Ayothidasa pandithar

தமிழ் சிந்தனை மரபின் துவக்கம் அயோத்திதாசப் பண்டிதர்

தமிழர்களின் முற்போக்கு சிந்தனை மரபின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாள் இன்று

காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட அயோத்திதாசர் 1845 வருடம் மே-20 ல் சென்னையில் பிறந்தார். அப்பா பெயர் கந்தசாமி, அம்மா பெயர் தெரியவில்லை. பண்டிதருடைய தாத்தா பெயர் கந்தப்பன். பழைய ஓலைச் சுவடிகள், தமிழ் நூல்கள் சேகரித்து வைத்திருந்தார். மேலும் அவர் பாரம்பரிய சித்த மருத்துவராக இருந்தார்.

பண்டிதரின் காலத்தில் பவுத்த மதம் குறித்து நிறைய விவாதித்தனர். இவ்விவாதங்கள் பண்டிதரை இன்னொரு திசைக்கு இட்டுச்சென்றது

1881-ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தலித்துகளை ‘ஆதித்தமிழன்’ எனப் பதிவு செய்ய வேண்டுமென மக்களிடம் கோரிக்கை வைத்தார். நீண்ட காலத்திற்கு முன் நிலவிய பார்ப்பன எதிர்ப்பு மரபின் வாரிசுகள் தான் ஒடுக்கப்பட்ட தமிழர்கள்.  எனவே  ஆதித்தமிழரான இம்மண்ணின் மைந்தர்கள் ‘இந்துக்கள் அல்ல’ என்று பரப்புரை செய்தார்.

பல்வேறு சமுகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பண்டிதருக்கு, சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை துவக்கி நடத்திக்கொண்டிருக்கும் அருட்பணியாளர் ஜான் ரத்தினம் அவர்களோடு நட்பு ஏற்பட்டது. ஒத்தகருத்து கொண்ட இருவரும் சமூக மாற்றத்திற்கு சேர்ந்து பணியாற்றினார்கள். ஜான்ரத்தினம் 1882-ல் திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார்.

திராவிட பாண்டியன் (1885)

தாழ்த்தப்பட்ட மக்களை அரசியலில் விழிப்புணர்வு பெறவைக்க வேண்டுமென்பது அவசியமானதால் தலித் தலைவர்கள், அறிவாளிகள் அனைவரும் தீவிரமாக சமூகப் பணியாற்றினார்கள். 1882-லிருந்து ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி சமூகப் பணியாற்றி வந்த ஜான் ரத்தினம் அவர்களுடன், பண்டிதர் இணைந்து ‘திராவிட பாண்டியன்’என்னும் இதழை 1885-ல் தொடங்கினார். இந்த இதழுக்கு ஜான் ரத்தினம் அவர்களே ஆசிரியராக இருந்தார். 42 வயது நிரம்பிய ஜான் ரத்தினம் சென்னை வெஸ்லியன் மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 1885-ல் தொடங்கிய இதழ் 1887 வரை நடந்து வந்திருக்கிறது. 1887-ல் ஜான் ரத்தினம் அவர்கள் கௌரவ மாகாண நீதிபதியாகப் பதவியேற்றவுடன் இதழை நடத்த இயலவில்லை.

சாத்தியற்ற திராவிட மகா ஜனசபை

1890-ம் ஆண்டு பண்டிதரின் சமூக வாழ்வில் மிகுந்த பாய்ச்சல்கள் தொடங்கிய ஆண்டாகும். சுமார் நாற்பத்தைந்து வயது நிரம்பியவராக நிதானத்துடன் சமூகப் பணிகளுக்கான வழிகளைத் திட்டமிட்டுப் பரவச் செய்தார். அந்த ஆண்டு ‘திராவிட மகா ஜன சபை’பண்டிதரால் தொடங்கப்பட்டது. அதன் முதல் மாநாடு நீலகிரியில் 1-12-1891 அன்று நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு சபையின் தலைவர் அயோத்திதாசப் பண்டிதர் தலைமை தாங்கினார். தாழ்த்தப்பட்டோர் இந்தியாவில் நடத்திய முதல் மாநாடு இதுதான். இம்மாநாட்டில் விரிவான ஆய்வுகள் நடைபெற்றன; பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, காங்கிரசு இயக்கத்திற்கு 10 கோரிக்கைகளை அனுப்புவது என்பதும் ஒன்றாகும். காங்கிரசு இயக்கமானது இக்கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசிடம் விளக்கி அவைகளை நிறைவேற்றித் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அத்தீர்மானங்கள்:

பறையர் எனக் கூறுவது அவதூறு, குற்றம் என சட்டம் இயற்றவேண்டும்

கல்வி வசதி வேண்டும்

கல்வி உதவித் தொகை அளிக்கவேண்டும்

கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை

உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்

பொது இடங்களில் நுழைய உரிமை

அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி

கிராம முன்சீப் பதவி

கிராம புறம்போக்கு தரிசு நிலங்கள் வழங்கவேண்டும்

சிறைச்சாலை சட்டம் 464 பிரிவை நீக்குதல்

தமிழன் இதழ்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் மற்றும் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றிப் பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாகிய பண்டிதர் க.அயோத்திதாசரின் தமிழன் இதழ் 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை இராயப்பேட்டையிலிருந்து புதன்தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்”என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. இந்த இதழ் யாருக்காக வெளிவருகிறது எனவும் விளக்குகிறார். ”உயர் நிலையும், இடைநிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை , நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக, சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகளும் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்ததினை ஆதரிக்க கோருகிறோம்” என அறிவிக்கிறார். ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க” அச்சுக் கூடமும் பத்திரிகைப் பெயரும் மாறுதல் அடைந்தது”. 26.08.1908 என விளக்கமளித்து “ஒரு பைசா” என்ற பெயர் நீக்கப்பெற்றது. பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு , வானிலை அறிக்கைகள், வாசகர் கடிதம், அயல்நாட்டு செய்திகள், விளம்பரம், நூல் விமர்சனங்கள் போன்றவை பிரசுரமாகின.

தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடகா, கோலார் தங்கவயல், பர்மா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழன் இதழ் பரவியது. இந்து மதத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்தது.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத மத, பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், ஒடுக்கப்பட்டோர்  விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண்விடுதலை போன்ற கருத்துகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பாக வெளிவந்தது.

சாதியக் கட்டமைப்பு எத்தகைய பொருளாதார நலன்களை மேல் சாதியினருக்கு கொடுக்கிறது என்பதை அப்பொழுதே மிக நுட்பமாக பார்த்து விளக்கியவர் பண்டிதர்.

சாதி, மத, சாரம் பார்த்த அந்த பெரிய சாதியோர் என்போர் காலங்காலமாக மத வித்தைகளை விருத்தி செய்கின்றார்களேயன்றி பூமியை உழும் நவீன கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, போட்டோகிராப், டெலிகிராப், போனோகிராப், மோனோகிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அவர்கள் பராமரித்துவரும் பழைய சாதி, மத ஆதிக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புகளை அபகரிக்க முடிகிறது என்று உண்மைகளை மக்களிடம் பரப்பியவர்.

1911-ம் ஆண்டே  இந்தி மொழி, இந்துச்சாதி மதத்தோடு தொடர்பு உடையது. ஆகையால் அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது என்று எழுதினார்.

அதனால் தான்  பெங்களூரில்  நடைபெற்ற தமது 68-வது பிறந்த நாள் விழாவில்  பெரியார்  “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் ஜி.அப்பாதுரையார் அவர்களும் ஆவார்கள் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *