கொரோனாவுக்கான தடுப்பு மருந்தினை கண்டறிவதற்காக உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து கோவாக்சின் (Covaxin) என்ற பெயரில் கொரோனாவுக்கான ஒரு தடுப்பூசியினை உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பூசியினை அனைத்து சோதனை வழிமுறைகளையும் முடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட வேண்டும் என்று ICMR அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசிக்கான சோதனைகளை முடிக்க முயல்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது.
வழக்கமாக ஒரு தடுப்பூசி என்பது தயாரிப்பிற்கு பிறகு முதலில் விலங்குகளுக்கு அளித்து பரிசோதிக்கப்படும். மூன்று வகையான விலங்குகளுக்கு அளித்து பரிசோதிக்கப்படும். விலங்குகளுக்கான பரிசோதனை முடிந்து அதற்கான ஆராய்ச்சிகள் வெளியிட்டு விவாதிக்கப்பட்ட பின்னர் மனிதர்கள் மீதான பரிசோதனை துவங்கும். அது Phase 1, Phase 2, Phase 3 என்று மூன்று கட்டங்களாக நடைபெறும். மூன்று வகையான விலங்குகளின் மீது பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை.
மனிதர்களுக்கு அளித்து நடத்தப்படும் மூன்று கட்ட சோதனைகளில் Phase 1 எனும் முதல்கட்ட சோதனையானது மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான ஆட்களிடம் நடத்தப்படும். தடுப்பூசி அவர்களுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துகிறதா, பாதுகாப்பாக இருக்கிறதா என்பதே இந்த கட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Phase 2 எனும் இரண்டாம் கட்ட சோதனையில் அதிக நபர்களுக்கு அளித்து பரிசோதிக்கப்படும். இப்பரிசோதனையில்தான் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத் தன்மை குறித்து சோதிக்கப்படும்.
Phase 3 எனும் மூன்றாம் கட்ட சோதனை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்கள் மீது சோதிக்கப்படும். தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் இந்த சோதனையின் போதுதான் உறுதி செய்யப்படும்.
இந்த மூன்று கட்ட சோதனைகளையும் முடிப்பதற்கான காலம் என்பது பல மாதங்கள் பிடிக்கும் செயல்முறையாகும். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இந்த மூன்று கட்ட பரிசோதனைகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற ICMR-ன் அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. நாம் சோதிக்கப் போவது விலங்குகளை அல்ல, மனிதர்களை. இதில் ஏதேனும் சிறு தவறு ஏற்பட்டால் கூட பெருமளவிலான பாதிப்பு ஏற்படும். தடுப்பூசி விடயத்தில் இப்படி அவசரகதிக்கு தள்ளுவதென்பது அறிவியலுக்கு எதிரான செயலாகும் என்று மருத்துவ நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தேதி குறிப்பிட்டு ஒரு தடுப்பூசியின் பரிசோதனைகளை முடிக்க சொல்வது வரலாற்றில் எங்குமே நிகழாத விடயம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தடுப்பூசியினை சோதனை முடித்து வெளியிடச் சொல்வதும் உலகத்தில் வேறெங்கும் நடக்காத ஒன்றாகும்.
இச்சோதனைகளை மேற்கொள்ள இந்தியா முழுவதிலுமிருந்து 12 மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
- AIIMS டெல்லி,
- AIIMS பாட்னா,
- ஹைதராபாத் நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம்,
- விசாகப்பட்டினம் கிங் ஜார்ஜ் மருத்துவமனை,
- தமிழ்நாட்டின் சென்னை காட்டாங்குளத்தூர் SRM மருத்துவமனை,
- பெலகாவி ஜீவன் ரேகா மருத்துவமனை,
- ரோஹ்தாக் PGIMS,
- நாக்பூர் கில்லூர்கர் பல்நோக்கு மருத்துவமனை,
- கோரக்பூர் ரானா மருத்துவமனை,
- கான்பூர் பிரகார் மருத்துவமனை,
- புவனேஸ்வர் SUM மருத்துவமனை,
- கோவா ரெட்கர் மருத்துவமனை
ஆகிய மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் முறையான மருத்துவ ஆராய்ச்சி நடைபெறாத நிறுவனங்களாகும். ஒரு தடுப்பூசியினை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கான எந்த முன் அனுபவமும் இல்லாத இடங்களாக அவற்றில் பல இருக்கின்றன.
மருத்துவப் பரிசோதனைகளை நடத்த வேண்டுமென்றால் மருத்துவ சுயாதீன நெறிமுறைக் ஆணையங்களிடம் (independent ethics committees) இருந்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். இந்த 12 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் இன்னும் அந்த ஒப்புதலைப் பெறவில்லை.
ஆனால் ஜூலை 7-ம் தேதிக்குள்ளாக தடுப்பூசியை கொடுத்து சோதிக்கப்படும் தன்னார்வலர்களின் பட்டியலையும் அவசரகதியில் தயாரிக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த ஒப்புதல் பெறாத 7 நிறுவனங்களில் ஒன்றான புவனேஸ்வர் SUM மருத்துவமனையின் மருத்துவ ஆய்வாளர் வெங்கட ராவ் பிரபல இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நெறிமுறை ஆணையங்களின் ஒப்புதல் இல்லாமல், யார் சொன்னாலும் இந்த சோதனை நடப்பதற்கு தன்னால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதை சொல்வதால் நான் பிடிவாதமாக இருக்கிறேன் என்று அர்த்தம் கொள்ள முடியாது. நாம் கொள்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். முதலும் முக்கியமான கொள்கை என்பது எவருக்கும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு மருத்துவமனையான கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் முதன்மை ஆய்வாளர் வாசுதேவ் தெரிவிக்கையில், நெறிமுறை ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் வந்தால் நாங்கள் இந்த சோதனையில் பங்கேற்போம். இல்லையென்றால் எங்களால் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் Phase 1 முதல் கட்ட சோதனையைக் கூட முடிக்க முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கையில் எதற்காக ICMR இப்படி அவசரப்படுத்துகிறது என்பது அனைவருக்கும் புரியாதததாக இருக்கிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியாவில் ஒரு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் போது, அதில் ஏதேனும் சிறிய பிரச்சினை இருந்தால் கூட பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.
அறிவியலில் அரசியல் செய்ய முயல்வது மிக மோசமான நடைமுறையாகும். ICMR-ன் இப்படிப்பட்ட அறிவிப்புக்குப் பின்னணியில் பாஜக அரசின் அழுத்தம் இருக்கும் என அறியப்படுகிறது. ராணுவம், விஞ்ஞானம், மருத்துவம் என அனைத்தையும் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகிற வேலையினை பாஜகவும், பிரதமர் மோடியும் செய்து வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நரேந்திர மோடி அவர்கள் தனது நாயக பிம்பத்தினை பெரிதுபடுத்திக் கொள்வதற்காக மருத்துவர்களை அவசர கதிக்கு தள்ளுவது மிக ஆபத்தானதாகும்.
பல மாதக்கணக்கிலும், வருட அளவிலும் நடக்க வேண்டிய தடுப்பூசி சோதனைகளை, வெறும் ஒன்றரை மாத இடைவெளியில் சுதந்திர தினத்தன்று தேதி அறிவித்து வெளியிடுவதற்கு கொரோனா தடுப்பூசி என்ன தேசபக்தி திரைப்படமா?
மக்களின் பாதுகாப்பில் அரசு அரசியல் செய்யக் கூடாது.