ராஜஸ்தானில் காங்கிரசில் ஏற்பட்டிருக்கும் பிளவு அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுமோ என்ற நிலை எழுந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்ததைப் போல பாஜக-வானது ஒன்றிய அரசில் இருக்கும் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்-க்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்-க்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, சச்சின் பைலட் ஆட்சியைக் கலைக்கும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கட்சி வாரியாக எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை
ராஜஸ்தான் மாநில சட்டமன்றமானது மொத்தம் 200 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டது. அதில் காங்கிரஸ் கட்சி 107 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ளது. அவர்களின் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 எம்.எல்.ஏ-க்களையும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 எம்.எல்.ஏ-க்களையும், ராஷ்டிரிய ஜனதா தளம் 1 எம்.எல்.ஏ-வையும், சுயேட்சைகளில் 10 எம்.எல்.ஏக்களையும் கொண்டுள்ளனர். மொத்தம் காங்கிரஸ் கூட்டணியில் 122 எம்.எல்.ஏ-க்கள் தற்போதைக்கு இருக்கின்றனர்.
பாஜக சார்பாக 72 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அவர்களின் கூட்டணியில் ராஷ்டிரிய லோக்தாந்திர்க் கட்சியின் 3 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். பாஜக கூட்டணியில் மொத்தம் 75 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.
இது தவிர 3 சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் மீது கெலாட் அரசினை கவிழ்ப்பதற்கு ஏலம் நடத்தியதாக ஊழல் எதிர்ப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
கட்சி | எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை |
காங்கிரஸ் + கூட்டணி | 122 |
பாஜக + கூட்டணி | 75 |
சுயேட்சைகள் | 3 |
பாஜக ஆட்சிக் கவிழ்ப்பு செய்ய முயல்வதாக குற்றச்சாட்டு
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பாஜக பெரும் அளவிலான பணத்தைக் கொடுத்து தங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நேரடியாக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் ஆட்சியமைப்பதற்கு 101 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏ-க்கள் சச்சின் பைலட்டின் கைவசம் இருப்பதாகவும், அவர்கள் டெல்லியில் உள்ள தனியார் விடுதி ஒன்றினுள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 3 சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் இவர்கள் பக்கம் இருக்கின்றனர். மொத்தம் 25 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தற்போது சச்சின் பைலட்டின் கைவசம் இருக்கிறது.
இந்த 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை வாபஸ் பெறும் பட்சத்திலோ அல்லது ராஜினாமா செய்யும் பட்சத்திலோ மொத்த எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 200-லிருந்து 175-ஆக குறையும். இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எண்ணிக்கை என்பது 88 ஆக மாறும். பாஜக-விடம் 75 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால் சுயேட்சைகளின் ஆதரவைப் பெறுவதற்கான போட்டி அதிகரிக்கும். பைலட் பேசும்போது தனக்கு 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தானின் ஆட்சியில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்து கமல்நாத்தின் ஆட்சியைக் கவிழ்க்க வேலை செய்த, ஜோதிராதித்யா சிந்தியா-வினை சச்சின் பைலட் டெல்லியில் சந்தித்து ஆலோசனைகள் நடத்தி உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.
வருமான வரித்துறையினரின் சோதனை
முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடைபெற்ற ராஜஸ்தானின் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில், ஜனநாயகத்தை ஒழிக்கும் பாஜக-வின் செயல், 8 கோடி ராஜஸ்தான் மக்களின் ஆணையை அவமதிக்கும் செயலாகும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“பாஜகவினரால் ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டால், அவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் பிற ஏஜென்சிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். வரலாறு அவர்களை மன்னிக்காது” என்று அசோக் கெலாட் இக்கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாஜக எவ்வளவு முயன்றாலும் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை கூட்டிய அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கூட்டத்தினை தனது வீட்டில் உடனடியாக கூட்டியுள்ளார். அதில் 107 எம்.எல்.ஏ-க்கள் வரை பங்கேற்றிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஃபேர்மாண்ட் விடுதியில் தங்க வைப்பதற்காக பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஒரு பக்கம் கொரோனா பேரிடரை சமாளிக்க இயலாமல் மக்கள் திணறி வருகிறார்கள். ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழந்து நிற்கிறார்கள். கொரோனா பேரிடர் பரவத் தொடங்கிய காலத்தில் பாஜக மத்தியப் பிரதேசத்தில் எம்.எல்.ஏ-க்களை கைப்பற்றி ஆட்சிக் கவிழ்ப்பினை நடத்திக் கொண்டிருந்தது. பின்னர் மகாராஷ்டிராவில் அதே போன்றதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ராஜஸ்தானில் ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
எப்போது பாஜக மக்களைப் பற்றி சிந்திக்கப் போகிறது?
3 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு எம்.எல்.ஏ-க்களை வைத்து பேரம் நடத்தும் ஆட்டம் ஆரம்பித்தது. ஓ.பன்னீர்செல்வம் மூலமாக துவங்கிய அந்த ஆட்டத்தில் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து கொண்டார். இந்த எல்லா ஆட்டத்திற்கும் பின்னணியில் பாஜக இருப்பதாக அனைத்து எதிர்கட்சிகளாலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பாஜக தமிழ்நாட்டில் துவங்கி வைத்த எம்.எல்.ஏ-க்கள் மீதான குதிரை பேரமும், விடுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் தனிமைப்படுத்தலும் நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு நீண்டு கொண்டே இருக்கிறது.
ஜனநாயக ரீதியாக வெற்றி பெறும் அரசுகளை மறைமுகமாக கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்ற முயல்வது ஜனநாயக விரோதமல்லவா! எது எப்படியிருந்தாலும், இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மோசமான எதிர்காலம் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.