கைத்தறி நெசவாளர்கள்

கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாக இருப்பது நெசவுத் தொழிலாகும். கைத்தறி, விசைத்தறி, பட்டு நெசவு வழியாக சேலை, துண்டு, பட்டு சேலை, பட்டு வேட்டி, லுங்கி, போர்வைகள் என பல வகையான துணிகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

கைத்தறிகள்

தமிழ்நாடு முழுவதும் 4.27 லட்சம் கைத்தறிகள் இயங்குகின்றன. இதில் 2.83 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 1345 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் வழியாக 450 கோடி ரூபாய்க்கு ஆண்டு முழுவதும்  உற்பத்தி செய்கிறார்கள்.

விசைத்தறிகள்

அதே போல 3 லட்சத்து 24 ஆயிரம்  விசைதறி கூடங்கள்  இயங்குகின்றன. குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி சந்தைக்குத் தேவையான சேலைகள், வேட்டிகள், துண்டுகளை இம்மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் நெய்து கொடுக்கின்றனர். பலர் சிறு முதலீட்டில் வீட்டிலேயே இரண்டு விசைத்தறி இயந்திரங்களை நிறுவி சுயதொழிலாக செய்து வருகின்றனர். இன்னும் பலர் விசைத்தறிக்கூடங்களில் தினசரிக் கூலி அடிப்படையிலும் வேலை செய்து வருகின்றனர். 

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குப் பிறகு, இந்த தொழிலில் பெரிய அளவில் பாதிப்பு  ஏற்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அதனை முழுதாக முடக்கிவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு வேலை (job work) அடிப்படையில் சேலை, துண்டு, வேட்டிகளை நெய்து கொடுக்கும் சிறு விசைத்தறியாளர்களையும் விட்டுவைக்கவில்லை.

கோவை மாவட்ட நெசவாளர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய நெகமம், சிறுமுகை மற்றும் அன்னூர் பகுதிகளிலும், ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையத்திலும் கைத்தறி நெசவு அப்பகுதி மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், சிறுமுகையில் மட்டுமே சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேங்கி இருக்கிறது. 

காஞ்சிபுரம் பட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 32 ஆயிரம் தறிகள் உள்ளன. இதில் 72 ஆயிரம் நெசவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 5 பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 6 ஆயிரம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது 90 கோடி ரூபாய் அளவிற்கு காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நெசவாளர்களிடம் தேக்கமடைந்துள்ளன.

சேலம் மாவட்ட நெசவாளர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் பஞ்சுகாளிப்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஊ.மாரமங்கலம், நமச்சிவாயனூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பட்டு நெசவுத் தொழிலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக 2 மாதமாக நெசவுத் தொழில் முடங்கியது. அரசின் தளர்வுகளைத் தொடர்ந்து, தற்போது பட்டு நெசவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விற்பனைக்கு வழி இல்லாததால், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக, பட்டு நெசவாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.

தேக்கமடைந்துள்ள பட்டு சேலைகளை கூட்டுறவு சங்கம், காதி கிராஃப்ட், கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். சமூக இடைவெளியுடன் கூடிய விழாக்கள் மற்றும் திருமணங்களை அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கு  பட்டு நெசவிற்கான மூலப்பொருட்களான ஜரிகை   குஜராத் மாநிலத்தின் சூரத்தில் இருந்தும், பட்டு பெங்களூரில் இருந்தும் வருகிறது. அந்த மூலபொருட்கள் இவர்களுக்கு எளிதாகக் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டுமென்றும் இந்த தொழிலில் உள்ளவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். 

சின்னாளபட்டி சுங்குடி சேலைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி சுங்குடி சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊராகும். சின்னாளபட்டியில் நம்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம், அஞ்சுகம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம், கமலாநேரு, அண்ணா, காந்திஜி, ம.பொ.சிலம்புசெல்வர் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், சித்தயன்கோட்டை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. சின்னாளபட்டியில் 5,000-க்கும் மேற்பட்ட  கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இதில் சுமார்  2000 நெசவாளர்கள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். மீதமுள்ள நெசவாளர்கள் தனியாரிடம் பட்டுநூல் வாங்கி நெசவு நெய்து வருகிறார்கள்.

கோடை காலத்தில்தான் சுங்குடி சேலைகளை அதிகளவில் பயன்படுத்துவர். தற்போது கொரோனா ஊரடங்கால் யாரும் வெளியே வராததால் சுங்குடி சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. 

கோவை, திருப்பூர், ஈரோடு, பழநி, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து கோரா பட்டு நூல்களை வாங்கி வந்து, சேலைகளை உற்பத்தி செய்து அனுப்பி வைக்கிறார்க்ள். தற்போது சென்னை, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் துணி கடைகளில் வியாபாரம் இல்லாததால் அவர்கள் கொள்முதல் செய்யவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோரா பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன.

இதற்கு முன் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தி செய்யும் கோரா பட்டு சேலைகளை மதுரை கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்து, வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு எற்றுமதி செய்வார்கள். கொரோனா ஊரடங்கால் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்யவில்லை. இதனால், வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்கள் ஊதியம் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

பவானி போர்வைகள்

பவானி, ஜம்பை, குருப்பநாயக்கன் பாளையம், பெரியமோளப்பாளையம் உள்பட பவானியைச் சுற்றி 2,000-க்கும் மேற்பட்ட கைத்தறிகளில் போர்வைகள் தயாரிக்கின்றனர். ஆண்களை விட பெண்கள் அதிகளவு போர்வைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளது.

கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவு செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு மட்டும் மாதம் 2000  ரூபாய் நிதி வழங்கியது அரசு. ஆனால் அதைவிட 3 மடங்கு அதிகமான நெசாவாளர்களுக்கு இந்த குறைந்தபட்ச நிவாரணமும் கிடைக்கவில்லை. தேங்கி உள்ள துணிகளை அரசு கொள்முதல் செய்து நெசவாளர்களை  மீட்டால் மட்டுமே அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *