காலை செய்தித் தொகுப்பு

காலை செய்தித் தொகுப்பு: ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி, நீதிபதி கர்ணன் கைது, முதல் விக்கெட் எடுத்த நடராஜன் உள்ளிட்ட 10 செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நியாயமானதுதான் என்று உத்தரவிட்டு வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. 

இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை கடந்த ஆகஸ்ட் 31-ல் விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

2. நீதிபதி கர்ணன் கைது

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன்,உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதித்து பேசியதாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு கர்ணன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நீதிபதி கர்ணன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. தற்போது மீண்டும் அவரை கைது செய்துள்ளனர்.

3. நீங்கள் சாப்பிடுவது  நல்ல தேனா?

முக்கிய பிராண்டுகளால் விற்பனை செய்யப்படும் தேன் அசல் தூய்மைக்கான பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) கண்டறிந்துள்ளது.

தேன் சர்க்கரையுடன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. சி.எஸ்.இ உணவு ஆய்வாளர்கள் டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 13 பிராண்டுகளின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேனைத் தேர்ந்தெடுத்து, இந்திய உணவு ஒழுங்குமுறைச் சட்டங்களின் கீழ் வருவதற்கான அங்கீகாரம் பெறுவதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தினர்.

Nuclear Magnetic Resonance (மூலக்கூறு மட்டத்தில் ஒரு பொருளின் கலவையை அறிய முடியும் சோதனை) சோதனை ஜெர்மனியில் ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டது, 13 பிராண்டுகளில், மூன்று பிராண்டுகள் மட்டுமே இதில் தேர்வாகியுள்ளது. என்.எம்.ஆர் சோதனை இந்திய சட்டத்துக்கு தேவையில்லை, ஆனால் தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இது தேவைப்படுகிறது.

4. மாற்று திறனாளிகளுக்கு வாழ்த்து – கே.பாலகிருஷ்ணன்

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்ணியம் மற்றும் சமத்துவ வாழ்க்கைக்காக தேடலுடன் வாழும் லட்சக்கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்..

இவர்களுக்குப் பாதுகாப்பாக மொத்த சமூகமும் மத்திய, மாநில அரசுகளும் கடமையாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால் நமது அரசுகள் இக்கடமையினை தட்டிக்கழித்து வருவது வேதனையளிப்பதாகும். வேலைசெய்ய தகுதி படைத்த மாற்றுத்திறனாளிகளை 63.7 சதமானம் பேர் வேலையின்றி வாடுகின்றனர். எஞ்சியவர்களும் அத்துக்கூலிகளாகவும் அன்றாடங்காய்ச்சிகளாகவும் உள்ளனர். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரம் சொல்லி மாளாது. இயல்பாகவே நோய் எதிர்ப்புத்திறன் குறைவு உள்ள மாற்றுத் திறனாளிகள் எளிதில் கொரோனா தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதால் இவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகள் வழங்கிட வேண்டும் என்ற ஐ.நா பொதுச்செயலாளரின் வேண்டுகோளைக் கூட மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. வாழ வழியின்றி மாற்றுத் திறனாளிகளும், அவர்தம் பெற்றோர்களும் தற்கொலையில் மடிந்து போன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கொரோனா காலத்தில் பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளாக வாரி வழங்கிய பாஜக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வெறுமனே ரூ.1,000/- வழங்குவதாக அறிவித்து அதையும் சுமார் 3.5 சதவிகிதத்தினருக்கு மட்டும் வழங்கி விட்டு, கோடிக்கணக்கான மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றியுள்ளது.

அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதால் சமூக நீதி அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய 4 சதவிகித பணிவாய்ப்புகள் தற்போது குறைந்து வருகிறது. தனியார் துறை பணிகளில் குறைந்தபட்சம் 5 சதவிகித பணிகளை வழங்க வேண்டுமென்ற மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட சரத்துக்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தாத நிலையில் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

5. அதிமுக கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தலித்களுக்கு எதிராக செயல்படுகிறது – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி கொஞ்சநஞ்சமல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான நிதியைக் குறைத்து பல்லாயிரக்கணக்கான தலித் மாணவர்களின் உயர்கல்வியைப் பறித்தது; 

அமைச்சரவையிலும் நிர்வாகத்திலும் ஆதிதிராவிடர்களைத் தொடர்ந்து புறக்கணித்துவருவது;  தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமலும், ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்தாமலும் வேடிக்கை பார்ப்பது; சென்னை உயர்நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டும் மாநில எஸ்.சி ஆணையத்தை இதுவரை அமைக்காமல் இழுத்தடிப்பது;  பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளிலும் பஞ்சாயத்து செயலர் பதவிகளிலும் எஸ்சி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது; அதனால் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் செயல்படவிடாது  முடக்கப்படுவதற்கு மறைமுகமாகத் துணைபோவது; 

மனுஸ்மிருதியில் இருப்பதை மேற்கோள்காட்டியதற்காக எம் மீது அவசர அவசரமாக  பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது;  ஆனால் நூற்றுக்கணக்கில் புகார் கொடுத்தும் கூட வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைப் பாதுகாப்பது; அரசுப்பணிகளில் ஆதிதிராவிட மக்களுக்கான இடங்களை சரிவர நிரப்பாமல் வஞ்சிப்பது;  ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டுவது ; பஞ்சமி நிலம் இரண்டரை இலட்சம் ஏக்கர் கண்டறியப்பட்ட பிறகும்கூட அதை உரியவர்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்துவது – போன்ற அதிமுக அரசு தொடர்ந்து இழைத்துவரும் அநீதிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். என்று கூறியுள்ளார்

மேலும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, தங்களுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையே இல்லை என்று வெளிப்படையாக செயல்படுவது போல, ஆதிதிராவிட மக்களின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என அதிமுக முடிவெடுத்து விட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

6. ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேலும் அவகாசம்

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் விசாரணை முடிக்க தாமதமானது குறித்து தில்லி நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கதுறைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது.

7. மூன்று விவசாய  சட்டங்களை ரத்து செய்வதற்காக மையத்தில் நரேந்திர மோடி அரசு பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று விவசாயிகள்  கோரிக்கை

டெல்லி-ஹரியானா எல்லையில் சிங்குவில் விவசாயிகளின் பிரதிநிதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

அப்பொழுது “சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாத வரை, நாங்கள் டெல்லியின் எல்லைகளில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம், நாங்கள் டெல்லி நகரத்தை மூச்சுத் திணறடிப்போம்” என்று  விவசாயிகள் போராட்ட குழுவில் உள்ள கிராண்டிகாரி கிசான் யூனியனின் தலைவர் தர்ஷன் பால் கூறியுள்ளார்.

“இந்த சட்டங்கள் குறித்து அரசாங்கத்துடன் எந்தவொரு விவாதத்தையும் நாங்கள் விரும்பவில்லை. சட்டங்களுக்கான எங்கள் ஆட்சேபனைகளை விவரிக்கும் பத்து பக்க ஆவணத்தை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். சட்டங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.” என்றும் கூறினார்.

தொடர்ச்சியாக “விவசாயிகள் இயக்கத்தை பிளவுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் நாங்கள் அதை நடக்க விடமாட்டோம். சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் கூட்டு பதாகையின் கீழ் போராட நாங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளோம். இது பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குமானது என்றும் கூறினார்.

8. ஒவ்வொரு வழக்கும் வித்தியாசமானது – தலைமை நீதிபதி

ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் அளித்த மனுவுடன்  ஒப்பிட முடியாது என்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே புதன்கிழமை தெரிவித்தார். மேலும், “ஒவ்வொரு வழக்கும் வித்தியாசமானது” என்று தெரிவித்துள்ளார்

அக்டோபர் மாதம் உத்திரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் பாலியல் கொலை வழக்கைப் பற்றி செய்தி சேகரிக்க கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கப்பன் சென்ற போது உத்திரப்பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் உத்திரப்பிரதேச காவல்துறை அவர்மீதும் உடன் சென்றவர்கள் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. 

கப்பனின் தடுப்புக்காவலை எதிர்த்து கேரளவில் ஒரு பத்திரிக்கையாளர் சங்கம்  தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்தபோது இதனை தெரிவித்துள்ளனர்.

மனுதாரர் ஏன் அலகாபாத் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தபடி செல்லவில்லை என்று தலைமை நீதிபதி போப்டே கேட்டபோது,

மனு தாரரின் வழக்கரிஞர் கபில் சிபல், “அர்னாப் கோஸ்வாமியின் வழக்கில், கீழ் நீதிமன்றத்தில் ஜாமீன் நிலுவையில் உள்ளபோது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கோஸ்வாமிக்கு சிறப்பு அமர்வு நடத்தி நவம்பர் 11 அன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது என்று சுட்டிகாட்டியபோது, தலைமை நீதிபதி ஓவ்வொரு வழக்கும் வேறுபாடானது என்று கூறியுள்ளார்.

9. தமிழகத்தில் கொரோனா

நேற்று டிசம்பர் 2 அன்று தமிழகத்தில்,

புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் – 1428

சென்னையில் புதிதாகத் தொற்று  கண்டறியப்பட்டவர்கள் – 397 பேர்

தமிழகத்தில் கொரோனா மரணம் – 11

தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்கள் – 10,999

நேற்று குணமடைந்தவர்கள் – 1398

10. தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தங்வேல் இன்று விளையாடினார். 303 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மார்னஸ் லபுஸ்சேன், நடராஜன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இது நடராஜனின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும்.

மேலும் கடந்த ஆறு ஒருநாள் போட்டிகளில் பவர் பிளே-வில் இந்தியாவின் சார்பாக எந்த விக்கட்டும் எடுக்கப்படாத நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 48-வது ஓவரில் ஆஸ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் தனது முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

வீட்டில் தொலைக்காட்சியில் மகன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நடராஜனின் அம்மா தொலைக்காட்சியில் மகனுக்கு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *