வாக்குப் பதிவு இயந்திரங்கள் சர்ச்சை

தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 06.04.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நிறைவடைந்தது. ஆனால் வாக்குப்பதிவு முடிந்ததிலிருந்து வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றபோதே இந்த சர்ச்சைகள் துவங்கிவிட்டது. 

வேளச்சேரியில் வாக்கு இயந்திரங்களை ஸ்கூட்டியில் எடுத்துச் சென்ற சம்பவம்

தேர்தல் முடிந்த அன்று மாலை வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் எடுத்து சென்ற நபரை பொதுமக்களும், எதிர்கட்சியினரும் தடுத்து நிறுத்தி விசாரித்தார்கள். இது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் சார்பில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் என முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது.

EVM இயந்திரம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதை மக்கள் மடக்கிப் பிடித்த காணொளி

அதன்பின்  நடந்த தீவிர விசாரணையில், அந்த இயந்திரம் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் செயல்பாட்டில் இருந்ததும், அதில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. அதனால் வேளச்சேரி தொகுதியில் அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

போடி தொகுதியில் வாக்கு விபரங்களில் குளறுபடி

துணை முதல்வர் ஓ.பி.எஸ் போட்டியிட்ட போடி சட்டமன்றத் தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு விபரங்களில் குளறுபடி உள்ளதாக, திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் சில தினங்களுக்கு முன் தேனி  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உண்ணியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தங்க தமிழ்செல்வன்

கடந்த 14-ம் தேதி நள்ளிரவு 1.30 அல்லது 2 மணியளவில் சுமார் 13 நிமிடங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான டிவி மானிட்டர் இயங்கவில்லை. மேலும் அவ்வப்போது மின்சாரம் சுற்றுவட்டப் பாதையில் தடைபடுகிறது.

எனவே யூபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் உதவியுடன் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். போடி தொகுதி 57 ஏ வாக்குச்சாவடி மையத்தில் 17 சி படிவத்தில் 583 வாக்குகள் பதிவானதாகவும், கலெக்டரின் அறிக்கையில் 602 வாக்குகள் எனவும் உள்ளது. முத்தையன்செட்டிபட்டி கள்ளர் பள்ளி 197வது வாக்குச்சாவடியில் 17 சி படிவத்தில் 578 வாக்குகள் பதிவானதாகவும், கலெக்டர் 538 வாக்குகள் பதிவானதாகவும் உள்ளது. சீலையம்பட்டி  280ம் எண் வாக்குச்சாவடியில் 783 வாக்குகள் பதிவானதாக 17 சி படிவத்தில் உள்ளது. ஆனால் கலெக்டர் இங்கு 873 வாக்குகள் பதிவானதாக கூறியிருக்கிறார். இந்த வாக்குப்பதிவு வித்தியாசத்தை சரிசெய்ய வேண்டும்.  இல்லை என்றால் இந்த வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவு  நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பண்ருட்டி தொகுதியில் லேப்டாப்புடன் உள்ளே சென்றுள்ள கணினி நிபுணர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டார். பண்ருட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஆளுங்கட்சிக்கு ஆதரவான உயரதிகாரிகள் முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வேல்முருகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது

பத்திரிகையாளார்களிடம் பேசும் போது, “பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக பண்ருட்டி வளாகத்தில் கணினி நிபுணர்கள் 3 பேருக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தோம்.

இணைய வழி கல்விக்காக மடிக்கணினியுடன் 3 பேருக்கு அனுமதி அளித்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் எங்கும் இணைய வழி வகுப்புகள் நடத்தப்படவில்லை. இதற்கு அனுமதி அளித்தது யார் என தெரிவிக்க வேண்டும்.

தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஆதரவான காவல்துறை உயரதிகாரிகளும் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

ராமநாதபுரம் மையத்தில் லேப்டாப்புடன் 31 பேர்

இதே போல  வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகங்களில் மர்ம நபர்கள் உலவுவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொன்முடி மற்றும் அமைப்புச் செயளாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்

பொன்முடி, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு

அப்போது பொன்முடி பேசியதாவது: ”தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்களின் நடமாட்டம் இருக்கிறது. ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் 31 பேர் லேப்டாப் உடன் சென்றுள்ளனர் என்றால் அதனுடைய பொருள் என்ன? 13-ம் தேதியே இந்த சம்பவத்தைக் கண்டித்து புகார் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காததால் 14, 15 தேதிகள் என தொடர்ந்து அது நடைபெற்று வருகிறது. அதனால்தான் மீண்டும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்” என்றார்.

திருக்கோவிலூர் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்

மேலும் பொன்முடி பேசும்போது, “இன்று (16.04.2021) காலை நான் போட்டியிடுகிற திருக்கோவிலூர் தொகுதியில் வாக்கு எண்ணவிருக்கிற கல்லூரிக்குள் 147 மாணவர்கள் பிராக்டிகல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள். இந்த செய்தி வந்ததும் நான் கலெக்டரிடம் பேசிய பிறகு, எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டேன் என்று சொல்கிறார். அனுமதித்தது எப்படி? தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. இங்கே தேர்தல் ஆணையரிடம் புகார் சொன்னால், ‘நான் கேட்கிறேன், கேட்கிறேன்’ என சொல்கிறார்கள். அவர்களுக்கே தெரியுமா, தெரியாதா எனத் தெரியவில்லை” என்றார்.

கடந்த பத்து நாட்களாக தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்த இந்த செயல்பாடுகளும், செய்திகளும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *