நீட் தேர்வு முதலமைச்சர்கள் கூட்டம்

நீட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் செல்வோம்-முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி

நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளி வைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து இணையதள ஆலோசனைக் கூட்டத்தினை இன்று நடத்தினார். அதில் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் மம்தா பானர்ஜி, மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான சூழல் உருவாகும் வரையில் தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என்றும், அதற்காக நாம் அனைவரும் இணைந்து உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம் என்றும் பேசினார்.

இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜனநாயகத்தில், தான் இதுவரை பார்த்ததில்லை என்றும், நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றும், மாணவர்களுக்காக நாம் பேச வேண்டும் என்றும் கூறினார். மேலும் கூட்டுறவு கூட்டாட்சி (Cooperative Fedaralism) என்ற பெயரில் மாநில அரசுகள் மத்திய அரசினால் தரைமட்டமாக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், தலைவர்கள் நாம் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக சண்டையிட வேண்டும் என்றும், நாம் மத்திய அரசைக் கண்டு அச்சப்படப் போகிறோமா அல்லது அவர்களுடன் சண்டையிடப் போகிறோமா என்பதை முடிவு செய்தாக வேண்டும் என்றும் அழுத்தமாகப் பேசினார். மத்தியில் ஆள்வதற்கு பாஜக-வை எந்த மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ அவர்கள்தான் நம்மையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பாஜக எது செய்தாலும் அது புண்ணியம், நாம் எது செய்தாலும் பாவம் என்ற நிலைதான் இங்கிருப்பதாக தெரிவித்தார். மேலும் எல்லா அதிகாரங்களும் ஒரு கையில் குவியுமென்றால், மாநில அரசின் பயன் என்ன? அரசியலமைப்பு சாசனத்தையும், கூட்டாட்சி அமைப்பையும் மதிக்காவிட்டால் ஜனநாயகத்திற்கான இடம் எங்கே இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

தேர்வை நடத்துவோம் என கூறியிருக்கும் ஒன்றிய அரசு

தேசிய தேர்வு முகமை (NTA) ஏற்கனவே தேர்வினை தள்ளிவைக்கும் முடிவிற்கு இடமில்லை என்று தெரிவித்திருந்தது. JEE நுழைவுத் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தேர்வினை நடத்துவதற்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் வெளியிட்டுள்ளது. 

மேலும் ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் அதே கருத்தினையே தெரிவித்துள்ளார். பெற்றோர்களிடமிருந்தும், மாணவர்களிடமிருந்தும் தேர்வை நடத்தச் சொல்லி தங்களுக்கு அழுத்தம் வருவதாக தூர்தர்சன் செய்திகள் தொலைக்காட்சிக்கு அவர் ஆகஸ்ட் 25 அன்று பேட்டி அளித்திருந்தார். 

ஒரு புள்ளியில் இணையும் எதிர்க்கட்சிகளின் குரல்

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்திருக்கும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் இவற்றிற்கெல்லாம் மேலாக நீட் தேர்வையே ரத்து செய்து விட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரியிருக்கின்றன. நீட் தேர்வு மாநில அதிகாரம் சார்ந்த உரிமை பிரச்சினையாகவும் தமிழ்நாட்டில் பார்க்கப்படுகிறது. 

பஞ்சாம் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் மம்தா பானர்ஜியின் பரிந்துரையினை வரவேற்றுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு தேர்வுகளை ஒத்திவைக்க கடிதம் எழுதியுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் இதே கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ட்வீட்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம்

கிரேட்டா துன்பர்க்

உலக அளவில் சுற்றுச் சூழலுக்காக குரல் கொடுக்கும் கிரெட்டா துன்பர்க், நீட் மற்றும் JEE தேர்வுகளை கொரோனா சூழலில் நடத்தக் கூடாது என்றும் மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீட் மற்றும் JEE தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரும் ஹேஷ்டேக்-களும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

ஒருபுறம் நீட் தேர்வினை ஒத்தி வைக்கக் கோரும் கோரிக்கையும், இன்னொரு புறம் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரும் கோரிக்கையும் வலுவாக எழுந்து வருகின்றன. ஆனால் தேர்வை நடத்துவோம் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது பல்வேறு விமர்சனங்களையும், அதிருப்திகளையும் எழுப்பியிருக்கிறது. 

ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE நுழைவுத் தேர்விற்கு 8.58 லட்சம் மாணவர்களும், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான NEET நுழைவுத் தேர்விற்கு 15.97 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையின், இறப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கும் சூழலில், இவ்வளவு எண்ணிக்கையிலான மாணவர்களை தேர்வுக்கு அழைப்பது என்பது ஆபத்தான முயற்சியாகவே இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *