கொரோனா ஊரடங்கினால் வெளிமாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு அறிவித்திருக்கும் சார்மிக் சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சாதாரண நாட்களில் படுக்கை வகுப்பிற்கு வசூலிக்கப்படுவதை விட சார்மிக் சிறப்பு ரயில்களில் ரூ.50 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதிவிரைவு கட்டணத்திற்காக ரூ.30 மற்றும் பயணிகளின் உணவு மற்றும் குடிநீருக்கான கட்டணத்திற்காக ரூ.20 என கூடுதலாக ரூ.50 வசூலிக்கப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் வருமானத்திற்கு வழியில்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமானிய மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் போக்கு, சாமானிய மக்கள் மீதான அதன் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் பசித்த வயிறோடும், வறண்ட நாவோடும் தங்களின் பச்சிளம் குழந்தைகளோடு பல நூறு கிலோமீட்டர்கள் நடக்க நேர்ந்த அவலத்தைப் பார்த்த பின்னும் (கூடுதல்) கட்டணம் வசூலிக்கும் கல்நெஞ்சம் கொண்ட அரசாக மோடி அரசு இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஜனவரியிலிருந்து மார்ச் மாத இறுதிவரை ஏர் இந்திய விமானங்களை அனுப்பி சீனா, ஜப்பான், இத்தாலி நாடுகளில் சிக்கிக் கொண்ட 1,000 இந்தியர்களிடம் இந்திய அரசு எவ்வித பயணக் கட்டணங்களையும் வசூலிக்கவில்லை. அவர்கள் மீட்டு வரப்பட்டதற்கான பயணக் கட்டணம் ரூ. 5 கோடியே 98 லட்சத்தை இந்திய அரசு செலுத்த ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கான ரசீது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஏர் இந்தியா ஒப்படைத்திருக்கிறது.
வெளிநாட்டில் வாழநேர்ந்த இந்தியர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஊரடங்கைத் தீர்மானிக்கிற அரசுக்கு சாமானிய மக்களை தன் செலவில் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு இன்னும் கூடுதலாக இருக்கிறது. விமானத்தில் பயணம் செய்து சொந்த ஊர் திரும்ப ஆளானவர்களின் கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடிந்த அரசு, ரயிலில் பயணம் செய்து சொந்த ஊர் திரும்ப நேர்ந்தவர்களின் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிரதமரின் கொரோனா நிவாரண நிதியாக ரயில்வே துறை கொடுத்த ரூ.151 கோடியும் பெற்றுக்கொண்டு, ஊரடங்கில் பாதிக்கப்பட்டிருக்கும் சாமானிய மக்களிடம் (கூடுதல்) ரயில் கட்டணத்தையும் வசூலிக்கும் கந்துவட்டி நிறுவனமாக அரசு மாறிப் போயிருக்கிறது. சார்மிக் சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு பயணிக்க நேர்ந்த ஏழை தொழிலாளர்களின் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமின்றி அவர்களிடம் உணவு மற்றும் குடிநீருக்கான கட்டணத்தையும் பெற்றிருப்பது என்பது மிகக் கொடுமையானது.
அரசின் குறைந்தபட்ச நிவாரணத் தொகை கூட பெற்றிருக்காத, சார்மிக் சிறப்பு ரயிலில் பயணிக்கும் தென்னிந்தியாவிலுள்ள புலம்பெயர் தொழிலாளி ஒருவர், வட இந்தியாவிலுள்ள தன் சொந்த ஊருக்குப் பயணிக்க ரூ.500-க்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. வருமானத்திற்கு வாய்ப்பில்லாத 4 பேர் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்று அவர்களின் சொந்த ஊருக்குத் திரும்ப ரூ.2000 செலுத்த நேர்ந்திருப்பது கொடுமை. அக்குடும்பத்திற்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரண நிதியாக அவர்கள் செலுத்திய பயணக் கட்டணமாவது அரசிடமிருந்து கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
பிற மாநிலங்களுக்கு பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை இப்படியென்றால், கர்நாடக மாநிலத்திற்குள்ளாகவே மற்றொரு மாவட்டத்திற்கு பயணித்த மக்களுக்கு நேர்ந்திருப்பது அதனினும் கொடுமை. பாஜக ஆளுகின்ற கர்நாடகத்தில் சொந்த மாநிலத்திற்க்குள்ளாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு அரசு ஏற்பாடு செய்த பேருந்துகளில் இடம்பெயர்ந்த மக்களிடம், பேருந்து அவர்களின் சொந்தப் பகுதியில் விட்டுவிட்டு திரும்பி வருவதற்கான இரட்டை வழித்தட கட்டணமாக ரூ.1000க்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு ஓற்றை வழித்தடத்திற்கு மட்டும் கட்டணம் பெறப்பட்டுள்ளது.
கொரோனா காலத்திலும் கூட ‘விமான இந்தியர்களுக்கு’ ஒரு விதமாகவும், ‘ரயில் மற்றும் பேருந்து இந்தியர்களுக்கு” வேறு விதமாகவும் இரட்டை வேடப் போக்குடன் இந்திய அரசு எப்படி செயல்பட முடியும்? கொரோனா பெருந்தொற்று காலத்திலும் சாமானிய மக்களிடம் மட்டுமே வசூலித்துதான் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க வேண்டுமா? பணக்காரர்களிடமிருந்து அதிக வரியைப் பெற்று அதை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுப்பது எனும் சமநிலைக் கொள்கை கொரோனா காலத்தில் எங்கே போனது?