மூன்றாம் ராஜராஜனின் அத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள அத்தி கிராமம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜெயம்கொண்ட சோழ நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அங்கு அடர்ந்து வளர்ந்திருந்த அத்தி மரக் காட்டினை விவசாய நிலமாக மூன்றாம் ராஜராஜன் மாற்றினார்.
இந்த ஊரில் உள்ள அத்தீஸ்வரர் கோவிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. அந்த கல்வெட்டுகளின் படி 1242-ம் ஆண்டு மூன்றாம் ராஜராஜ சோழ மன்னன் இந்த கோயிலைக் கட்டியுள்ளார். அப்போது இந்த கோயிலில் தினமும் நெய் நந்தா விளக்கு எரியவேண்டும் என்பதற்காக, 31 பசுக்கள், ஒரு பொலி காளை ஆகியவற்றை வழங்கியிருக்கிறார்.
மூன்றம் ராஜராஜ சோழன் கட்டிய இந்தக் கோயிலின் பெருமையை அறிந்த நடுநாட்டு மன்னன் கோப்பெரும்சிங்கன், இந்த ஆலயத்துக்கு நிறைய நிலங்களை தானமாக தந்திருக்கிறார்.
இத்தகைய சிறப்பு மிக்க அந்த பகுதியில் அமைந்துள்ள, மலையின் உச்சியில் பழமையான முருகன் கோயிலும் உள்ளது. இன்னும் எந்த காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பாடாத காலத்தைச் சேர்ந்த அக்கோயில் பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளது. இந்த நிலையில் அந்த மலையை புறம்போக்கு நிலம் என்று காட்டி, கல்குவாரிக்கு ஏலம் விட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் கொதிப்படைந்த அக்கிராம மக்கள், தங்கள் முன்னோர்கள் வழிப்பட்ட முருகன் கோயில் அமைந்துள்ள அந்த மலையில் கல்குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது. என்றும், தொல்லியல் ஆய்வு நடத்தி அதன் வரலாற்றை கண்டறிய வேண்டும் என்றும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

செஞ்சி நெகனூர்பட்டி சமணப் படுக்கைகள்
அதேபோல், செஞ்சி அருகே நெகனூர்பட்டி, தொண்டூர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணப்படுக்கைகள் மற்றும் பாறை ஓவியங்கள் உள்ளன. இந்த நிலையில் நெகனூர்பட்டியில் உள்ள சமண படுக்கைப் பாறைகள் மற்றும் பாறை ஓவியங்களை சிலர் வெடி வைத்து தகர்த்து கல் எடுத்துள்ளனர். அந்த பகுதியின் சமுக ஆர்வர்கள் இதனை தொல்லியல் துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மேலும் சேதப்படுத்தாமல் தடுத்துள்ளனர்.



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதிகள் பல பெரிய மற்றும் சிறிய குன்றுகளையும், மலைகளையும் கொண்டது. இவற்றில் சமண படுகைகள், முன்னோர்களைப் புதைத்த ஈமகாடுகள் போன்றவை தற்போதும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
ஈமகாடுகள் என்பது இறந்து போனவர்களைப் புதைக்கும் போது, அவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண்குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் போன்றவற்றை புதைத்து வைத்து, புதைத்த இடத்தினைச் சுற்றி வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாகப் புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பதும் வழக்கமாகும்.
கீழ்நமண்டி ஈமக்காடு
கடந்த வாரத்தில் கீழ்நமண்டி கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குன்றுகளால் சூழப்பட்ட இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த ஈமக்காடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஈமக்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்பட்டன. அதனால் இந்த பகுதிகளில் உள்ள மலை மற்றும் குன்றுகளில் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தமிழக அரசைக் கோருகின்றனர்.