சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு முறை 50 ரூபாய் விலையேற்றப்பட்டது. அதன் பின் 2021 ஜனவரியில் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
- ஆனால் பிப்ரவரியில் 4-ம் தேதியில் தற்போது வரை நான்கு முறை விலையேற்றம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது.
- பிப்ரவரி 16-ம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.
- பிப்ரவரி 25 தேதி மேலும் 25 ரூபாய் உயர்ந்தது.
- பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
மார்ச் மாதத்தில் மேலும் 25 ரூபாய் அதிர்த்திருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. டிசம்பரில் இருந்து தற்போது வரை 225 ரூபாய் விலை ஏற்றப்பட்டுள்ளது.
நான்கு மாநகரங்களில் சிலிண்டர் விலை நிலவரம்
டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்னையில் தற்போது ரூ.835 ஆக உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாநகரம் | விலை (ரூ) (பிப்ரவரி 25) | விலை (ரூ) (மார்ச் 1) |
டெல்லி | 794 | 819 |
கொல்கத்தா | 825 | 845 |
மும்பை | 794 | 819 |
சென்னை | 810 | 835 |
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்வு
மேலும் இதேபோன்று வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது. ஹைதராபாத்தில் 103 ரூபாய் விலை கூடி 1773-க்கு விற்கப்படுகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி 1,463.50-க்கு சென்னையில் விற்ற வணிகப் பயன்பாட்டிற்கன எரிவாயு சிலிண்டர் தற்போது 1730.92 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
2020 மே மாதம் 569.92 ரூபாய்க்கு விற்ற வீட்டு சிலிண்டர் பத்து மாதத்தில் 835 ரூபாய்க்கு வந்து நிற்கிறது. அதேபோல 2020 மே மாதத்தில் 1144.92 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த 19கிலோ வணிக சிலிண்டர் கிட்டத்தட்ட 600 ரூபாய் உயர்ந்து ரூபாய் 1730.92-க்கு விற்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கின் பொருளாதார இழப்பில் இருந்து எழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள் இன்னும் முழுமையாக மீண்டுவராத சூழலில், அன்றாட உணவுக்கான அத்தியாவசியப் பொருளான சிலிண்டர் விலை மூன்று மாதத்திற்குள் 225 ரூபாய் உயர்ந்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறது.