தனக்கு லட்சங்கள் தேவையில்லை, லட்சியமே போதும் என்று சொல்லி தான் குரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புவதாக அறிவித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியிலிருந்து அதன் அரசியல் பிரிவு ஆசிரியராக இருந்த செந்தில் வேல் அவர்கள் வெளியேறியுள்ளார்.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே தமிழ்நாட்டின் முக்கிய ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாஜக-வைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அவதூறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். மோடி அரசின் கொள்கைகளை கேள்வியெழுப்பும் ஊடகவியலாளர்களின் பணிகளை முடக்க செய்தி நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
இதில் முதல்கட்டமாக நியூஸ்18 தொலைக்காட்சியின் பொறுப்பிலிருந்து முகமது ஆசிஃப் வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். பின்னர் நியூஸ் 18 தலைமை ஆசிரியராக இருந்த குணசேகரன் அவர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதனால் அவர் தனது பணியினை ராஜினாமா செய்தார்.
இதையும் படிக்க: பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.
தற்போது ஊடகத்திற்குள் தனது குரலை சுதந்திரமாக எழுப்ப முடியவில்லை எனக் கூறி தற்போது செந்தில் வேல் அவர்களும் விலகியுள்ளார். மேலும் இதற்கு மேல், தான் சுதந்திரமாக கேள்விகளை எழுப்ப வேண்டுமென்றால், வேறு ஊடகங்களில் பணியில் சேர்வதைவிட மக்களுக்கான ஊடகத்தை தானே முன்னெடுப்பதே முக்கியம் என்று அறிவித்து “Tamil Kelvi” என்ற பெயரில் Youtube Channel ஒன்றினை துவக்கியுள்ளார்.
தான் ஏன் விலகினேன் என்பது குறித்தும், தான் புதிதாக ஆரம்பித்துள்ள Youtube சேனல் குறித்தும் செந்தில் வேல் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி இந்த செய்தித் தொகுப்பின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
செந்தில் வேல் அவர்களின் விளக்கத்தின் சுருக்கம் பின்வருமாறு
திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டேன். மரம் வெட்டியுள்ளேன், பழ வியாபாரம் செய்துள்ளேன்.
ஒருமுறை 3 மாதங்கள் உழைத்து 2 மாத சம்பளத்தை பாட்டிக்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு இங்கு வந்தது வரை என் வாழ்க்கை முழுக்க கஷ்டம், துன்பம், கவலை மட்டுமேதான். கடுமையாகப் போராடி என் படிப்பை தொடர்ந்தேன், ஊடகத்திலும் இணைந்தேன்.
ரூ.8000 சம்பளத்தில் ஆரம்பித்து இன்று பல லட்சங்கள் வரை சம்பாதிக்கிறேன். சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது பொங்கல் பண்டிகை அன்று பிரபலங்களை வைத்து நிகழ்ச்சி நடத்திய சேனல்களுக்கு மத்தியில் திருநங்கைகளை வைத்து நான் நிகழ்ச்சி நடத்தினேன். ஏனென்றால் ஆரம்பம் முதலே நான் குரலற்றவர்களின் குரலாக இருப்பதில் பேரார்வம் கொண்டவன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் கடந்து வந்த பாதை.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்களோடு கைகோர்த்து குரல் கொடுத்தேன். கதிராமங்கலத்திற்கு எதிரான சாமானியர்களின் போராட்டத்தில் பங்குபெற்றேன். சென்னை பெருவெள்ளம் வந்தபோது முழுக்க நான் ஊடகத்திலேயே இருந்துதான், மக்களுக்கான குரல்களை நாட்டிற்கு ஒலித்துவந்தேன். அன்றைய தினம் என் மனைவி, பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பதுகூட தெரியாது. ஆலப்பாக்கம் பகுதியில் இருந்த எனது மொத்த வீடும் மழைநீரால் நிரம்பியிருந்தது பின்னர்தான் தெரியவந்தது.
பல ஊடக நண்பர்களோடு இணைந்து, ஒக்கி புயலில் மரணித்த மக்களுக்காக. கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய நிகழ்வின்போது சுமார் 2,500 பேர் திரண்ட மக்களில் ஒருவனாக நானும் இருந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இரவு பகலாக போதிய தூக்கமின்றி மக்களின் போராட்ட குணத்தை அரசாங்கத்திற்கு உணர்த்த பெரும்பாடுபட்டேன். இன்னும் ஏராளம் ஏராளம்..
இதையெல்லாம் நான் இங்கு பெருமைக்காக பதிவு செய்யவில்லை. இதை இங்கே நான் சொல்லக்காரணம், மக்களுக்காக குரல் கொடுத்த என் மீது என்ன தவறு? அதற்காக ஏன் என்னை எதிர்க்கிறீர்கள்?
நான் உள்ளிட்ட எந்த நெறியாளரும் எந்த விவாத மேடைகளிலும் கொச்சையான இழிவான வார்த்தைகளை உபயோகித்ததில்லை. எங்கள் கருத்திற்கு பதிலளியுங்கள் அல்லது எதிர்கருத்து கூறுங்கள். ஆனால் குரல்வளையை நெறிப்பது எந்த விதத்தில் நியாயம்?
நான் போடும் பந்தை துணிவிருந்தால் சிக்ஸ், ஃபோர் என அடியுங்கள், வரவேற்கிறேன். ஆனால் பந்தை அடிக்காமல், பவுலரை தாக்குவது இம்மி அளவு கூட நியாயமில்லை. கேட்ட கேள்விக்கு பதில் இல்லாதவர்கள்தான் குரல்வளையை நெரிக்கும் வேலையை பார்ப்பார்கள்.
தற்போது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு பழவியாபாரி சமீபகாலமாக உள்ள பிரச்சினைகளை அறிந்து என்னைக் கண்டு “எங்களுக்ககாக குரல் தரும் உனக்காக நான் நிப்பேன் சார், நீ எதற்கும் பயப்படாத” என சென்னை தமிழில் எனக்கு ஆறுதல் தருகிறார். நெல்லையில் இருந்து என் கிராம மக்கள் “எலேய் மக்கா! உனக்காக நாங்க இருக்கோம்ல” என ஊக்கப்படுத்துகிறார்கள். இந்த மக்களுக்கு நான் எப்படி துரோகம் செய்வேன்?
இப்போதும் நான் நினைத்தால் என் பணியில் தொடர்ந்து லட்சங்களை சம்பாதிப்பேன், கார் வாங்குவேன், இஷ்டப்பட்டதை உண்பேன். ஆனால் எதுவுமே எனக்கு ஒட்டாது. உண்டாலும் செரிக்காது. ஏற்கனவே கூறியபடி குரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன்.
என் பணியைத் தொடரலாம் என News18 நிறுவனம் கண்ணியமாக மரியாதையுடனே எனக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மக்களுக்கான குரல் அங்கு இல்லாத காரணத்தால் நான் அங்கு பணியாற்ற விரும்பவில்லை. எனவே அதிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.
கட்சி சார்ந்த ஊடகத்திலும் பணியாற்ற விரும்பவில்லை. ஏனெனில், அனைத்து தரப்பினரின் தவறை அங்கு சுட்டிக்காட்ட முடியாது. கலைஞர் டிவி, ஜெயா டிவி போன்ற ஊடகத்திடம் இருந்து ஆரம்பத்திலேயே அழைப்பு வந்தும் அதை நிராகரித்துவிட்டேன்.
எனது பணி போவதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் இழப்பதற்கும் ஒன்றும் இல்லை. ஊடகமே என்னை ஒதுக்கினாலும்கூட ATM வாசலில் வாட்ச்மேன் வேலைபார்த்துக்கூட மீதமுள்ள நேரத்தில் மக்களுக்கான ஆதரவு குரல் தருபவனாக என்னால் இருக்க முடியும்.
இருப்பினும் இப்போதைய சூழ்நிலையில் யாருக்கும் பணிந்துபோகாமல் உண்மையை உரக்கச்சொல்ல ஒரு வழி இருக்கிறது என்றால் அது ‘யூடியூப் சேனல்’ மட்டும்தான். அதில் எனது பணியை தொடரலாம் என முடிவெடுத்துள்ளேன். இதற்கு மக்களான உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்.
இதில் என்னை யாராலும் மிரட்டவோ, அடிபணியவோ செய்ய முடியாது. அதற்கு அச்சப்படும் ஆளும் நானல்ல. என்மீது அக்கறை கொண்டு என்னை விசாரித்த அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.