பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை அவர்களின் நினைவு நாளையொட்டி அவருடைய வாழ்க்கைத் தொகுப்பு
கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் கா.சுப்ரமணியன் தமிழின் மிக முக்கியமான அறிஞர் ஆவார். தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் மற்றும் சட்டப் புலமை பெற்ற இவர், திருநெல்வேலியில் சைவ குடும்பத்தில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியமாவிற்கு மகனாக 1888-ம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி பிறந்தார்.
தமிழ் இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சுக்கு கொண்டுவந்த ஊவேசா-வின் மாணவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் கா.சு பிள்ளை.
1908-ம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கத்தில் புலவர் தேர்வில் வெற்றி பெற்றவர். 1913-ம் ஆண்டு ஆங்கிலத்திலும், 1914 ஆம் ஆண்டு தமிழிலும் எம்ஏ பட்டம் பெற்றவர். அதன் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் எம்.எல் பட்டம் பெற்றார். சைவ சித்தாந்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட பேராசிரியர் நீதிக் கட்சியிலும் முக்கியப் பங்காற்றினார்.
சர் பி.டி தியாகராயரின் பரிந்துரையில் சென்னை சட்டக் கல்லூரியில் முதல் விரிவுரையாளராக பணியாற்றினர். பின்னர் சட்டப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாகூரின் பெயரில் வழங்கப்படும் சட்ட வல்லுநர் விருதைப் பெற கொடுக்கப்படும் மூன்று தலைப்புகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனைப் பற்றி பன்னிரெண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும். கா.சு.பிள்ளை 1920ஆம் ஆண்டில் அப்போட்டியில் கலந்துகொண்டு குற்றங்களின் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் உரையாற்றி பரிசுத் தொகையான பதினாறாயிரம் ரூபாய் வென்றது இவரது சட்ட அறிவுக்கு சான்றாகும் .
சட்டக் கல்லூரிக்குப் பின் 1929-1930ஆம் ஆண்டு, 1940-1941ஆம் ஆண்டு, 1943-1944ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராக பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரின் மாணவர்களாக இருந்தவர்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும்.
1922-ம் ஆண்டில் சென்னை மாகாண அரசு அமைத்த நீதிக்கட்சி அரசு உருவாக்கிய கலைச் சொல்லாக்கக் குழுவின் உறுப்பினராக பங்காற்றினார்.
தமிழ் மீது ஆர்வமும், நீதிக்கட்சியின் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்ட இவர் தமிழ் இலக்கண இலக்கியம், வரலாறு, சைவ இலக்கியங்களைப் படித்து அவைகளை ஆய்வு செய்யத் தொடங்கினார்.
திருநெல்வேலி சைவர்களால் தனித்தமிழ் வளர்ச்சிக்காகவும், சைவ சிந்தாந்த பரப்புரைக்காகவும் உருவாக்கப்பட்ட திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1926-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை 1932-ம் ஆண்டு வரை வகித்தார்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1925-ல் ’சைவ சித்தாந்த சந்தானாச்சாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும்’ என்ற நூலை வெளியிட்டது. மேலும் சைவ சித்தாந்த விளக்கம், தாயுமானவ சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும், பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் ஆகியவை இவர் எழுதி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நுலாகும்.
மெய்கண்டார் இயற்றிய சைவ சிந்தாந்த சூத்திரமாகிய சிவஞான போதத்திற்கு பேருரை எழுதிய சிவஞான முனிவரின் வரலாறும் அவரின் நூலாராய்ச்சியும் பற்றி விரிவாக இவர் எழுதியுள்ளார்.
இவை மட்டுமில்லாமல் இந்து சமயங்களின் வரலாறு, பண்டார சரித்திரம், இலக்கிய வரலாறு இரண்டு தொகுதிகள், திருக்குறளுக்கு பொழிப்புரை, சிவஞான போகத்திற்கு பொழிப்புரை, ஆண்டாள் வரலாறு நூல் ஆராய்ச்சியும் இந்திய கதைகள் உலகப் பெருமக்கள் தொகுதி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழுக்கும் சைவத்திற்கும் தந்துள்ளார். இவற்றில் ஆறு ஆங்கில நூல்களும் அடக்கம்.
திருநெல்வேலியில் 1934-ம் ஆண்டு, முதல் முதலாகச் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்காக கடுமையாக உழைத்த பேராசிரியர் கா.சு.பிள்ளை, மாநாட்டின் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்தார். அம்மாநாட்டில் எடுக்கப் பெற்ற முடிவின்படி அதே ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார்.
அதன் தலைவராகப் பொறுப்பேற்று 1938ஆம் ஆண்டுவரை நான்கு ஆண்டுகள் திறம்படச் செயலாற்றி இருக்கிறார் கா.சு.பிள்ளை. திருநெல்வேலியில் 1934ஆம் ஆண்டு, முதல் முதலாகச் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது. மணிமாலை என்ற பெயரில் சொந்தமாக மாத இதழ் தொடங்கி அதில் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டார்.
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான முத்தையா செட்டியார் இவரது தமிழ் பணிகளைப் பாராட்டி செப்புப் பட்டயம் வழங்கினார். பல்கலைப் புலவர், பைந்தமிழ்ப் புலவர் உள்ளிட்டவை இவருக்கு அடைமொழியாக இருக்கிறது. சைவத்தமிழ் வளர்த்தவரும், சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டவருமான காசு பிள்ளையின் நினைவு நாள் இன்று.
வாத நோயினால் பாதிக்கப்பட்டு 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30-வது நாள் தனது பணிகளை நிறுத்திக்கொண்டார்.