தி.சு.அவினாசிலிங்கம் என்று அறியப்படும் திருப்பூர் சுப்பிரமணிய அவினாசிலிங்கம் அவர்கள் 1903-ம் ஆண்டு மே 5-ம் தேதி அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் முக்கிய நகரமான திருப்பூரில் பெரும் வணிகரான சுப்பிரமணியம்-பழனியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
முதலில் திருப்பூரிலும், அதனைத் தொடர்ந்து கோவையிலிருந்த லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்ற அவினாசிலிங்கம் தனது கல்லூரிப் படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து 1923-ல் பட்டம் பெற்றார், அதன் தொடர்ச்சியாக சென்னை சட்டக் கல்லூரியில் 1925-ல் சட்டத்திலும் பட்டம் பெற்றார்.,
தனது இளமைக்காலம் முதல் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், தேசிய இயக்கத்திலும் விடுதலைப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள காங்கிரசில் இணைந்தார். இவரது ஈடுபாடு மற்றும் பணிகள் காரணமாக கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றார். போராட்டக் காலத்தில் 1930, 1932,1941 மற்றும் 1942 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை சிறை சென்றார். அன்று காங்கிரசில் இருந்த சில சமூக சீர்திருத்தவாதிகளைப் போல இவரும் சாதிக்கொடுமை எதிர்ப்பு, தாழ்த்தபட்டோர் முன்னேற்றம், பெண்கல்வி, விதவை மறுமணம் உள்ளிட்ட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புபவராகவும் இருந்தார்.
அதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்வுக்காக என்று 1934-ம் ஆண்டு ஹரிஜன நலவாழ்வு நிதிக்காக நன்கொடை திரட்ட தமிழகம் வந்த காந்தியடிகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார்.
1946-ம் ஆண்டு சென்னை சட்ட மேலவைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரதிற்கு முந்தைய பிரகாசத்தின் அமைச்சரவையிலும், பின்னர் பிரகாசத்தின் பதவி விலகல் காரணமாக முதலவரான ஒமந்துர் பி.ராமசாமி ரெட்டியாரின் அமைச்சரவைலும் கல்வி அமைச்சராக பணியாற்றினார்.
இவர் கல்வி அமைச்சராக இருந்த பொழுதுதான் முதன்முதாலாக தமிழை பயிற்சி மொழியாகக் கொண்டுவந்தார். தாய்மொழிக் கல்வியில் இவரது பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சிக் கழகம் இவரால் துவங்கப்பட்டது. அதன் முதல் பணியாக தமிழுக்குத் தமிழில் முதன்முறையாக ஓர் பத்து அதிகாரங்கள் கொண்ட களஞ்சியம் (encyclopedia) வெளியிடப்பட்டது. அதே பள்ளிப் பாடத்தில் திருக்குறளை சேர்த்ததும் இவர்தான்.
இத்தனை தமிழ்ப் பணி செய்திருந்தாலும் இவரது பதவிக் காலத்தில்தான் கல்வியில் இரண்டாவது இந்தித் திணிப்பு நடைபெற்றது. இதனை எதிர்த்து தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. 1952 முதல் 1957 வரை நாடாளுமன்ற மக்களவைக்கும், 1958 முதல் 1964 வரை மாநிலங்களைவைக்கும் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியப் பொருளாதாரக் கொள்கையிலும் சுதேசி பொருளாதாரத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். சிறந்த விவசாயக் கொள்கை மட்டுமே வெற்றிகரமான தொழில்மயமாக்கலுக்கு நாட்டை அழைத்துச் செல்லும் என்று நம்பினார்.
கல்விப்பணி
1930-ல் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா வித்யாலயா எனும் பள்ளியைத் தொடங்கினார். பின்னர் அதனை விரிவுபடுத்தும் விதமாக பெரியநாயக்கன்பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்துக்கு அந்த பள்ளியை மாற்றினார். பெண்கல்வி மீது பெரும் அக்கறை கொண்ட அவினாசிலிங்கம் கோவையில் பெண்கள் மட்டும் படிப்பதற்கு ஒரு மனையியல் கல்லூரியையும் தொடங்கினார். இன்று அது அவினாசிலிங்கம் பல்கலைகழகமாக விரிவடைந்திருக்கிறது. 1975-ம் ஆண்டு சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
கல்வி நிலையங்களிலும் சாதிப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்த காலக்கட்டத்தில், தனது பள்ளியில் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து, கல்வி அனைத்து நிலை மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்றார்.
பெரும் செல்வந்தராக இருந்தபோதும் திருமணம் செய்துகொள்ளாமல் இறுதிவரை தாய்நாட்டுக்காகவும், தான் கொண்ட அரசியல் கொள்கைக்காகவும் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கை, குடும்பம், வெற்றிகரமான தொழில் அனைத்தையும் தியாகம் செய்து ஒரு துறவி போல வாழ்ந்தவர். 1970-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது, ஜி.டி. பிர்லா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. நவம்பர் 21, 1991-ம் ஆண்டு தமது 88ஆம் அகவையில் இயற்கை எய்தினார்