திரு.வி.கலியாணசுந்தரனார்

தொழிலாளர் தோழன் தமிழ்த் தென்றல் திரு.வி.க பிறந்த நாள் இன்று

தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

தமிழ்நாட்டிலே, நல்ல தமிழிலே மேடையில் பேசமுடியும் என்பதை முதன் முதல் பேசிக் காட்டியவர் திரு.வி.க தான் என்பார் அண்ணா.

திருவாரூரை பூர்விகமாகக் கொண்ட  விருத்தாசலம் – சின்னம்மாள் தம்பதியினர் இன்று தண்டலம் என்று அறியப்படுகிற துள்ளல் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 26 ஆகஸ்ட் 1883 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

ஆரியன் பிரைமரி பள்ளி, வெஸ்லி கல்வி நிலையம் ஆகியவற்றில் பள்ளிக் கல்வியும், கதிரைவேற்பிள்ளை தணிகாசல முதலியார் அவர்களிடம் தமிழும்  கற்றறிந்தார்.

அன்னிபெசன்ட் அம்மையாரின் வழியாக அரசியல் ஈடுபாட்டிற்குள் வந்தவர். பிரம்மஞான சபையின் கருத்துகளையும் முழுமையாக கற்றறிந்தார்.      சச்சிதானந்தம் பிள்ளையிடம் தத்துவமும், சிங்காரவேலர் தொடர்பாக அறிவியல் ததத்துவங்களையும் கற்றார். விபின் சந்திர பால் அவர்களால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். ரவுலட் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் காந்தி சென்னையில் கலந்து கொண்டபோது, காந்தியின் உரைகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

வெஸ்லியின் பள்ளியில் ஆசிரியராகவும், வெஸ்லியின் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றிய திரு.வி.க, 1917-ல் விடுதலைப் போராட்டத்திற்காக தனது வேலையை தூக்கி எறிந்தார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக் கட்சியில் முக்கியப் பொறுப்பாளராக இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் திரு.வி.க செயல்பட்டார்.

தேசபக்தன், நவசக்தி உள்ளிட்ட இதழ்களை நடத்திய திரு.வி.க அதன் வழியாக சுதந்திர தாகத்தையும், தொழிலாளர் ஒற்றுமையையும் வளர்த்தெடுத்தார். இவரது தேசபக்தன் இதழ் கட்டுரைகளுக்காக பிரிட்டிஷ் அரசு இதழையே தடை செய்தது. 

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கிய ஐவரில் ஒருவராகவும், அதன் துணைத் தலைவராகவும் விளங்கியவர்.

1919 முதல் 1922 வரை எட்டு மணிநேர வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் வேண்டி நடந்த பின்னி மில் வேலை நிறுத்தப் போராட்டம்தான் முதல் மாபெரும் தொழிலாளர் போராட்டமாகும். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பிரிட்டிஷ் அரசு இவரை நாடு கடத்த திட்டமிட்டது.  

பெரியார் காங்கிரசில் இருந்து விலகக் காரணமான வகுப்புவாரி உரிமைத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட 1925-ம் ஆண்டின் காஞ்சிபுரம் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய திருவிக, 1926-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேறினார். சன்மார்க்க தொண்டு செய்ய இருப்பதாக சொல்லி விலகிய திரு.வி.க சம உரிமையும், வகுப்பு சுதந்திமும், சுயமரியாதையும் இல்லாத நாட்டிற்கு காங்கிரஸ் போன்ற அமைப்பு இருப்பது அறிவுடமையாகாது என்றார். 

சுதந்திர இந்தியாவிலும் 1947-ல் தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கெடுத்ததிற்காக காங்கிரஸ் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அன்னிபெசன்ட், காந்தி, திலகர் வழிவந்து தீவிர இந்திய தேசியவாதியாக இருந்த திரு.வி.க மறைமலை அடிகள் அவர்களின் மாணவராகவும் தமிழ், தமிழ்நாடு என்று சிந்திப்பவராகவும் இருந்தார். அதுதான் அவரை இந்திய சுதந்திரத்திற்குப் பின் மொழியுரிமை பேசுபவராகவும், திராவிட நாடு விடுதலையை விரும்புபவராகவும் மாற்றியது.

தனது கருத்து மாற்றத்தை “பரத கண்டம் பேசிய நான் திராவிட நாடு கேட்பதால், எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று சிலர் கேட்பதாக”  திரு.வி.க பொதுக்கூட்ட மேடைகளிலேயே பதிவு செய்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட தியாகியாக தொழிற்சங்க தலைவராக தமிழ் அறிஞராக அறியப்பட்ட திரு.வி.க 17 ஜூலை 1948 அன்று சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்தும், அந்நியமொழியின் ஆதிக்கம்  குறித்தும் பேசிய போது,

”எந்த ஒரு நாட்டு மக்களின் சிறப்புக்கும் அடிப்படைத் தத்துவமாயிருப்பது அந்நாட்டினரின் தாய்மொழி. அத்தாய்மொழி அம்மக்களின் ரத்தத்திலுள்ள உயிர்ப்பினும் உயிரினும் அதிகம் போற்றிக் காப்பாற்றப்படவேண்டியது. அத்தகைய தாய்மொழிக்குத் தீங்கு செய்யத்தான் ஆட்சியாளர்கள் அழிவு வேலை செய்கிறார்கள் என்று முன்னர்க் கூறினேன். இதைத் தடுத்து நம் தாய் மொழியைக் காப்பாற்றி ஆக்க வேலை செய்யத்தான் நாம் இன்று இங்கு கூடியுள்ளோம்” என்றும் பேசினார்.

தன் வாழ்வின் இறுதி நாட்களில் திராவிடர் கழகம் மற்றும் திமுக மாநாடுகளில் பொதுக்கூட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தவர். 

”இந்தியாவில் இருப்பது ஆரியம், திராவிடம் என்ற இரு கலாச்சாரங்கள் மட்டுமே. திராவிட நாடு வளமானது, திராவிட நாடு பிரிந்தால் தான் தொழிலாளர் வாழ்வு வளம் பெறும். திராவிடர் கழகம் அறப்புரட்சியின் மூலம் வெற்றி பெறும்போதுதான் தொழிலாளர் வாழ்வு மலரும். ஆரிய மாயை அகற்றி திராவிடத்தில் மறுபடியும் புத்துணர்ச்சியை உண்டாக்க பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்துக்கு நீங்கள் யாவரும், தன்மான தமிழ்மகன் ஒவ்வொருவனும் உரிமை கொண்ட தொழிலாளர் தோழனும் உதவி புரிதல் வேண்டாமா?” என்று கேட்டவர் திரு.வி.க.

சமயம், அரசியல், இலக்கியம், கவிதைகள், வரலாறு, தன் வரலாறு என்று 56 நூல்களை தமிழுக்கு தந்துள்ளார்.

17 செப்டம்பர் 1953 அன்று திரு.வி.க இறந்தபோது, அவரது உடல் அவரின் விருப்பப்படி, சென்னை சூளை பகுதி தொழிலாளர்களிடம் ஒப்படைக்கபட்டு அவர்களின் தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *