண்டு வந்துள்ளது. அந்த வரைவு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்துத்துவா சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றை மாற்றும் வகையிலும், அடுத்த தலைமுறை மாணவர்களின்  மனதை வகுப்புவாதத்தை நோக்கி நகர்த்தும் வகையிலும் அந்த வரைவு இருப்பதாக பரவலாக கல்வியாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 • பண்டைய இந்தியா குறித்தான பாடத்திட்டத்தில் வேத புராணங்கள், இதிகாசங்கள், உபநிஷதம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 
 • இடைக்கால வரலாறு’ எனும் அத்தியாயத்தில் முகலாயர் ஆட்சிக் காலத்தைப் பற்றி குறிப்பிடும்போது, பாபர் போன்ற மன்னர்களை படையெடுப்பாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. 
 • ‘நவீன இந்தியா’ பாடத்திட்டத்தில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு குறித்தான ஆளுமைகளுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய வரலாறு பாடத்திட்டத்தின் சில முக்கிய மாற்றங்கள் 

பண்டைய இந்தியா

 • டெல்லி பல்கலைக்கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம் இந்தியாவின் ஆரம்பகால வரலாற்றை உள்ளடக்கியது. ஆனால் இப்போது உள்ள புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம் “பாரதத்தின் ஐடியா” என்ற தலைப்புடனும், “பாரதத்தின் நித்தியம்” என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதனுடன் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக இலக்கியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
 • “ஆரம்ப காலத்திலிருந்து கி.மு 550 வரை” என்ற மூன்றாவது தாளில், “சிந்து-சரஸ்வதி நாகரிகம்” மற்றும் அதன் தொடர்ச்சி, எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை உள்ளன. சரஸ்வதி – ஒரு புராண நதி – வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் தொல்லியல் ஆதாரம் கிடைக்கவில்லை. அது இன்று ஒரு சர்ச்சைக்குரிய விடையமாக உள்ளது. ஆரிய படையெடுப்பு கோட்பாட்டிற்கு முரணாக, ஹரப்பன் சகாப்தத்திலிருந்து பிற்கால இந்து காலங்கள் வரை சரஸ்வதி நதி இருந்ததாக சங்க பரிவார் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இதை இந்த பாடத்திட்டம் ஆதரிக்கும் போக்கில் உள்ளது.
 • இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்” என்ற 12-வது தாளில் “ராமாயணம் மற்றும் மகாபாரதம்” போன்ற தனி தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய பாடத்திட்டத்தின் கீழ் இந்த இரண்டு காவியங்களும் உள்ளன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் இந்த இரண்டு புராணங்களும் எந்தவித விமர்சனத்திற்கும், ஒப்பீட்டிற்கும் அப்பாற்பட்டு ஒரு தனி தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. 
 • கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், காளிதாசரின் கவிதைகள், ஆயுர்வேத உரை, சரக் சம்ஹிதா போன்றவை மதச்சார்பற்றதாகக் கருதப்பட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.

இடைக்கால இந்தியா

 • தற்போதுள்ள  பாடத்திட்டத்தில் 13-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன.  அந்த காலகட்டம் குறித்து மூன்று செமஸ்டர்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம் ஆட்சியின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் இந்த காலகட்டத்தை உள்ளடக்கி ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
 • புதிய பாடத்திட்டம் பாபர் போன்ற பல முஸ்லீம் ஆட்சியாளர்கள் குறித்து “படையெடுப்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. தற்போதைய பாடத்திட்டத்தில் இதுபோன்ற வார்த்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ‘படையெடுப்பு’ என்ற சொல் முஸ்லிம் ஆட்சியாளர்களைக் குறிக்க மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கிந்திய கம்பெனி மற்றும் இங்கிலாந்து ஆட்சி குறித்து இதுபேன்ற சொற்கள் பயன்படுத்தப்படவில்லை. 
 • ஏழாவது தாளில், 

இந்து சமூகம்: சாதி மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள்”

முஸ்லிம் சமூகம்: பிரிவுகள் மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள்”

என்ற தலைப்பின் கீழ் இடைக்கால இந்திய மக்களை இந்து சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்று இரண்டாக பிரித்துக் காட்டும் வகையில் சர்ச்சைக்குரிய முறையில் தரப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய “இந்திய சமூகம்” என்ற பெயரில் ஒரே பிரிவின் பெயரே பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு மக்களையும், வரலாற்றையும் மதமாகப் பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நவீன இந்தியா

 • 1857 முதல் 1950 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய தற்போதைய வரலாறு பாடத்திட்டத்தில் தலித் அரசியல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை புதிய பாடத்திட்டத்தில் இல்லை. ‘நவீன இந்தியா’ என்பதன் கீழ் உள்ள அத்தியாயங்களில் தலித் அரசியல் குறித்து முழுமையாகவே தவிர்க்கப்பட்டுள்ளது.
 • 1857-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான எழுச்சியை “முதல் சுதந்திரப் போர்” என்று வரைவு பாடத்திட்டம் விவரிக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தவாதி சாவர்க்கரால் உருவாக்கப்பட்ட சொல். 1857-க்கு முன்னர் நடந்த வங்காளத்தில் சன்யாசி கிளர்ச்சி, ஒடிசாவில் பைக்கா கிளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டில் பலிகர் கிளர்ச்சி போன்றவற்றை பற்றிய எந்த குறிப்பும் இல்லை.
 • 1905 வங்கப் பிரிவினை மற்றும் அதற்கு எதிரான குறிப்புகள் புதிய பாடத்திட்டத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.
 • மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பீமாராவ் அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு தற்போதுள்ள பாடத்திட்டங்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.
 • மிக முக்கியமான வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ்.சர்மாவின் பண்டைய கால இந்தியா குறித்த ஆய்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் இடைக்கால இந்தியா குறித்த இர்பான் ஹபீப்பின் புத்தகமும் தவிர்க்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்துத்துவா சார்புடைய  எழுத்தாளர்களின் புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள அறிவுத் துறை

மானியக் குழு பொதுவாக பாடத்திட்டம் புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல் மட்டுமே வெளியிடும். ஆனால் முதன்முறையாக வரலாற்று பாடத்திட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறது. மானியக் குழுவின் இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவா சக்திகளுக்கு சரணடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்திய அறிவுத்துறை பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஏற்கனவே பள்ளிகளில் நீக்கப்பட்ட ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் 

2020-21 கல்வியாண்டில் கொரோனா தொற்றுநோய் காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களின் படிப்பு சுமையை குறைப்பதற்காக சி.பி.எஸ்.சி அமைப்பு 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 190 பாடங்களில் 30 சதவீதம் குறைத்தது.  அதில் 

 • 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய அத்தியாயங்கள் “முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன”.
 • திட்டக் குழு, வணிக நெறிமுறைகள் மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள், பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பகுதிகள் வணிக ஆய்வு பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
 • இந்திய ஜனநாயகம், சமூக அமைப்பு மற்றும் சமூக செயல்முறைகள் பற்றிய அத்தியாயங்கள் சமூகவியலில் பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
 • ஆரம்ப கால சமூகங்கள், நாடோடி கலாச்சாரங்கள் மற்றும் கலாச்சாரங்களின் மோதல் பற்றிய முழு அத்தியாயங்களும் உலக வரலாறு பாடத்தில் இருந்து நீக்கப்பட்டன.
 • விவசாயிகள், ஜமீன்தார்கள் மற்றும் அரசு பற்றிய பகுதிகள் இந்திய வரலாற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
 • பாலினம், சாதி மற்றும் சமூக இயக்கங்கள் தொடர்பான பிரச்சினைகளும் அகற்றப்பட்டுள்ளன.

கூட்டாட்சியை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்

மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான முக்கியத்துவத்தை வழங்கும் ஜனநாயக முறை, நீதித்துறைக்கான  அதிகாரங்கள், மாநில நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகள் இவ்வனைத்தும் இந்திய கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துகிறது. கூட்டாட்சி குறித்த பாடத்திட்டத்தில் இருந்து பாஜக அரசு நீக்கியுள்ளது. இதுபோன்ற ஜனநாயக வழிமுறையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது இயல்புதான். ஏனென்றால் அதன் அடிப்படை சித்தாந்தம் ஜனநாயத்திற்கு எதிரான ஒற்றை தலைமை. 

முசோலினியின் இத்தாலி மற்றும் ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து உத்வேகம் பெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1930-களில் ஒரு உச்ச தலைவரின் முழுமையான கட்டுப்பாட்டில் ஒரு தலைவர், ஒரே நாடு, ஒரே மாநிலம் என்ற பிரச்சாரம் செய்தது. இதன் எதிரொலிதான் இன்றைய மாணவர்கள் மத்தியில் ஜனநாயகம் குறித்தான அறிவு வலுப்பெற்று விடக்கூடாது என்று தடுக்கிறது. இந்துத்துவா மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களை உருவாக்கும் திட்டம்தான் இது. போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரிய ஒற்றை தலைமைக்கு கீழ்படிந்து நடக்கும் போக்கை வளர்த்தெடுப்பதற்காக கல்வி கற்கும் குழந்தைகள் மற்றும்  இளைஞர்களுக்கு ஒரு மாறுபட்ட புதிய சித்தாந்ததை கற்பிக்க முயற்சிக்கிறது.

காவிமயமாகிறதா பாடங்கள்?

பாடத்திட்டங்கள் காவியமாக்கப்படுவது ஒரு இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைகிறது. அதேவேளையில், நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்த பல்வேறு மத மரபுகள் மற்றும் மதச்சார்பற்ற மரபுகளை புறக்கணிப்பது தவறானது. மேலும்  பரிணாமம், சுற்றுச்சூழல், சூழலியல், குடியுரிமை, தேசியவாதம், கூட்டாட்சி, பாலினம் மற்றும் சாதி பிரச்சினைகள், கணித பகுத்தறிவு மற்றும் மக்கள் இயக்கங்கள் போன்றவற்றிற்கு பின்னால் இருக்கும் தர்க்கத்தை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 

சில தலைப்புகள் முக்கியமற்றவை என அடையாளம் காணப்பட்டால், அவற்றை பாடத்திட்டத்திற்குள் மீண்டும் நிலைநிறுத்துவது மிகவும் கடினம். ஏனெனில் ஆசிரியர்கள் / தேர்வாளர்கள் / பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும்  தேர்வு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முக்கியமானவை என்று கருதக்கூடியவற்றின் மேல் மட்டுமே கவனம் செலுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாறு பேராசிரியர் கும்கம் ராய் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி முதல் முனைவர்பட்ட ஆய்வுவரை அனைத்து பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவா சக்திகள் தனக்காக வரலாற்றை புகுத்துவதற்காக பல்வேறு மாற்றங்களை ஊக்குவிக்கிறது. இந்துத்துவ-வலதுசாரி  சிந்தனையின் ஊற்றும், பாஜகவின் தாய் அமைப்புமான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் தனது வைதீக கருத்தை விதைப்பதற்கு கல்வித் துறையை ஒரு முக்கியக் கருவியாக பயன்படுத்துகிறது. 

– சத்தியராஜ் குப்புசாமி, Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *